யோசுவா 4:1-24

  • அடையாளச் சின்னங்களாக இருக்கும் கற்கள் (1-24)

4  இஸ்ரவேல் தேசத்தார் எல்லாரும் யோர்தானைக் கடந்தவுடன் யெகோவா யோசுவாவிடம்,  “கோத்திரத்துக்கு ஒருவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஆண்களைக்+ கூப்பிட்டு,  அவர்களிடம், ‘யோர்தான் நடுவிலிருந்து, அதாவது குருமார்கள் அசையாமல் நின்ற இடத்திலிருந்து,+ 12 கற்களை எடுத்துவந்து இன்று ராத்திரி நீங்கள் தங்கும் இடத்தில் வையுங்கள்’+ என்று சொல்” என்றார்.  அதனால், கோத்திரத்துக்கு ஒருவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஆண்களை யோசுவா கூப்பிட்டு,  அவர்களிடம், “நீங்கள் யோர்தானுக்கு நடுவே உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகப் போங்கள். இஸ்ரவேல் கோத்திரங்களின் எண்ணிக்கைப்படி, ஆளுக்கு ஒரு கல்லை எடுத்து தோள்களில் சுமந்துகொண்டு வாருங்கள்.  இந்தக் கற்கள் உங்களுக்கு அடையாளச் சின்னங்களாக இருக்கும். எதிர்காலத்தில் உங்களுடைய பிள்ளைகள் உங்களிடம், ‘இந்தக் கற்கள் ஏன் இங்கே இருக்கின்றன?’ என்று கேட்டால்,+  நீங்கள் அவர்களிடம், ‘ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் யோர்தான் ஆற்றை யெகோவா பிரிந்துபோக வைத்தார்.+ அதனால், அந்தப் பெட்டி யோர்தானைக் கடந்துபோனபோது தண்ணீர் பிரிந்து நின்றது. இந்தக் கற்கள் இந்தச் சம்பவத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு என்றென்றும் ஞாபகப்படுத்தும்’+ என்று சொல்ல வேண்டும்” என்றார்.  யோசுவா கட்டளை கொடுத்தபடியே அவர்கள் செய்தார்கள். யோசுவாவுக்கு யெகோவா சொல்லியிருந்தபடியே, இஸ்ரவேல் கோத்திரங்களின் எண்ணிக்கைப்படி யோர்தானின் நடுவிலிருந்து 12 கற்களை எடுத்துக்கொண்டு வந்து, ராத்திரி தாங்கள் தங்கிய இடத்தில் வைத்தார்கள்.  அதோடு யோர்தானின் நடுவிலும், அதாவது ஒப்பந்தப் பெட்டியைச் சுமந்த குருமார்கள் நின்ற இடத்திலும்,+ யோசுவா 12 கற்களை நாட்டினார். அந்தக் கற்கள் இன்றுவரை அங்கே இருக்கின்றன. 10  யெகோவா சொல்லச் சொன்ன எல்லா கட்டளைகளையும், அதாவது மோசே மூலம் கொடுத்திருந்த எல்லா கட்டளைகளையும், யோசுவா ஜனங்களிடம் சொல்லி முடிக்கும்வரை, பெட்டியைச் சுமந்த குருமார்கள் யோர்தானின் நடுவில் நின்றுகொண்டிருந்தார்கள். குருமார்கள் அங்கே நின்றுகொண்டிருந்த சமயத்தில் ஜனங்கள் எல்லாரும் வேகவேகமாக ஆற்றைக் கடந்தார்கள். 11  ஜனங்கள் எல்லாருமே ஆற்றைக் கடந்தவுடன், குருமார்கள் யெகோவாவின் பெட்டியைச் சுமந்துகொண்டு அவர்களுடைய கண் முன்னால் ஆற்றைக் கடந்தார்கள்.+ 12  மோசே கட்டளை கொடுத்திருந்தபடியே,+ ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மற்ற இஸ்ரவேலர்களுக்கு முன்னால் அணிவகுத்துப் போனார்கள்.+ 13  சுமார் 40,000 படைவீரர்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு யெகோவாவின் முன்னிலையில் யோர்தானைக் கடந்து எரிகோ பாலைநிலத்துக்குப் போனார்கள். 14  அன்று இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் யோசுவாவை யெகோவா கௌரவப்படுத்தினார்.+ ஜனங்கள் மோசேக்கு மதிப்பு மரியாதை காட்டியது+ போலவே யோசுவாவுக்கும் அவருடைய வாழ்நாள் காலமெல்லாம் மதிப்பு மரியாதை காட்டினார்கள். 15  யெகோவா யோசுவாவிடம், 16  “சாட்சிப் பெட்டியைச்+ சுமக்கிற குருமார்களை யோர்தானைவிட்டுக் கரையேறி வரச் சொல்” என்றார். 17  அதனால் யோசுவா குருமார்களிடம், “யோர்தானைவிட்டுக் கரையேறுங்கள்” என்று சொன்னார். 18  யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற குருமார்கள்+ யோர்தானின் நடுவிலிருந்து வந்து கரையில் கால்வைத்த உடனே யோர்தான் ஆறு முன்புபோல் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது.+ 19  ஜனங்கள் எல்லாரும் முதலாம் மாதம் பத்தாம் நாளில் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவின் கிழக்கு எல்லையிலுள்ள கில்காலில்+ முகாம்போட்டார்கள். 20  யோர்தானிலிருந்து எடுத்துவந்த 12 கற்களை கில்காலில் யோசுவா நாட்டினார்.+ 21  பின்பு அவர் இஸ்ரவேலர்களிடம், “‘இந்தக் கற்கள் ஏன் இங்கே இருக்கின்றன?’ என்று எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் கேட்டால்,+ 22  நீங்கள் அவர்களிடம், ‘இஸ்ரவேலர்கள் உலர்ந்த தரையில் யோர்தானைக் கடந்தார்கள்.+ 23  அவர்கள் செங்கடலைக் கடந்தபோது நம் கடவுளாகிய யெகோவா அதை வற்றிப்போக வைத்தது போலவே, யோர்தானைக் கடந்தபோதும் நம் கடவுளாகிய யெகோவா அதை வற்றிப்போக வைத்தார்.+ 24  யெகோவா எவ்வளவு பலம்படைத்தவர் என்பதைப் பூமியிலுள்ள எல்லாரும் தெரிந்துகொள்வதற்காகவும்,+ நீங்கள் என்றென்றும் நம் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடப்பதற்காகவும் அப்படிச் செய்தார்’ என்று சொல்ல வேண்டும்” என்றார்.

அடிக்குறிப்புகள்