யோபு 15:1-35

  • எலிப்பாஸ் இரண்டாவது தடவையாகப் பேசுகிறான் (1-35)

    • யோபுவுக்குக் கடவுள் பயமே இல்லை என்று சொல்கிறான் (4)

    • யோபுவை அகங்காரம் பிடித்தவன் என்று சொல்கிறான் (7-9)

    • “பரிசுத்த தூதர்களையே கடவுள் நம்புவது கிடையாது” (15)

    • ‘அக்கிரமம் செய்கிறவன் அவஸ்தைப்படுகிறான்’ (20-24)

15  அதற்கு தேமானியனான எலிப்பாஸ்,+   “புத்திசாலி எப்போதாவது விதண்டாவாதம் செய்வானா?மனதில் கெட்ட எண்ணங்களை வளர்ப்பானா?*   வெறும் வார்த்தைகளால் குத்திக்காட்டுவதில் எந்த லாபமும் இல்லை.வெட்டிப் பேச்சு பேசுவதில் பிரயோஜனமே இல்லை.   நீ பேசுவதைக் கேட்டால், கடவுள்பயமே இல்லாமல் போய்விடும்.அவரைப் பற்றி நினைக்கவே மனம் வராது.   நீ தப்பு செய்திருப்பதால்தான் இப்படியெல்லாம் பேசுகிறாய்.ரொம்பவே சாமர்த்தியமாகப் பேசுகிறாய்.   உன்மேல் குற்றம் இருப்பதாக நானா சொல்கிறேன்? நீயேதான் சொல்லிக்கொள்கிறாய்.உன் வாயே உனக்கு எதிராகச் சாட்சி சொல்கிறது.+   நீதான் இந்த உலகத்தில் முதன்முதலாகப் பிறந்தாயோ?மலைகள் உண்டாவதற்கு முன்பே பிறந்துவிட்டாயோ?   கடவுள் ரகசியம் பேசுவதைக்கூட உன்னால் கேட்க முடிகிறதோ?நீ மட்டும்தான் ஞானி என்று நினைக்கிறாயோ?   எங்களுக்குத் தெரியாத என்ன விஷயம் உனக்குத் தெரிந்துவிட்டது?+ எங்களுக்குப் புரியாத என்ன விஷயம் உனக்குப் புரிந்துவிட்டது? 10  உன் அப்பாவைவிட ரொம்பவே மூத்தவர்களும் நரைமுடி உள்ளவர்களும்அனுபவம் உள்ளவர்களும்+ எங்களோடு இருக்கிறார்கள். 11  கடவுள் தருகிற ஆறுதல் உனக்குப் போதாதா?உன்னிடம் மென்மையாகச் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்க மாட்டாயா? 12  உனக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது?பார்க்கிற பார்வையிலேயே எரித்துவிடுவாய் போலிருக்கிறதே! 13  கடவுளையே கோபித்துக்கொள்கிறாயே!வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறாயே! 14  அற்ப மனுஷன் பரிசுத்தமாக இருக்க முடியுமா?மண்ணில் பிறந்தவன் நீதிமானாக இருக்க முடியுமா?+ 15  பரிசுத்த தூதர்களையே கடவுள் நம்புவது கிடையாது.பரலோகம்கூட அவர் பார்வையில் பரிசுத்தமாக இல்லை.+ 16  அப்படியிருக்கும்போது, அருவருப்பும் அக்கிரமமும் நிறைந்த மனுஷன் எந்த மூலைக்கு?+அநீதி செய்யத் துடிக்கிறவன்* எந்த மூலைக்கு? 17  நான் உனக்கு விளக்குகிறேன், கொஞ்சம் கேள்! இதுவரை நான் பார்த்ததை வைத்துச் சொல்கிறேன், கொஞ்சம் கவனி! 18  இதெல்லாம் ஞானிகள் சொன்ன விஷயங்கள்.அவர்களுடைய முன்னோர்கள் அவர்களுக்கு மறைக்காமல் சொன்ன விஷயங்கள்.+ 19  அந்த முன்னோர்களுக்கு மட்டும்தான் தேசம் கொடுக்கப்பட்டது.அன்னியர்கள் யாரும் அங்கு நடமாடவில்லை. 20  அக்கிரமம் செய்கிறவன் ஆயுசு முழுக்க அவஸ்தைப்படுகிறான்.கொடுமை செய்கிறவன் காலமெல்லாம் கஷ்டப்படுகிறான். 21  காதில் என்ன சத்தம் விழுந்தாலும் அவன் மிரண்டுபோகிறான்.+அமைதியான காலத்தில்கூட கொள்ளைக்கூட்டத்திடம் சிக்குகிறான். 22  இருட்டிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையே அவனுக்கு இல்லை.+அவன் வாளால் சாவது உறுதி. 23  அவன் சாப்பாட்டுக்காகக் கூப்பாடு போட்டுக்கொண்டு சுற்றித் திரிகிறான். இருண்ட நாள் சீக்கிரத்தில் வரப்போவது அவனுக்குத் தெரியும். 24  வேதனையும் கவலையும் அவனை ஆட்டிப்படைக்கின்றன.ராஜா ஒரு நாட்டைப் பிடிப்பதுபோல் அவை அவனைப் பிடித்துக்கொள்கின்றன. 25  அவன்தான் கடவுளையே எதிர்க்கிறானே!சர்வவல்லமையுள்ளவருக்கே சவால்விடப் பார்க்கிறானே!* 26  கடவுளுடன் மோதியே தீர வேண்டும் என்று ஓட்டமாய் ஓடுகிறான்.பலமான கேடயத்துடன் பாய்ந்து போகிறான். 27  அவனுக்கு உடம்பெல்லாம் கொழுப்பு.அவன் வயிறு தொந்திவிட்டிருக்கிறது. 28  அவனுடைய நகரம் அழிக்கப்படும்.அவன் வீடு இடிந்துவிழும்.அங்கே யாரும் குடியிருக்க மாட்டார்கள். 29  அவனால் வசதியாக வாழ முடியாது; பணமும் பொருளும் சேர்க்க முடியாது.ஊரெல்லாம் சொத்துகளை வைத்திருக்க முடியாது. 30  இருளிலிருந்து அவன் தப்பிக்க மாட்டான்.அவனுடைய துளிர்* கருகிவிடும்.கடவுள் ஒரு ஊது ஊதியதும் அவன் காணாமல் போய்விடுவான்.+ 31  அவன் வீணானதை நம்பி அதன் பின்னால் போகக் கூடாது.அப்படிப் போனால், வீணான பலன்தான் அவனுக்குக் கிடைக்கும். 32  அவனுடைய நாளுக்கு முன்பே அது நடக்கும்.அவனுடைய கிளைகள் ஒருநாளும் செழிக்காது.+ 33  பிஞ்சுகள் உதிர்ந்த திராட்சைக் கொடிபோல் அவன் இருப்பான்.பூக்கள் உதிர்ந்த ஒலிவ மரம்போல் இருப்பான். 34  கெட்டவர்களின்* வாழ்க்கை வெறுமையானது.+லஞ்சம் வாங்குகிறவர்களின் கூடாரங்கள் சாம்பலாகும். 35  அவர்கள் கெட்டதை நினைக்கிறார்கள், கெட்டதைச் செய்கிறார்கள்.மற்றவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்றே எப்போதும் யோசிக்கிறார்கள்” என்று சொன்னான்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “தன் வயிற்றைக் கிழக்குக் காற்றால் நிரப்புவானா?” கிழக்குக் காற்று என்பது பாலைவனங்களிலிருந்து வீசும் கொடிய வெப்பக் காற்றைக் குறிக்கிறது.
நே.மொ., “அநியாயத்தைத் தண்ணீர்போல் குடிக்கிறவன்.”
வே.வா., “சர்வவல்லமையுள்ளவரையே ஜெயிக்கப் பார்க்கிறானே!”
அதாவது, “பழையபடி நல்ல நிலைமை வருமென்ற நம்பிக்கை.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவர்களின்; விசுவாசதுரோகிகளின்.”