மாற்கு எழுதியது 2:1-28

  • பக்கவாத நோயாளியைக் குணமாக்குகிறார் (1-12)

  • லேவியைக் கூப்பிடுகிறார் (13-17)

  • விரதம் பற்றிய கேள்வி (18-22)

  • இயேசு ‘ஓய்வுநாளுக்கு எஜமான்’ (23-28)

2  சில நாட்கள் கழித்து, அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறார்+ என்ற செய்தி எல்லாருக்கும் பரவியது.  அதனால், நிறைய பேர் அங்கே வந்தார்கள்; வாசல்கதவின் பக்கத்தில்கூட நிற்க முடியாதளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்களிடம் கடவுளுடைய வார்த்தையை அவர் பேச ஆரம்பித்தார்.+  அப்போது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனை நான்கு பேர் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.+  கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவுக்குப் பக்கத்தில் அவனைக் கொண்டுபோக முடியவில்லை. அதனால், அவர் இருந்த இடத்துக்கு மேலே கூரையில் ஒரு திறப்பு உண்டாக்கி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனைப் படுக்கையோடு கீழே இறக்கினார்கள்.  அவர்களுடைய விசுவாசத்தை இயேசு பார்த்து,+ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”+ என்று சொன்னார்.  அங்கே உட்கார்ந்திருந்த வேத அறிஞர்கள் சிலர்,  “இந்த மனுஷன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் தெய்வ நிந்தனை செய்கிறான். கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?”+ என்று தங்கள் இதயங்களில் யோசித்துக்கொண்டிருந்தார்கள்.+  அவர்கள் அப்படி யோசித்துக்கொண்டிருந்ததை இயேசு உடனடியாகப் புரிந்துகொண்டு, “உங்கள் இதயத்தில் ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்?+  இந்தப் பக்கவாத நோயாளியிடம், ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன’ என்று சொல்வது சுலபமா, அல்லது ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வது சுலபமா? 10  ஆனாலும், பூமியில் பாவங்களை மன்னிக்கிற அதிகாரம்+ மனிதகுமாரனுக்கு+ இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக—” என்று சொல்லிவிட்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், 11  “நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ” என்றார். 12  உடனடியாக அவன் எழுந்து, தன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் முன்னால் வெளியே நடந்துபோனான்; அதைப் பார்த்த எல்லாரும் மிகவும் ஆச்சரியப்பட்டு, “இந்த மாதிரி ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை”+ என்று சொல்லி கடவுளை மகிமைப்படுத்தினார்கள். 13  அவர் மறுபடியும் புறப்பட்டு கடலோரமாகப் போனார்; மக்கள் எல்லாரும் அவரிடம் வந்துகொண்டே இருந்தார்கள்; அப்போது, அவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்தார். 14  பின்பு, அந்த வழியாக அவர் போய்க்கொண்டிருந்தபோது, வரி வசூலிக்கும் அலுவலகத்தில் அல்பேயுவின் மகன் லேவி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்று சொன்னார். உடனே லேவி எழுந்து அவரைப் பின்பற்றிப் போனார்.+ 15  பிற்பாடு, லேவியின் வீட்டில் இயேசு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, வரி வசூலிப்பவர்கள் பலரும், பாவிகள் பலரும் அவரோடும் அவருடைய சீஷர்களோடும் சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களில் நிறைய பேர் அவரைப் பின்பற்றினார்கள்.+ 16  ஆனால், அவர் பாவிகளோடும் வரி வசூலிப்பவர்களோடும் சேர்ந்து சாப்பிடுவதைப் பரிசேயர்களாக இருந்த வேத அறிஞர்கள் பார்த்தபோது, “இவர் ஏன் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறார்?” என்று அவருடைய சீஷர்களிடம் கேட்டார்கள். 17  அது இயேசுவின் காதில் விழுந்தபோது, “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை; நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் நான் அழைக்க வந்தேன்”+ என்று சொன்னார். 18  யோவானுடைய சீஷர்களும் பரிசேயர்களும் விரதமிருப்பது வழக்கம். அதனால் யோவானுடைய சீஷர்கள் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயர்களுடைய சீஷர்களும் தவறாமல் விரதம் இருக்கிறோம்; ஆனால் உங்களுடைய சீஷர்கள் ஏன் விரதம் இருப்பதில்லை?”+ என்று கேட்டார்கள். 19  அதற்கு இயேசு, “மணமகன்+ தங்களோடு இருக்கும்போது அவருடைய நண்பர்கள் விரதம் இருக்க வேண்டிய அவசியமே இல்லைதானே? மணமகன் தங்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்களால் விரதமிருக்க முடியாது. 20  ஆனால், மணமகன் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் வரும்,+ அப்போது அவர்கள் விரதம் இருப்பார்கள். 21  புதிய துணியைப் பழைய உடையில் வைத்து யாருமே ஒட்டுப்போட மாட்டார்கள். அப்படிச் செய்தால், புதிய துணி சுருங்கும்போது, பழைய உடையின் கிழிசல் இன்னும் பெரிதாகிவிடும்.+ 22  அதேபோல், பழைய தோல் பைகளில் யாருமே புதிய திராட்சமதுவை ஊற்றி வைக்க மாட்டார்கள்; அப்படி ஊற்றி வைத்தால், திராட்சமது அந்தப் பைகளை வெடிக்க வைத்துவிடும்; அப்போது திராட்சமதுவும் கொட்டிவிடும், பைகளும் நாசமாகிவிடும். அதனால்தான், புதிய திராட்சமதுவைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைப்பார்கள்” என்று சொன்னார். 23  ஓய்வுநாளில் அவர் தன்னுடைய சீஷர்களோடு வயல் வழியாகப் போய்க்கொண்டிருந்தார்; அப்போது, அவருடைய சீஷர்கள் கதிர்களைப் பறித்து சாப்பிட்டுக்கொண்டே போனார்கள்.+ 24  அதனால் பரிசேயர்கள் அவரிடம், “ஓய்வுநாளில் செய்யக்கூடாத காரியத்தை இவர்கள் ஏன் செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள். 25  அதற்கு அவர், “தாவீதும் அவருடைய ஆட்களும் உணவு கிடைக்காமல் பசியாக இருந்தபோது அவர் என்ன செய்தார்+ என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? 26  தாவீது கடவுளுடைய வீட்டுக்குள்* போய், குருமார்கள் தவிர வேறு யாருமே சாப்பிடக்கூடாத படையல் ரொட்டிகளைச் சாப்பிட்டு,+ அவற்றில் சிலவற்றைத் தன்னோடிருந்த ஆட்களுக்கும் கொடுத்தார் என்பதை முதன்மை குருவாகிய அபியத்தாரை+ பற்றிய பதிவில் நீங்கள் வாசித்ததே இல்லையா?” என்று கேட்டார். 27  அதோடு, “மனுஷனுக்காகத்தான் ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டதே+ தவிர, ஓய்வுநாளுக்காக மனுஷன் உண்டாக்கப்படவில்லை; 28  அதனால், மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் எஜமானாக இருக்கிறார்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “வழிபாட்டுக் கூடாரத்துக்குள்.”