யாத்திராகமம் 17:1-16

  • தண்ணீர் இல்லாததால் ஜனங்கள் ஓரேபிலே தகராறு செய்கிறார்கள் (1-4)

  • கற்பாறையிலிருந்து தண்ணீர் (5-7)

  • அமலேக்கியர்கள் போர் செய்து தோற்றுப்போகிறார்கள் (8-16)

17  இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் சின் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்கள்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே, ஒவ்வொரு இடமாகப் பயணம் செய்தார்கள்.+ பின்பு, அவர்கள் ரெவிதீமுக்கு வந்து முகாம்போட்டார்கள்.+ ஆனால், அங்கே அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை.  அதனால் ஜனங்கள், “எங்களுக்குத் தண்ணீர் வேண்டும்” என்று சொல்லி மோசேயோடு தகராறு செய்தார்கள்.+ அப்போது மோசே, “நீங்கள் ஏன் என்னோடு தகராறு செய்கிறீர்கள்? ஏன் மறுபடியும் மறுபடியும் யெகோவாவைச் சோதித்துப் பார்க்கிறீர்கள்?”+ என்று கேட்டார்.  ஆனால், அந்த ஜனங்கள் தண்ணீருக்காக ரொம்பவும் தவித்தார்கள். அதனால், அவர்கள் மோசேக்கு எதிராக முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.+ “எங்களை எதற்காக எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்? நாங்களும் எங்கள் பிள்ளைகுட்டிகளும் ஆடுமாடுகளும் தாகத்தால் செத்துப்போவதற்கா?” என்று கேட்டார்கள்.  கடைசியில் மோசே யெகோவாவிடம், “இந்த ஜனங்களை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்? கொஞ்ச நேரத்தில் என்னைக் கல்லெறிந்து கொன்றுவிடுவார்கள் போலிருக்கிறதே!” என்று அலறினார்.  அப்போது யெகோவா மோசேயிடம், “இஸ்ரவேலின் பெரியோர்கள்* சிலரைக் கூட்டிக்கொண்டு ஜனங்களுக்கு முன்னால் நடந்து போ. நீ நைல் நதியை அடிக்கப் பயன்படுத்திய கோலையும்+ எடுத்துக்கொண்டு போ.  இதோ! நான் ஓரேபிலுள்ள கற்பாறையின் மேல் உன் முன்னால் நிற்பேன். நீ அந்தக் கற்பாறையை அடிக்க வேண்டும். அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து வரும், ஜனங்கள் அதைக் குடிப்பார்கள்”+ என்றார். இஸ்ரவேலின் பெரியோர்களுக்கு முன்பாக மோசே அப்படியே செய்தார்.  அங்கே இஸ்ரவேலர்கள் அவரோடு தகராறு செய்ததாலும், “யெகோவா நம்மோடு இருக்கிறாரா இல்லையா?” என்று சொல்லி யெகோவாவைச் சோதித்துப் பார்த்ததாலும்,+ அவர் அந்த இடத்துக்கு மாசா*+ என்றும், மேரிபா*+ என்றும் பெயர் வைத்தார்.  பின்பு, அமலேக்கியர்கள்+ ரெவிதீமிலிருந்த+ இஸ்ரவேலர்களுடன் போர் செய்ய வந்தார்கள்.  அப்போது மோசே யோசுவாவிடம்,+ “நம்முடைய ஆட்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு போய் அமலேக்கியர்களுடன் போர் செய். நாளைக்கு நான் உண்மைக் கடவுளின் கோலைக் கையில் பிடித்துக்கொண்டு குன்றின் உச்சியில் நிற்பேன்” என்றார். 10  மோசே சொன்னபடியே+ அமலேக்கியர்களுக்கு எதிராக யோசுவா போர் செய்தார். மோசேயும் ஆரோனும் ஹூரும்+ குன்றின் உச்சிக்குப் போனார்கள். 11  மோசே தன்னுடைய கைகளை உயர்த்தி வைத்திருந்த வரைக்கும் போரில் இஸ்ரவேலர்கள் ஜெயித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், அவர் தன்னுடைய கைகளைக் கீழே தொங்கவிட்டவுடன் அமலேக்கியர்கள் ஜெயிக்க ஆரம்பித்தார்கள். 12  மோசேக்குக் கைகள் வலித்தபோது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து வைத்தார்கள், அவர் அதன்மேல் உட்கார்ந்தார். பின்பு, ஆரோனும் ஹூரும் மோசேயின் கைகளை ஆளுக்கு ஒரு பக்கமாகத் தாங்கிப் பிடித்துக்கொண்டார்கள். அதனால், சூரியன் மறையும்வரை அவருடைய கைகள் அதே நிலையில் இருந்தன. 13  இப்படி, அமலேக்கியர்களையும் அவர்களோடு சேர்ந்தவர்களையும் யோசுவா வாளால் வீழ்த்தினார்.+ 14  அப்போது யெகோவா மோசேயிடம், “நான் சொல்லும் இந்த வார்த்தைகளை யாரும் மறக்காமல் இருப்பதற்காக* ஒரு புத்தகத்தில் எழுதி வைத்து, யோசுவாவுக்கு வாசித்துக் காட்டு: ‘அமலேக்கியர்கள் பற்றிய நினைவையே இந்த உலகத்திலிருந்து நான் அடியோடு அழித்துவிடுவேன்’”+ என்றார். 15  பின்பு மோசே ஒரு பலிபீடம் கட்டினார். அதற்கு யெகோவா-நிசி* என்று பெயர் வைத்து, 16  “அமலேக்கியர்கள் ‘யா’வின்*+ சிம்மாசனத்தை எதிர்ப்பதால், யெகோவா அவர்களோடு தலைமுறை தலைமுறையாகப் போர் செய்வார்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்கள்.”
அர்த்தம், “சோதித்துப் பார்த்தல்.”
அர்த்தம், “தகராறு செய்தல்.”
வே.வா., “எல்லாரும் நினைவில் வைப்பதற்காக.”
அர்த்தம், “யெகோவா என் கொடிக் கம்பம்.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.