யோசுவா 17:1-18

  • மேற்கில் மனாசே கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (1-13)

  • யாசேப்பின் வம்சத்தாருக்குக் கூடுதலாகக் கொடுக்கப்பட்ட பகுதிகள் (14-18)

17  பின்பு, யோசேப்பின் மூத்த மகனாகிய+ மனாசேயின்+ கோத்திரத்தாருக்குக் குலுக்கல்+ முறையில் தேசம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. மனாசேயின் மகனும் கீலேயாத்தின் அப்பாவுமான மாகீர்+ பெரிய வீரராக இருந்ததால், அவருக்கு கீலேயாத்தும் பாசானும்+ கிடைத்தன.  மனாசேயின் மற்ற மகன்களுடைய வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி குலுக்கல் முறையில் தேசம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. அபியேசர்,+ ஏலேக், அஸ்ரியேல், சீகேம், ஹேப்பேர், செமீதா ஆகியவர்கள் யோசேப்பின் மகனாகிய மனாசேக்குப் பிறந்த மகன்கள்.+  ஆனால், மனாசேயின் கொள்ளுப்பேரனும் மாகீரின் பேரனும் கீலேயாத்தின் மகனுமாகிய ஹேப்பேருக்குப் பிறந்த செலோப்பியாத்துக்கு+ மகன்கள் இல்லை, மகள்கள் மட்டும்தான் இருந்தார்கள். அவர்களுடைய பெயர்கள்: மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், மற்றும் திர்சாள்.  அந்தப் பெண்கள் குருவாகிய எலெயாசாரிடமும்+ நூனின் மகனாகிய யோசுவாவிடமும் மற்ற தலைவர்களிடமும் வந்து, “எங்கள் அப்பாவின் அண்ணன் தம்பிகளோடு எங்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமென்று மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தாரே”+ என்றார்கள். அதனால் யெகோவாவின் கட்டளைப்படி, அவர்களுடைய அப்பாவின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கப்பட்டது.+  யோர்தானின் கிழக்குப் பகுதியிலுள்ள கீலேயாத்தையும் பாசானையும் தவிர, இன்னும் 10 இடங்கள் மனாசே கோத்திரத்தாருக்குக் கிடைத்தன.+  ஏனென்றால், மனாசேயின் மகன்களோடு அவருடைய மகள்களுக்கும் சொத்தில் பங்கு கிடைத்தது. மனாசேயின் மற்ற வம்சத்தாருக்கு கீலேயாத் பிரதேசம் சொத்தாகக் கிடைத்தது.  மனாசேயின் எல்லை ஆசேரில் தொடங்கி, சீகேமைப்+ பார்த்தபடி இருக்கிற மிக்மேத்தாத்+ வரையில் போனது. தெற்கில் என்-தப்புவா ஜனங்களின் தேசம் வரைக்கும் அது போனது.  தப்புவா தேசம்+ மனாசேக்குச் சொந்தமாக ஆனது. ஆனால், மனாசேயின் எல்லையிலுள்ள தப்புவா நகரம் எப்பிராயீம் வம்சத்தாருக்குச் சொந்தமாக ஆனது.  அந்த எல்லை காணா பள்ளத்தாக்கு* பக்கமாகத் தெற்கே போனது. மனாசே கோத்திரத்தாருடைய நகரங்களுக்கு நடுவே எப்பிராயீம் கோத்திரத்தாரின் நகரங்கள் இருந்தன.+ மனாசேயின் எல்லை அந்தப் பள்ளத்தாக்கின் வடக்கே இருந்தது, அது கடல்வரை போனது.+ 10  தெற்குப் பகுதி எப்பிராயீம் வம்சத்தாருக்குச் சொந்தமாக ஆனது, வடக்குப் பகுதி மனாசே வம்சத்தாருக்குச் சொந்தமாக ஆனது. மனாசே வம்சத்தாருக்கு கடல்தான் எல்லையாக இருந்தது.+ அவர்களுடைய எல்லை வடக்கே ஆசேரின் பகுதி வரைக்கும் கிழக்கே இசக்காரின் பகுதி வரைக்கும் போனது. 11  இசக்காருக்கும் ஆசேருக்கும் சொந்தமான பகுதிகளில், பெத்-செயானும் அதன் சிற்றூர்களும்,* இப்லெயாமும்+ அதன் சிற்றூர்களும், தோரின்+ குடிமக்களும் அதன் சிற்றூர்களும், மலைப்பகுதிகளாகிய எந்தோர்,+ தானாக்,+ மெகிதோ ஆகியவற்றின் குடிமக்களும் அவற்றின் சிற்றூர்களும் மனாசே வம்சத்தாருக்குக் கிடைத்தன. 12  இந்த நகரங்களை மனாசே வம்சத்தாரால் சொந்தமாக்கிக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், கானானியர்கள் அந்தத் தேசத்தைவிட்டுப் போகாமல் அங்கேயே பிடிவாதமாகக் குடியிருந்தார்கள்.+ 13  இஸ்ரவேல் தேசம் பலம்படைத்த தேசமாக ஆனபோது, கானானியர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கியது.+ ஆனாலும், அவர்களை முழுமையாகத் துரத்திவிடவில்லை.+ 14  யோசேப்பின் வம்சத்தார் யோசுவாவிடம், “யெகோவா இன்றுவரை எங்களை ஆசீர்வதித்திருக்கிறார். நாங்கள் நிறைய பேர் இருக்கிறோம்.+ அப்படியிருக்கும்போது, எங்களுக்கு ஏன் ஒரேவொரு பங்கை மட்டும் குலுக்கல் போட்டுக்+ கொடுத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். 15  அதற்கு யோசுவா அவர்களிடம், “நீங்கள் நிறைய பேர் இருப்பதாலும், எப்பிராயீம் மலைப்பகுதி+ இட நெருக்கடியாக இருப்பதாலும், பெரிசியர்களும்+ ரெப்பாயீமியர்களும்+ வாழ்கிற தேசங்களுக்குப் போய் அங்குள்ள காடுகளை வெட்டி அங்கே குடியேறுங்கள்” என்றார். 16  அதற்கு யோசேப்பின் வம்சத்தார், “மலைப்பகுதி எங்களுக்குப் போதுமானதாக இல்லைதான். ஆனால், பெத்-செயானிலும்+ அதன் சிற்றூர்களிலும் யெஸ்ரயேல்+ பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற கானானியர்கள் எல்லாரும் இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட போர் ரதங்களை+ வைத்திருக்கிறார்களே” என்று சொன்னார்கள். 17  அப்போது யோசேப்பின் வம்சத்தாராகிய எப்பிராயீம் மற்றும் மனாசே கோத்திரத்தாரிடம் யோசுவா, “நீங்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள், உங்களுக்கு நிறைய பலம் இருக்கிறது. அதனால், உங்களுக்கு ஒரு பங்கு மட்டுமல்ல,+ 18  மலைப்பகுதி முழுவதும் கொடுக்கப்படும்.+ அது காடாக இருந்தாலும் அங்குள்ள மரங்களை வெட்டிவிடுங்கள். அதுதான் உங்களுடைய பகுதியின் எல்லை. கானானியர்கள் பலசாலிகளாக இருந்தாலும், இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட போர் ரதங்களை வைத்திருந்தாலும், அவர்களைத் துரத்தியடியுங்கள்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கு.”
வே.வா, “அதைச் சுற்றியுள்ள ஊர்களும்.”