யாத்திராகமம் 14:1-31

  • இஸ்ரவேலர்கள் கடல் பக்கம் வந்துசேர்கிறார்கள் (1-4)

  • பார்வோன் இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு வருகிறான் (5-14)

  • இஸ்ரவேலர்கள் செங்கடலைக் கடக்கிறார்கள் (15-25)

  • எகிப்தியர்கள் கடலுக்குள் மூழ்கிவிடுகிறார்கள் (26-28)

  • இஸ்ரவேலர்கள் யெகோவாமேல் விசுவாசம் வைக்கிறார்கள் (29-31)

14  அப்போது யெகோவா மோசேயிடம்,  “இஸ்ரவேலர்கள் திரும்பிப் போய், மிக்தோலுக்கும் கடலுக்கும்* இடையில், பாகால்-செபோனைப் பார்த்தபடி இருக்கிற பிககிரோத் என்ற இடத்துக்கு முன்னால் முகாம்போட வேண்டுமென்று சொல்.+ அதற்கு எதிரில் இருக்கிற கடற்கரையிலே நீங்கள் முகாம்போட வேண்டும்.  அப்போது பார்வோன், ‘இஸ்ரவேலர்கள் வழி தெரியாமல் அலைந்து திரிகிறார்கள். அவர்கள் வனாந்தரத்தில் மாட்டிக்கொண்டார்கள்’ என்று சொல்வான்.  பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்.+ அவன் அவர்களைத் துரத்திக்கொண்டு வருவான். பார்வோனையும் அவனுடைய எல்லா படைகளையும் தோற்கடிப்பதன் மூலம் எனக்குப் புகழ் சேர்ப்பேன்.+ அப்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்றார். அவர் சொன்னபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.  இஸ்ரவேலர்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்ற செய்தி எகிப்தின் ராஜாவான பார்வோனுக்குச் சொல்லப்பட்டபோது, “ஏன்தான் இப்படிச் செய்தோமோ!+ நமக்கு அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை ஏன்தான் விடுதலை செய்தோமோ!” என்று அவனும் அவனுடைய ஊழியர்களும் நொந்துகொண்டார்கள்.  அதனால் பார்வோன் தன்னுடைய போர் ரதங்களைத் தயார்படுத்தி, தன்னுடைய வீரர்களோடு புறப்பட்டான்.+  விசேஷமான 600 ரதங்களோடும், எகிப்திலிருந்த மற்ற எல்லா ரதங்களோடும் புறப்பட்டுப் போனான். அவை ஒவ்வொன்றிலும் வீரர்கள் இருந்தார்கள்.  இப்படி, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார். அவன் இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு போனான். ஆனால், இஸ்ரவேலர்கள் வெற்றி நடைபோட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.+  எகிப்தியர்கள் பார்வோனுடைய எல்லா ரதங்களோடும், குதிரை வீரர்களோடும், மற்ற எல்லா படைகளோடும் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள்.+ பிககிரோத் என்ற இடத்துக்கு முன்னால், பாகால்-செபோனுக்கு எதிரில் இருந்த கடற்கரையில் முகாம்போட்டிருந்த இஸ்ரவேலர்களை அவர்கள் நெருங்கினார்கள். 10  பார்வோனும் எகிப்தியர்களும் நெருங்கி வருவதை இஸ்ரவேலர்கள் பார்த்தபோது, கதிகலங்கிப்போய் யெகோவாவிடம் கதறினார்கள்.+ 11  பின்பு அவர்கள் மோசேயிடம், “எகிப்தில் கல்லறை இல்லையென்றா இந்த வனாந்தரத்தில் சாவதற்கு எங்களை இழுத்துக்கொண்டு வந்தீர்கள்?+ எதற்காக எங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்? 12  எகிப்தில் இருக்கும்போதே நாங்கள் உங்களிடம், ‘எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் எகிப்தியர்களுக்கே வேலை செய்கிறோம்’ என்று சொல்லவில்லையா? இந்த வனாந்தரத்தில் சாவதைவிட எகிப்தியர்களுக்கு வேலை செய்வதே மேல்” என்றார்கள்.+ 13  அதற்கு மோசே, “பயப்படாதீர்கள்!+ தைரியமாக நின்று, இன்று யெகோவா உங்களுக்குத் தரும் மீட்பைப் பாருங்கள்.+ இன்று நீங்கள் பார்க்கிற இந்த எகிப்தியர்களை இனி என்றுமே பார்க்க மாட்டீர்கள்.+ 14  உங்களுக்காக யெகோவாவே போர் செய்வார்.+ நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றார். 15  அப்போது யெகோவா மோசேயிடம், “ஏன் என்னிடம் கெஞ்சுகிறாய்? இஸ்ரவேலர்களை இங்கிருந்து புறப்படச் சொல். 16  நீ உன்னுடைய கோலை எடுத்து கடலுக்கு நேராக நீட்டு. அப்போது கடல் இரண்டாகப் பிளக்கும், இஸ்ரவேலர்கள் கடலின் நடுவில் காய்ந்த தரையிலே நடந்து போவார்கள். 17  எகிப்தியர்களுடைய இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன். அதனால், அவர்கள் இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு வருவார்கள். அப்போது, பார்வோனையும் அவனுடைய போர் ரதங்களையும் குதிரைப்படைகளையும் மற்ற எல்லா படைகளையும் அழித்து எனக்குப் புகழ் சேர்ப்பேன்.+ 18  பார்வோனையும் அவனுடைய போர் ரதங்களையும் குதிரைப்படைகளையும் அழித்து எனக்குப் புகழ் சேர்க்கும்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்றார். 19  பின்பு, இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த உண்மைக் கடவுளின் தூதர்+ அங்கிருந்து விலகி அவர்களுக்குப் பின்னால் வந்தார். அவர்களுக்கு முன்னால் இருந்த மேகத் தூணும் அவர்களுக்குப் பின்னால் வந்தது.+ 20  அது எகிப்தியர்களின் படைக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் நின்றது.+ அது எகிப்தியர்களுக்கு இருளாகவும், இஸ்ரவேலர்களுக்கு ராத்திரியில் வெளிச்சமாகவும் இருந்தது.+ அதனால், ராத்திரி முழுவதும் எகிப்தியர்களால் இஸ்ரவேலர்களை நெருங்க முடியவில்லை. 21  பின்பு, மோசே தன்னுடைய கையைக் கடலுக்கு நேராக நீட்டினார்.+ யெகோவா ராத்திரி முழுவதும் கிழக்கிலிருந்து பலத்த காற்றை வீச வைத்து, கடலை இரண்டாகப் பிளந்தார்.+ தண்ணீர் இரண்டு பக்கங்களிலும் பிரிந்து நின்றது. நடுவிலே காய்ந்த தரை தெரிந்தது.+ 22  அந்தக் காய்ந்த தரை வழியாகக் கடலின் நடுவிலே இஸ்ரவேலர்கள் நடந்து போனார்கள்.+ தண்ணீர் அவர்களுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் மதில் போலத் திரண்டு நின்றது.+ 23  எகிப்தியர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். பார்வோனுடைய எல்லா குதிரைகளும் போர் ரதங்களும் குதிரைப்படைகளும் அவர்களுக்குப் பின்னாலேயே கடலுக்குள் வர ஆரம்பித்தன.+ 24  மூன்றாம் ஜாமத்தில்* மேகமும் நெருப்புமான தூணிலிருந்து+ யெகோவா எகிப்தியர்களைப் பார்த்து, அவர்களுக்குள் குழப்பத்தை உண்டாக்கினார். 25  அவர்களுடைய ரதங்களின் சக்கரங்களை அவர் கழன்றுபோக வைத்ததால், ரதங்களை ஓட்ட அவர்கள் படாத பாடுபட்டார்கள். அதனால், “இஸ்ரவேலர்களோடு நமக்கு எந்தச் சம்பந்தமும் வேண்டாம், அவர்களைவிட்டு ஓடிப்போய்விடலாம். அவர்களுக்காக யெகோவா நம்மை எதிர்த்துப் போர் செய்கிறார்”+ என்று சொல்லிக்கொண்டார்கள். 26  பின்பு யெகோவா மோசேயிடம், “கடலுக்கு நேராக உன் கையை நீட்டு. தண்ணீர் பாய்ந்து வந்து எகிப்தியர்களையும் அவர்களுடைய போர் ரதங்களையும் குதிரைப்படைகளையும் மூழ்கடிக்கட்டும்” என்றார். 27  உடனே மோசே கடலுக்கு நேராகத் தன் கையை நீட்டினார். பொழுது விடிய ஆரம்பித்தபோது, கடல்நீர் பழைய நிலைக்குத் திரும்பியது. எகிப்தியர்கள் அங்கிருந்து தப்பித்துப்போக முயற்சி செய்தார்கள். ஆனால், யெகோவா அவர்களைக் கடலுக்குள் மூழ்கடித்தார்.+ 28  இஸ்ரவேலர்களைக் கடலுக்குள் துரத்திச்சென்ற பார்வோனின் போர் ரதங்களும் குதிரைப்படைகளும் மற்ற எல்லா படைகளும் புரண்டுவந்த தண்ணீரில் மூழ்கிப்போயின.+ ஒருவர்கூட தப்பிப்பதற்குக் கடவுள் விடவில்லை.+ 29  ஆனால், இஸ்ரவேலர்கள் கடலின் நடுவில் காய்ந்த தரையில் நடந்து போனார்கள்.+ தண்ணீர் அவர்களுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் மதில் போலத் திரண்டு நின்றது.+ 30  இப்படி, யெகோவா அந்த நாளில் இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கையிலிருந்து காப்பாற்றினார்.+ எகிப்தியர்களின் பிணங்கள் கரையில் ஒதுங்கியதை இஸ்ரவேலர்கள் பார்த்தார்கள். 31  எகிப்தியர்களுக்கு எதிராக யெகோவா காட்டிய மகா வல்லமையையும் பார்த்தார்கள். அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாமேலும் அவருடைய ஊழியரான மோசேமேலும் விசுவாசம் வைத்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

அநேகமாக, “செங்கடலுக்கும்.”
அதாவது, “அதிகாலை சுமார் 2 மணிமுதல் 6 மணிவரை.”