யோசுவா 9:1-27

  • புத்திசாலிகளான கிபியோனியர்கள் சமாதான ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள் (1-15)

  • கிபியோனியர்கள் பொய் சொன்னது தெரியவருகிறது (16-21)

  • விறகும் தண்ணீரும் எடுத்துவர கிபியோனியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் (22-27)

9  யோர்தானின் மேற்குப் பக்கத்திலுள்ள மலைப்பகுதியிலும்+ சேப்பெல்லாவிலும் பெருங்கடலின்* கரையோரம் முழுவதிலும்+ லீபனோனுக்கு முன்னாலும் இருந்த ராஜாக்கள், அதாவது ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களின் ராஜாக்கள், நடந்த சம்பவங்களையெல்லாம் கேள்விப்பட்டார்கள்.  அதனால், யோசுவாவையும் இஸ்ரவேலர்களையும் எதிர்த்துப் போர் செய்வதற்காக அவர்கள் கூட்டுச் சேர்ந்தார்கள்.+  எரிகோ நகரத்துக்கும்+ ஆயி நகரத்துக்கும்+ யோசுவா செய்தவற்றை கிபியோனின் ஜனங்களும்+ கேள்விப்பட்டார்கள்.  அதனால், அவர்கள் சாமர்த்தியமாக நடந்துகொண்டார்கள். உணவுப் பொருள்களைப் பழைய பைகளில் வைத்து கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டார்கள். கிழிந்துபோய்த் தைக்கப்பட்ட திராட்சமது தோல் பைகளையும் ஏற்றிக்கொண்டார்கள்.  பிய்ந்துபோய்த் தைக்கப்பட்ட செருப்புகளையும், நைந்துபோன உடைகளையும் போட்டுக்கொண்டார்கள். காய்ந்துபோய் உதிரும் நிலையில் இருந்த ரொட்டிகளை எடுத்து வைத்துக்கொண்டார்கள்.  கில்காலில் முகாம்போட்டிருந்த+ யோசுவாவிடம் அவர்கள் போனார்கள். அவரையும் மற்ற இஸ்ரவேல் ஆண்களையும் பார்த்து, “ரொம்பத் தூரத்தில் இருக்கிற ஒரு தேசத்திலிருந்து நாங்கள் வந்திருக்கிறோம். தயவுசெய்து எங்களோடு சமாதான ஒப்பந்தம் பண்ணுங்கள்” என்று சொன்னார்கள்.  ஆனால், இஸ்ரவேல் ஆண்கள் அந்த ஏவியர்களிடம்,+ “நாங்கள் எப்படி உங்களோடு ஒப்பந்தம் செய்ய முடியும்?+ ஒருவேளை நீங்கள் பக்கத்து ஊர்க்காரர்களாக இருக்கலாமே” என்று சொன்னார்கள்.  அதற்கு அவர்கள், “நாங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாக இருப்போம்” என்று யோசுவாவிடம் சொன்னார்கள். அப்போது யோசுவா, “நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.  அதற்கு அவர்கள், “உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயர்மேல் வைத்திருக்கிற மரியாதையால் ரொம்பத் தூரத்திலுள்ள ஒரு தேசத்திலிருந்து+ நாங்கள் வந்திருக்கிறோம். அவருடைய புகழையும் எகிப்தில் அவர் செய்த எல்லாவற்றையும் நாங்கள் கேள்விப்பட்டோம்.+ 10  யோர்தானுக்குக் கிழக்கிலிருந்த எமோரியர்களின் ராஜாக்களான எஸ்போனின் ராஜா சீகோனையும்+ அஸ்தரோத்தைச் சேர்ந்த பாசானின் ராஜா ஓகையும்+ நீங்கள் எப்படி வீழ்த்தினீர்கள் என்றுகூட கேள்விப்பட்டோம். 11  அதனால், எங்கள் தேசத்திலுள்ள பெரியோர்களும்* ஜனங்களும் எங்களிடம், ‘வழிப் பயணத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை எடுத்துக்கொண்டு அவர்களைப் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள். “நாங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாக இருப்போம்,+ எங்களோடு சமாதான ஒப்பந்தம் பண்ணுங்கள்”+ என்று அவர்களிடம் சொல்லுங்கள்’ என்றார்கள். 12  எங்கள் வீடுகளிலிருந்து கிளம்பியபோது, இந்த ரொட்டியெல்லாம் சுடச்சுட இருந்தன. ஆனால் இப்போது நீங்களே பாருங்கள், எல்லாம் காய்ந்துபோய் உதிரும் நிலையில் இருக்கின்றன.+ 13  இந்தத் தோல் பைகளில் திராட்சமதுவை நிரப்பியபோது அவை புதிதாக இருந்தன, ஆனால் இப்போது கிழிந்துவிட்டன.+ ரொம்பத் தூரத்திலிருந்து பயணம் செய்துவந்ததால், நாங்கள் போட்டிருக்கிற உடையும் செருப்பும்கூட பழையதாகிவிட்டன” என்று சொன்னார்கள். 14  அப்போது இஸ்ரவேல் ஆண்கள் அவர்களுடைய உணவுப் பொருள்களில் கொஞ்சத்தை வாங்கிப் பார்த்தார்கள். ஆனால், யெகோவாவிடம் எதுவும் விசாரிக்கவில்லை.+ 15  யோசுவா அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்து,+ அவர்களை உயிரோடு விட்டுவிடுவதாக உறுதிமொழி கொடுத்தார். ஜனங்களின் தலைவர்களும் அதேபோல் உறுதிமொழி கொடுத்தார்கள்.+ 16  அவர்களுடன் ஒப்பந்தம் செய்து மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் பக்கத்து ஊர்க்காரர்கள்தான் என்பதை இஸ்ரவேலர்கள் கேள்விப்பட்டார்கள். 17  அதனால் அவர்கள் புறப்பட்டு, மூன்றாம் நாளில் அந்த கிபியோனியர்களின் நகரங்களான கிபியோன்,+ கெப்பிரா, பேரோத், கீரியாத்-யெயாரீம்+ ஆகிய நகரங்களுக்கு வந்துசேர்ந்தார்கள். 18  இஸ்ரவேலர்கள் அவர்களைத் தாக்கவில்லை. ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் ஜனங்களின் தலைவர்கள் அவர்களுக்கு உறுதிமொழி கொடுத்திருந்தார்கள்.+ அதனால், அந்தத் தலைவர்களுக்கு விரோதமாக இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் முணுமுணுத்தார்கள். 19  அப்போது அந்தத் தலைவர்கள் எல்லாரும் ஜனங்களிடம், “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் நாங்கள் அவர்களுக்கு ஏற்கெனவே உறுதிமொழி கொடுத்துவிட்டோம். அதனால் அவர்களைத் தாக்குவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. 20  அவர்களுக்கு உறுதிமொழி கொடுத்திருப்பதால், அவர்களை உயிரோடு விட்டுவிடலாம். இல்லையென்றால் கடவுளுடைய கோபத்துக்கு ஆளாகிவிடுவோம்”+ என்று சொன்னார்கள். 21  அதுமட்டுமல்ல, “அவர்கள் உயிரோடு இருந்து, ஜனங்களுக்காக விறகு வெட்டும் வேலையையும் தண்ணீர் சுமக்கிற வேலையையும் செய்யட்டும்” என்று சொன்னார்கள். ஏனென்றால், அவர்கள் அந்த கிபியோனியர்களுக்கு வாக்குக் கொடுத்திருந்தார்கள். 22  யோசுவா அவர்களைக் கூப்பிட்டு, “எதற்காக எங்களை ஏமாற்றினீர்கள்? எங்களுக்குப் பக்கத்திலேயே குடியிருந்துகொண்டு, ரொம்பத் தூரத்திலிருந்து வந்திருப்பதாக ஏன் சொன்னீர்கள்?+ 23  இனி நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்.+ எப்போதும் அடிமைகளாகத்தான் இருப்பீர்கள். என்னுடைய கடவுளின் வீட்டுக்கு விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் சுமக்கிறவர்களாகவும் இருப்பீர்கள்” என்று சொன்னார். 24  அதற்கு அவர்கள், “இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் கையில் கொடுக்கவும் இங்குள்ள ஜனங்களை அழிக்கவும் உங்கள் கடவுளாகிய யெகோவா தன்னுடைய ஊழியரான மோசேயிடம் கட்டளை கொடுத்திருந்தார் என்பதை நாங்கள் கேள்விப்பட்டோம்.+ அதனால், எங்கள் உயிருக்குப் பயந்து+ இப்படிச் செய்தோம்.+ 25  இப்போது நாங்கள் உங்கள் கையில் இருக்கிறோம்! உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ, எது நல்லதென்று படுகிறதோ அதையே எங்களுக்குச் செய்யுங்கள்” என்று சொன்னார்கள். 26  அப்படியே, யோசுவா அவர்களை இஸ்ரவேலர்களின் கையிலிருந்து காப்பாற்றினார். இஸ்ரவேலர்கள் அவர்களைக் கொல்லவில்லை. 27  ஆனால், அந்த ஜனங்களுக்கும் யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில்+ அவருக்கு அமைக்கப்படுகிற பலிபீடத்துக்கும் தேவைப்படுகிற விறகுகளை வெட்டவும் தண்ணீரைச் சுமக்கவும் யோசுவா அவர்களை அன்றைக்கு நியமித்தார்.+ இன்றுவரை அவர்கள் அந்த வேலைகளைத்தான் செய்துவருகிறார்கள்.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “மத்தியதரைக் கடலின்.”
வே.வா., “மூப்பர்களும்.”