யாக்கோபு எழுதிய கடிதம் 4:1-17

  • உலகத்துக்கு நண்பராக இருக்காதீர்கள் (1-12)

    • பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் (7)

    • கடவுளிடம் நெருங்கி வாருங்கள் (8)

  • பெருமைப்படக் கூடாது (13-17)

    • “யெகோவாவுக்கு விருப்பமானால்” (15)

4  உங்கள் மத்தியில் சண்டைகளும் தகராறுகளும் வருவதற்குக் காரணம் என்ன? உங்கள் உடல் உறுப்புகளில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிற உடலின் ஆசைகள்தான், இல்லையா?+  நீங்கள் ஆசைப்படுகிறீர்கள், ஆனாலும் உங்களுக்குக் கிடைப்பதில்லை. நீங்கள் கொலை செய்துகொண்டும் பேராசைப்பட்டுக்கொண்டும் அலைகிறீர்கள்; ஆனாலும், உங்களால் பெற முடிவதில்லை. விடாப்பிடியாகச் சண்டைகளிலும் தகராறுகளிலும் ஈடுபடுகிறீர்கள்.+ நீங்கள் வேண்டிக்கொள்ளாததால் உங்களுக்குக் கிடைப்பதில்லை.  நீங்கள் வேண்டிக்கொண்டாலும் கிடைப்பதில்லை; ஏனென்றால், தவறான நோக்கத்துக்காக, அதாவது உங்கள் உடலின் ஆசைகளைத் திருப்திப்படுத்துவதற்காக வேண்டிக்கொள்கிறீர்கள்.  கடவுளுக்கு உண்மையாக இல்லாதவர்களே,* உலக நட்பு கடவுளுக்குப் பகை என்பது உங்களுக்குத் தெரியாதா? அதனால், உலகத்துக்கு நண்பனாக இருக்க ஆசைப்படுகிற எவனும் கடவுளுக்கு எதிரியாகிறான்.+  “நமக்குள் குடிகொண்டிருக்கிற மனப்பான்மை பொறாமைக் குணத்தோடு சதா ஏங்கிக்கொண்டிருக்கிறது” என்று வேதவசனம் வீணாகச் சொல்கிறதென நினைக்கிறீர்களா?+  இருந்தாலும், கடவுள் காட்டுகிற அளவற்ற கருணை அந்தக் குணத்தை வென்றுவிடும். அதனால், “தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார்,+ தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்” என்று வேதவசனம் சொல்கிறது.+  அதனால், கடவுளுக்கு அடங்கி நடங்கள்;+ பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்,+ அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.+  கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.+ பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்தமாக்குங்கள்;+ இரண்டு மனதாக இருக்கிறவர்களே, உங்கள் இதயங்களைத் தூய்மையாக்குங்கள்.+  வருத்தப்பட்டு புலம்பி அழுங்கள்.+ உங்கள் சிரிப்பு அழுகையாகவும், உங்கள் சந்தோஷம் துக்கமாகவும் மாறட்டும். 10  யெகோவாவுக்கு* முன்னால் உங்களைத் தாழ்த்துங்கள்,+ அப்போது அவர் உங்களை உயர்த்துவார்.+ 11  சகோதரர்களே, ஒருவருக்கு விரோதமாக ஒருவர் பேசுவதை விட்டுவிடுங்கள்.+ தன் சகோதரனுக்கு விரோதமாகப் பேசுகிறவன் அல்லது தன் சகோதரனை நியாயந்தீர்க்கிறவன் சட்டத்துக்கு விரோதமாகப் பேசுகிறான், சட்டத்தை நியாயந்தீர்க்கிறான். நீங்கள் அப்படிச் சட்டத்தை நியாயந்தீர்க்கிறீர்கள் என்றால், சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்களாக அல்ல, அதற்கு நீதிபதிகளாகவே இருக்கிறீர்கள். 12  ஆனால், சட்டத்தைக் கொடுப்பவராகவும் நீதிபதியாகவும் இருப்பவர் ஒருவர்தான்;+ காப்பாற்றவும் அழிக்கவும் வல்லவர் அவர்தான்.+ அப்படியிருக்கும்போது, மற்றவர்களை நியாயந்தீர்க்க நீங்கள் யார்?+ 13  “இன்றைக்கோ நாளைக்கோ நாங்கள் இந்த நகரத்துக்குப் போய், ஒரு வருஷம் தங்கி, வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்போம்”+ என்று சொல்கிறவர்களே, கேளுங்கள். 14  நாளைக்கு உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியாது.+ ஏனென்றால், கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு மறைந்துபோகிற மூடுபனியைப் போல் நீங்கள் இருக்கிறீர்கள்.+ 15  அதனால், “யெகோவாவுக்கு* விருப்பமானால்,*+ நாங்கள் உயிரோடிருப்போம், இதை இதைச் செய்வோம்” என்றுதான் நீங்கள் சொல்ல வேண்டும். 16  ஆனால், இப்போது நீங்கள் ஆணவத்தோடு உங்களைப் பற்றிப் பெருமையடிக்கிறீர்கள், அது போதாதென்று அதைப் பற்றிப் பெருமைப்பட்டும் கொள்கிறீர்கள். இப்படிப்பட்ட எல்லா விதமான பெருமையும் பொல்லாதது. 17  அதனால், சரியானதைச் செய்ய ஒருவனுக்குத் தெரிந்திருந்தும் அதை அவன் செய்யாமல் இருந்தால், அது பாவம்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “விபச்சாரிகளே.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “சித்தமானால்.”