யோபு 13:1-28

  • யோபுவின் பதில் தொடர்கிறது (1-28)

    • ‘கடவுளிடம் பேசுவதுதான் நல்லது’ (3)

    • “நீங்கள் எதற்கும் லாயக்கில்லாத வைத்தியர்கள்” (4)

    • “என் பங்கில் நியாயம் இருப்பது எனக்குத் தெரியும்” (18)

    • தன்னைக் கடவுள் ஓர் எதிரிபோல் நினைப்பதாகச் சொல்கிறார் (24)

13  பின்பு அவர்,“இதையெல்லாம் என் கண்ணாலேயே பார்த்துவிட்டேன்.என் காதாலேயே கேட்டுப் புரிந்துகொண்டேன்.   உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கும் தெரியும்.நான் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவன் இல்லை.   உங்களிடம் பேசுவதைவிட சர்வவல்லமையுள்ளவரிடம் பேசுவதுதான் நல்லது.அவரோடு வழக்காடவே நான் விரும்புகிறேன்.+   நீங்கள் என்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறீர்கள்.நீங்கள் எதற்கும் லாயக்கில்லாத வைத்தியர்கள்.+   நீங்கள் வாயே திறக்காமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!அதுதான் நீங்கள் செய்கிற ஞானமான காரியமாக இருக்கும்.+   தயவுசெய்து என் பக்கம் இருக்கிற நியாயத்தைக் கேளுங்கள்.என்னுடைய விவாதத்தைக் கவனித்துக் கேளுங்கள்.   கடவுள் சார்பில் பேசுவதாகச் சொல்லிக்கொண்டுஅநியாயமாகவும் போலித்தனமாகவும் பேசுவீர்களோ?   நீங்கள் அவருடைய பக்கம் இருக்கிறீர்களோ?உண்மைக் கடவுளுக்காக வாதாடுகிறீர்களோ?   அவர் சோதித்துப் பார்க்கும்போது, உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றா நினைக்கிறீர்கள்?+ சாதாரண மனுஷனை முட்டாளாக்குவதுபோல் அவரை முட்டாளாக்கவா பார்க்கிறீர்கள்? 10  நீங்கள் ரகசியமாய் ஓரவஞ்சனையோடு நடந்துகொண்டால்,அவர் உங்களைக் கடுமையாகக் கண்டிப்பார்.+ 11  அவருடைய மகிமையால் மிரண்டுபோவீர்கள்.அவர்மேல் உள்ள பயத்தால் குலைநடுங்குவீர்கள். 12  உங்களுடைய தத்துவங்கள், வெறும் சாம்பல்தான்.உங்களுடைய வாதங்கள், வெறும் களிமண் கேடயங்கள்தான். 13  நான் பேசி முடிக்கும்வரை கொஞ்சம் அமைதியாக இருங்கள். அதற்குப்பின், எனக்கு நடப்பது நடக்கட்டும். 14  நானாகவே ஏன் ஆபத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்?என் கையாலேயே என் உயிரை ஏன் எடுக்க வேண்டும்? 15  கடவுள் என்னை வெட்டிப்போட்டால்கூட, அவர்மேல் நம்பிக்கையாக இருப்பேன்.+அவருடைய முகத்துக்கு நேராகவே என் நியாயத்தை எடுத்துச் சொல்வேன். 16  அப்போது, அவர் என்னை மீட்பார்.+கெட்டவர்கள்* யாரும் அவர் முன்னால் வர முடியாதே.+ 17  என் வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்.நான் சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். 18  இதோ, என் வாதங்களை எடுத்துச் சொல்லத் தயாராகிவிட்டேன்.என் பங்கில் நியாயம் இருப்பது எனக்குத் தெரியும். 19  யார் என்னை எதிர்த்து வழக்காடப் போகிறீர்கள்? நான் எதுவும் பேசாமல் இருந்தால் செத்தே போய்விடுவேன்.* 20  கடவுளே, என்னுடைய இரண்டு வேண்டுகோள்களை மட்டும் நிறைவேற்றுங்கள்.அப்போதுதான் உங்களிடமிருந்து ஒளிந்துகொள்ள மாட்டேன். 21  இனியும் உங்கள் கையால் என்னைக் கசக்கிப்பிழியாதீர்கள்.என்னைப் பயந்து நடுங்க வைக்காதீர்கள்.+ 22  நீங்கள் பேசுங்கள், நான் பதில் சொல்கிறேன்.இல்லையென்றால், நான் பேசுகிறேன், நீங்கள் பதில் சொல்லுங்கள். 23  நான் என்ன குற்றம் செய்தேன்? என்ன பாவம் செய்தேன்? எதுவாக இருந்தாலும் எனக்குச் சொல்லுங்கள். 24  உங்கள் முகத்தை ஏன் திருப்பிக்கொள்கிறீர்கள்?*+என்னை ஏன் எதிரியாக நினைக்கிறீர்கள்?+ 25  காற்றில் அடித்துச் செல்லப்படும் இலையை நீங்கள் பயமுறுத்துவீர்களா?ஒரு துரும்பைத் துரத்திக்கொண்டு போவீர்களா? 26  எனக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுதி வைக்கிறீர்களே.சிறுவயதில் நான் செய்த தவறுகளுக்காக என்னைத் தண்டிக்கிறீர்களே. 27  நீங்கள் என் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவிட்டீர்கள்.என் வழிகளையெல்லாம் துருவித் துருவிப் பார்க்கிறீர்கள்.என் காலடித் தடங்களையெல்லாம் தேடிப் பார்க்கிறீர்கள். 28  மனுஷன்* உருக்குலைந்து போகிறானே! பூச்சி அரித்த துணிபோல் அழிந்துபோகிறானே!” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “கடவுளைவிட்டு விலகியவர்கள்; விசுவாசதுரோகிகள்.”
அல்லது, “யாராவது அப்படிச் செய்ய முடியுமென்றால், நான் அமைதியாக இருந்து உயிரை விட்டுவிடுகிறேன்.”
நே.மொ., “மறைத்துக்கொள்கிறீர்கள்.”
நே.மொ., “அவன்.” ஒருவேளை யோபுவைக் குறிக்கலாம்.