யோசுவா 13:1-33

  • தேசத்தில் இன்னும் கைப்பற்றப்பட வேண்டிய பகுதிகள் (1-7)

  • யோர்தானுக்குக் கிழக்கே பிரித்துக்கொடுக்கப்பட்ட பகுதிகள் (8-14)

  • ரூபன் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (15-23)

  • காத் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (24-28)

  • கிழக்கில் மனாசே கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (29-32)

  • யெகோவாவே லேவியர்களுடைய சொத்து (33)

13  யோசுவாவுக்கு ரொம்ப வயதாகிவிட்டது.+ அதனால் யெகோவா அவரிடம், “உனக்கு ரொம்ப வயதாகிவிட்டது. ஆனால், தேசத்தில் இன்னும் ஏராளமான பகுதிகளை இஸ்ரவேலர்கள் கைப்பற்ற வேண்டியிருக்கிறது.  மீதி இருக்கும் அந்தப் பகுதிகள்+ இவைதான்: பெலிஸ்தியர்களுக்கும் கேசூரியர்களுக்கும் சொந்தமான பிரதேசங்கள்+  (அதாவது, எகிப்துக்குக் கிழக்கே உள்ள நைல் நதியின் கிளை நதியிலிருந்து* வடக்கே எக்ரோனியர்களின் எல்லை வரையுள்ள பிரதேசங்கள்; இது முன்பு கானானியர்களின் பகுதியாகக்+ கருதப்பட்டது); பெலிஸ்தியர்களின்+ ஐந்து தலைவர்கள் ஆட்சி செய்த காசா, அஸ்தோத்,+ அஸ்கலோன்,+ காத்,+ எக்ரோன்+ ஆகிய ஊர்கள்; தெற்கே உள்ள ஆவீமியர்களின்+ பிரதேசம்;  கானானியர்களின் முழு தேசம்; ஆப்பெக் வரைக்கும் எமோரியர்களின் எல்லை வரைக்கும் உள்ள சீதோனியர்களுக்குச்+ சொந்தமான மெயாரா;  கேபாலியர்களின் தேசம்+ மற்றும் கிழக்கே எர்மோன் மலையின் அடிவாரத்திலுள்ள பாகால்-காத்திலிருந்து லெபோ-காமாத்+ வரையுள்ள* லீபனோன் முழுவதும்;  லீபனோன்+ தொடங்கி மிஸ்ரபோத்-மாயீம்+ வரையுள்ள மலைப்பகுதியில் குடியிருக்கிறவர்களின் பகுதிகள் மற்றும் சீதோனியர்களின்+ பகுதிகள். இங்கே வாழ்பவர்களை இஸ்ரவேலர்களின் கண் முன்னால் நான் துரத்திவிடுவேன்.+ நான் உனக்குக் கட்டளை கொடுத்தபடியே, அதை நீ இஸ்ரவேலர்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.+  இந்தத் தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும்”+ என்று சொன்னார்.  மனாசேயின் மற்றொரு பாதிக் கோத்திரத்தாரும் ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் யோர்தானுக்குக் கிழக்கில், யெகோவாவின் ஊழியராகிய மோசே கொடுத்த பகுதிகளைச் சொத்தாகப் பெற்றுக்கொண்டார்கள்.+  அர்னோன் பள்ளத்தாக்கின்*+ ஓரத்திலுள்ள ஆரோவேரையும்,+ அந்தப் பள்ளத்தாக்கின் நடுவிலுள்ள நகரத்தையும், தீபோன் வரையுள்ள மேதேபா பீடபூமி முழுவதையும், 10  எஸ்போனிலிருந்து ஆட்சி செய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் நகரங்களையும், அதாவது அம்மோனியர்களின் எல்லை வரையுள்ள நகரங்களையும், பெற்றுக்கொண்டார்கள்.+ 11  அதோடு கீலேயாத்தையும், கேசூரியர்கள் மற்றும் மாகாத்தியர்களின் பகுதிகளையும்,+ எர்மோன் மலை முழுவதையும், சல்கா+ வரையுள்ள பாசான் முழுவதையும்,+ 12  அஸ்தரோத்திலிருந்தும் எத்ரேயிலிருந்தும் ஆட்சி செய்த பாசானின் ராஜாவாகிய ஓகின் ராஜ்யம் முழுவதையும் பெற்றுக்கொண்டார்கள். (ரெப்பாயீமியர்களில் கடைசியாக இருந்தது அவன் மட்டும்தான்.)+ மோசே அவர்களைத் தோற்கடித்து அங்கிருந்து துரத்தியிருந்தார்.+ 13  ஆனால், கேசூரியர்களையும் மாகாத்தியர்களையும் இஸ்ரவேலர்கள் துரத்தவில்லை.+ அதனால் கேசூரியர்களும் மாகாத்தியர்களும் இன்றுவரை இஸ்ரவேலர்களின் நடுவே குடியிருக்கிறார்கள். 14  லேவி கோத்திரத்தாருக்கு மட்டும் தேசம் சொத்தாகப் பங்குபோட்டுக் கொடுக்கப்படவில்லை.+ இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா வாக்குறுதி தந்தபடியே,+ அவருக்குச் செலுத்தப்பட்ட தகன பலிகள்தான் லேவியர்களுக்குக் கிடைத்த சொத்தாக இருந்தன.+ 15  பின்பு, ரூபன் கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி மோசே தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுத்தார். 16  அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதி இதுதான்: அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்திலுள்ள ஆரோவேர், அந்தப் பள்ளத்தாக்கின் நடுவிலுள்ள நகரம், மேதேபாவின் பக்கத்திலுள்ள முழு பீடபூமி; 17  எஸ்போன் மற்றும் பீடபூமியிலுள்ள அதன் ஊர்கள்,+ தீபோன், பாமோத்-பாகால், பெத்-பாகால்-மெயோன்,+ 18  யாகாஸ்,+ கெதெமோத்,+ மேபாகாத்,+ 19  கீரியாத்தாயீம், சிப்மா,+ பள்ளத்தாக்கின் பக்கத்திலே மலைமேல் இருக்கிற செரேத்-சகார், 20  பெத்-பேயோர், பிஸ்கா மலைச் சரிவுகள்,+ பெத்-யெசிமோத்,+ 21  பீடபூமியிலுள்ள நகரங்கள் மற்றும் எஸ்போனிலிருந்து+ ஆட்சி செய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் நகரங்கள். சீகோனையும் அந்தத் தேசத்தில் வாழ்ந்த மீதியானியத் தலைவர்களான ஏவி, ரெக்கேம், சூர், ஹூர், ரேபா+ ஆகியவர்களையும் சீகோனின் சிற்றரசர்களையும் மோசே தோற்கடித்தார்.+ 22  மற்றவர்களோடு சேர்த்து, குறிசொல்கிறவனாகிய+ பெயோரின் மகன் பிலேயாமையும்+ இஸ்ரவேலர்கள் வாளால் வெட்டிக் கொன்றார்கள். 23  யோர்தான் ஆறு, ரூபன் கோத்திரத்தாரின் எல்லையாக இருந்தது. இந்த நகரங்களையும் அவற்றின் கிராமங்களையும்தான் ரூபன் கோத்திரத்தார் அவரவர் குடும்பத்தின்படி பெற்றுக்கொண்டார்கள். 24  அடுத்ததாக, காத் கோத்திரத்தாருக்கும் அவரவர் குடும்பத்தின்படி மோசே தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுத்தார். 25  யாசேரும்,+ கீலேயாத்தின் நகரங்களும், ரப்பாவைப்+ பார்த்தபடி இருக்கிற ஆரோவேர் வரையுள்ள அம்மோனியர்களின்+ பாதித் தேசமும், 26  எஸ்போன்+முதல் ராமாத்-மிஸ்பே மற்றும் பெத்தொனீம் வரைக்கும், மக்னாயீம்முதல்+ தெபீரின் எல்லை வரைக்கும், 27  பள்ளத்தாக்கிலுள்ள பெத்-ஆராம், பெத்-நிம்ரா,+ சுக்கோத்+ மற்றும் சாப்போனும், எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின்+ மற்ற பகுதிகளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. கின்னரேத் கடல்*+ வரைக்கும் உள்ள யோர்தானின் கிழக்குப் பகுதி முழுவதும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. 28  இந்த நகரங்களையும் அவற்றின் கிராமங்களையும்தான் காத் கோத்திரத்தார் அவரவர் குடும்பத்தின்படி பெற்றுக்கொண்டார்கள். 29  மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் அவரவர் குடும்பத்தின்படி மோசே தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுத்தார்.+ 30  மக்னாயீம்+ தொடங்கி பாசான் முழுவதும், பாசானின் ராஜாவாகிய ஓகின் ராஜ்யம் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின்+ சிற்றூர்களாகிய 60 ஊர்கள் முழுவதும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. 31  கீலேயாத்தின் பாதிப் பிரதேசமும், பாசானை ஆட்சி செய்த ஓகின் அரச நகரங்களான அஸ்தரோத்தும் எத்ரேயியும்,+ மனாசேயின் மகனாகிய மாகீரின்+ மகன்களில் பாதிப் பேருக்கு அவரவர் குடும்பத்தின்படி கொடுக்கப்பட்டன. 32  எரிகோவுக்குக் கிழக்கே, யோர்தானுக்கு அப்பால் உள்ள மோவாப் பாலைநிலத்தில் மோசே இந்தப் பகுதிகளை அவர்களுக்குச் சொத்தாகப் பிரித்துக் கொடுத்தார்.+ 33  ஆனால், லேவி கோத்திரத்துக்கு மோசே தேசத்தைச் சொத்தாகப் பங்குபோட்டுக் கொடுக்கவில்லை.+ இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா வாக்குறுதி தந்தபடி, அவரே அவர்களுடைய சொத்து.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “சீகோரிலிருந்து.”
வே.வா., “காமாத்தின் நுழைவாசல் வரையுள்ள.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”
அதாவது, “கெனேசரேத்து ஏரி; கலிலேயா கடல்.”