யோனா 4:1-11

  • கோபத்தில் யோனா சாக நினைக்கிறார் (1-3)

  • இரக்கம் காட்ட யோனாவுக்கு யெகோவா கற்றுக்கொடுக்கிறார் (4-11)

    • “நீ இந்தளவுக்குக் கோபப்படுவது நியாயமா?” (4)

    • சுரைக்காய்க் கொடியை வைத்து யோனாவுக்கு யெகோவா பாடம் கற்பிக்கிறார் (6-10)

4  ஆனால், அது யோனாவுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.  அதனால் யெகோவாவிடம், “யெகோவாவே, இப்படி நடக்கும் என்று என்னுடைய தேசத்தில் இருந்தபோதே எனக்குத் தெரியும். அதனால்தான் தர்ஷீசுக்கு+ ஓடிப்போகப் பார்த்தேன். நீங்கள் கரிசனை உள்ளவர்,* எல்லாருக்கும் இரக்கம் காட்டுவீர்கள், சீக்கிரத்தில் கோபப்பட மாட்டீர்கள், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுவீர்கள்,+ யாரையாவது அழிக்க நினைத்தாலும் மனதை மாற்றிக்கொள்வீர்கள்; இதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும்” என்று சொன்னார்.  அதோடு, “யெகோவாவே, தயவுசெய்து என்னைக் கொன்றுவிடுங்கள். நான் வாழ்வதைவிட சாவதே மேல்”+ என்று சொன்னார்.  அதற்கு யெகோவா, “நீ இந்தளவுக்குக் கோபப்படுவது நியாயமா?” என்று கேட்டார்.  பின்பு, யோனா நினிவேயைவிட்டு வெளியே வந்தார். அந்த நகரத்துக்கு என்ன நடக்கும் என்று பார்ப்பதற்காக கிழக்கே ஒரு பந்தல் போட்டு, அதன்கீழ் உட்கார்ந்தார்.+  யோனாவுக்கு நிழல் கொடுப்பதற்காகவும், அவருடைய சோகத்தைத் தீர்ப்பதற்காகவும் யெகோவா ஒரு சுரைக்காய்க் கொடியை* வளர வைத்தார். அதைப் பார்த்து யோனா ரொம்பவே சந்தோஷப்பட்டார்.  ஆனால் அடுத்த நாள் விடியற்காலையில், கடவுள் ஒரு புழுவை வர வைத்தார். அது அந்தச் சுரைக்காய்க் கொடியை அரித்துத் தின்றதால், கொடி பட்டுப்போனது.  வெயில் ஏற ஆரம்பித்தபோது கிழக்கிலிருந்து அனல் காற்றைக் கடவுள் வீச வைத்தார். மண்டையைப் பிளக்கும் வெயிலில் யோனாவுக்கு மயக்கமே வந்துவிடும்போல் இருந்தது. “என்னைக் கொன்றுவிடுங்கள்! நான் வாழ்வதைவிட சாவதே மேல்”+ என்று புலம்பிக்கொண்டே இருந்தார்.  அப்போது யோனாவிடம் கடவுள், “ஒரு சுரைக்காய்க் கொடிக்காக நீ இந்தளவுக்குக் கோபப்படுவது நியாயமா?”+ என்று கேட்டார். அதற்கு யோனா, “ஆமாம், நியாயம்தான்; செத்துவிடலாம் என்கிற அளவுக்குக் கோபம் கோபமாக வருகிறது” என்று சொன்னார். 10  ஆனால் யெகோவா அவரிடம், “அந்தச் சுரைக்காய்க் கொடிக்காக நீ பாடுபடவும் இல்லை, அதை வளர வைக்கவும் இல்லை. அது ஒரே ராத்திரியில் வளர்ந்து, ஒரே ராத்திரியில் பட்டுப்போனது. சாதாரண ஒரு கொடிக்காக நீ இப்படி வருத்தப்படுகிறாயே, 11  நல்லது கெட்டது தெரியாத* 1,20,000-க்கும் அதிகமான மனுஷர்களும் கணக்குவழக்கில்லாத மிருகங்களும் வாழ்கிற நினிவே மாநகரத்துக்காக+ நான் வருத்தப்படாமல் இருப்பேனா?”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “உங்களுக்கு ரொம்பவும் இளகின மனசு.”
அல்லது, “ஆமணக்கு செடியை.”
வே.வா., “வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத.”