யோபு 11:1-20

  • சோப்பார் முதல் தடவையாகப் பேசுகிறான் (1-20)

    • அர்த்தமில்லாமல் பேசுவதாக யோபுவைக் குற்றப்படுத்துகிறான் (2, 3)

    • தப்பு செய்வதை விட்டுவிடும்படி யோபுவிடம் சொல்கிறான் (14)

11  அதற்கு நாகமாத்தியனான சோப்பார்,+   “நீ என்ன பேசினாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறாயா?ஒருவன் நிறைய* பேசுகிறான் என்பதற்காக நியாயமாகப் பேசுகிறான் என்று அர்த்தமா?   அர்த்தமில்லாமல் பேசி மற்றவர்களின் வாயை அடைக்கப் பார்க்கிறாயா? நீ கிண்டலாகப் பேசுவதை+ யாரும் தட்டிக்கேட்க மாட்டார்களா?   நீ கடவுளிடம், ‘நான் பேசுவதெல்லாம்* உண்மை,+உங்கள் பார்வையில் சுத்தமாக இருக்கிறேன்’+ என்று சொல்கிறாய்.   ஆனால், கடவுளே உன்னிடம் பேசி,உனக்குப் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்!+   ஞானத்தின் ரகசியங்களை அவர் உனக்கு வெளிப்படுத்துவார்.அதைப் பற்றிய பல விஷயங்களை உனக்குப் புரிய வைப்பார். நீ செய்கிற எல்லா குற்றங்களையும் அவர் கணக்கு வைப்பதில்லை என்று அப்போது புரிந்துகொள்வாய்.   சர்வவல்லமையுள்ளவரைப் பற்றி நீ முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியுமா?அவரைப் பற்றிய ஆழமான விஷயங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியுமா?   ஞானம் வானத்தைவிட உயர்ந்தது. உன்னால் என்ன செய்ய முடியும்? அது கல்லறையைவிட ஆழமானது. உனக்கு என்ன புரியும்?   அது பூமியைவிட நீளமானது.கடலைவிட அகலமானது. 10  அவர் வந்து ஒருவனைப் பிடித்து விசாரணைக்கு நிறுத்தலாம்.அவரை யாரால் எதிர்க்க முடியும்? 11  மனுஷன் பித்தலாட்டம் செய்வது அவருக்குத் தெரியாதா? அவர் தீமையைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருப்பாரா? 12  காட்டுக் கழுதையால் எப்படி மனுஷனைப் பெற்றெடுக்க* முடியும்?அதுபோல், புத்தி இல்லாதவனுக்கு எப்படிப் புத்தி வரும்? 13  நீ உன் இதயத்தைப் பக்குவப்படுத்து.*கைகளை விரித்து அவரிடம் ஜெபம் செய். 14  ஏதாவது தப்பு செய்துகொண்டிருந்தால், அதை விட்டுவிடு.உன் கூடாரங்களில் அக்கிரமத்துக்கு இடம் கொடுக்காதே. 15  அப்போதுதான், நீ குற்றம் இல்லாதவனாகத் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.பயமே இல்லாமல் உறுதியாக நிற்க முடியும். 16  பின்பு உன் கவலையை மறந்துவிடுவாய்.உன்னைக் கடந்துபோன வெள்ளம் போல அதை நினைப்பாய். 17  உன் வாழ்க்கை பட்டப்பகலைவிட பிரகாசமாக இருக்கும்.இருண்ட நேரங்கள்கூட காலைபோல் வெளிச்சமாக இருக்கும். 18  நீ நம்பிக்கை பெற்று தைரியமாக இருப்பாய்.சுற்றிலும் ஆபத்து இல்லாததைப் பார்த்து, பாதுகாப்பாகப் படுத்துக்கொள்வாய். 19  யாருடைய பயமும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்குவாய்.உதவி கேட்டு பலர் உன்னைத் தேடி வருவார்கள். 20  ஆனால், கெட்டவர்களின் கண்கள் மங்கிப்போகும்.ஓடி ஒளிய அவர்களுக்கு இடமே இருக்காது.சாவை மட்டும்தான் அவர்கள் எதிர்பார்க்க முடியும்”+ என்று சொன்னான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “பெருமை.”
வே.வா., “போதிப்பதெல்லாம்.”
வே.வா., “காட்டுக்கழுதை எப்படி மனுஷனாகப் பிறக்க.”
வே.வா., “தயார்படுத்து.”