யாத்திராகமம் 35:1-35

  • ஓய்வுநாள் பற்றிய அறிவுரைகள் (1-3)

  • வழிபாட்டுக் கூடாரத்திற்காகக் காணிக்கைகள் (4-29)

  • பெசலெயேலும் அகோலியாபும் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுகிறார்கள் (30-35)

35  பிற்பாடு, மோசே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் கூடிவரச் செய்து இப்படிச் சொன்னார்: “யெகோவா உங்களுக்கு இந்தக் கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார்:+  ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான நாள். அது யெகோவாவுக்காக முழுமையாய் ஓய்ந்திருக்க வேண்டிய ஓய்வுநாள்.+ அந்த நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்படுவான்.+  ஓய்வுநாளிலே, நீங்கள் குடியிருக்கிற எந்த இடத்திலும் நெருப்பு மூட்டக் கூடாது.”  பின்பு, மோசே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும், “யெகோவாவின் கட்டளை என்னவென்றால்,  ‘நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை கொண்டுவர வேண்டும்.+ யெகோவாவுக்கு உள்ளப்பூர்வமாகக் காணிக்கை கொடுக்க விரும்புகிறவர்கள்+ இதையெல்லாம் கொண்டுவரலாம்: தங்கம், வெள்ளி, செம்பு,  நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை,* வெள்ளாட்டு மயிர்,+  சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோல், கடல்நாய்த் தோல், வேல மரம்,  விளக்குகளுக்கான எண்ணெய், அபிஷேகத் தைலத்துக்கும் தூபப்பொருளுக்கும் தேவையான பரிமளத் தைலம்,+  ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும்+ பதிக்க வேண்டிய கோமேதகக் கற்கள்+ மற்றும் பல ரத்தினக் கற்கள். 10  உங்களில் திறமைசாலிகளாக இருக்கிற+ எல்லாரும் வந்து, யெகோவா சொல்லியிருக்கிற எல்லாவற்றையும் செய்ய வேண்டும். 11  அதாவது, வழிபாட்டுக் கூடாரம், அதற்கான மேல்விரிப்புகள், கொக்கிகள், சட்டங்கள், கம்புகள், தூண்கள், பாதங்கள், 12  பெட்டி,+ அதன் கம்புகள்,+ அதன் மூடி,+ திரைச்சீலை,+ 13  மேஜை,+ அதன் கம்புகள், அதற்கான பாத்திரங்கள், படையல் ரொட்டிகள்,+ 14  குத்துவிளக்கு,+ அதற்கான பாத்திரங்கள், அகல் விளக்குகள், விளக்குகளுக்கான எண்ணெய்,+ 15  தூபபீடம்,+ அதன் கம்புகள், அபிஷேகத் தைலம், தூபப்பொருள்,+ வழிபாட்டுக் கூடார வாசலின் திரை, 16  தகன பலிக்கான பலிபீடம்,+ அதற்கான செம்புக் கம்பிவலை, கம்புகள், பாத்திரங்கள், தொட்டி, அதை வைப்பதற்கான தாங்கி,+ 17  பிரகாரத்துக்கான மறைப்புகள்,+ கம்பங்கள், பாதங்கள், பிரகார நுழைவாசலுக்கான திரை, 18  கூடார ஆணிகள், பிரகாரத்துக்கான ஆணிகள், கயிறுகள்,+ 19  வழிபாட்டுக் கூடாரத்தில் பணிவிடை செய்வதற்காக நன்றாய் நெய்யப்பட்ட உடைகள்,+ குருவாகிய ஆரோனுக்குப் பரிசுத்த அங்கிகள்,+ குருமார்களாகச் சேவை செய்ய அவனுடைய மகன்களுக்கு அங்கிகள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்’” என்றார். 20  மோசே சொன்னதைக் கேட்ட பின்பு இஸ்ரவேலர்கள் எல்லாரும் அங்கிருந்து போனார்கள். 21  பின்பு, யாருடைய உள்ளம் தூண்டியதோ, யாருடைய மனம் உந்துவித்ததோ,+ அவர்கள் எல்லாரும் சந்திப்புக் கூடாரத்துக்காகவும் அங்கு நடக்கிற வேலைகளுக்காகவும் பரிசுத்த அங்கிகள் செய்வதற்காகவும் யெகோவாவுக்குக் காணிக்கை கொண்டுவந்து கொடுத்தார்கள். 22  தங்க ஊசிகளையும்,* தோடுகளையும், மோதிரங்களையும், மற்ற நகைகளையும், எல்லா விதமான தங்கச் சாமான்களையும் ஆண்கள், பெண்கள் எல்லாரும் உள்ளப்பூர்வமாகக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் தங்கத்தை யெகோவாவுக்குக் காணிக்கையாக* கொடுத்தார்கள்.+ 23  நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை, வெள்ளாட்டு மயிர், சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோல், கடல்நாய்த் தோல் ஆகியவற்றை வைத்திருந்தவர்கள் அவற்றைக் கொண்டுவந்தார்கள். 24  வெள்ளியும் செம்பும் வைத்திருந்த எல்லாரும் அவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். வேல மரத்துண்டுகள் வைத்திருந்த எல்லாரும் அவற்றைக் கூடார வேலைகளுக்காகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். 25  திறமையான பெண்கள்+ எல்லாரும் தங்கள் கைகளால் நூல் நூற்று, நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள். 26  திறமையான பெண்களில் யாருக்கெல்லாம் உள்ளத்தில் ஆர்வம் இருந்ததோ அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரை நூலாகத் திரித்துக் கொண்டுவந்து கொடுத்தார்கள். 27  ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்க வேண்டிய கோமேதகக் கற்கள் மற்றும் பல ரத்தினக் கற்கள்,+ 28  பரிமளத் தைலம், விளக்குகளுக்கும் அபிஷேகத் தைலத்துக்கும்+ தூபப்பொருளுக்கும் தேவையான எண்ணெய்+ ஆகியவற்றைத் தலைவர்கள் கொண்டுவந்தார்கள். 29  ஆண்களிலும் பெண்களிலும் யாருக்கெல்லாம் உள்ளத்தில் ஆர்வம் இருந்ததோ அவர்கள் எல்லாரும், மோசே மூலம் யெகோவா செய்யச் சொல்லியிருந்த வேலைக்காக ஏதாவது ஒரு காணிக்கையைக் கொண்டுவந்தார்கள். இஸ்ரவேலர்கள் அவர்களாகவே விருப்பப்பட்டு அவற்றை யெகோவாவுக்குக் கொடுத்தார்கள்.+ 30  பின்பு மோசே இஸ்ரவேலர்களிடம், “யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார்.+ 31  அவரைத் தன்னுடைய சக்தியால் நிரப்பி, எல்லா விதமான கைவேலைகள் செய்யவும், 32  கலை வேலைப்பாடுகள் செய்யவும், தங்கம், வெள்ளி, செம்பு வேலைகள் செய்யவும், 33  கற்களைப் பட்டைதீட்டி அவற்றைப் பதிக்கவும், எல்லாவித மர வேலைப்பாடுகள் செய்யவும் அவருக்கு ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் அறிவையும் தந்திருக்கிறார். 34  கற்பிக்கும் திறமையை பெசலெயேலுக்கும் தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாக்கின் மகன் அகோலியாபுக்கும்+ கடவுள் தந்திருக்கிறார். 35  எல்லா விதமான கைவேலைகள் செய்யவும், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை ஆகியவற்றால் தையல்* வேலைப்பாடு செய்யவும், உடைகளை நெசவு செய்து வடிவமைக்கவும் அவர்களுக்குக் கடவுள் திறமை தந்திருக்கிறார்.+ அவர்கள் எல்லா விதமான வேலைகளையும் கலை வேலைப்பாடுகளையும் செய்வார்கள்” என்றார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “லினன்.”
வே.வா., “அசைவாட்டும் காணிக்கையாக.”
இவை அநேகமாக உடைகளில் குத்திக்கொள்ளும் அலங்காரப் பின்களாக இருந்திருக்கலாம்.
வே.வா., “எம்பிராய்டரி.”