யோபு 16:1-22

  • யோபுவின் பதில் (1-22)

    • ‘ஆறுதல்படுத்துவதற்குப் பதிலாக நீங்கள் என் மனதை நோகடிக்கிறீர்கள்’ (2)

    • தன்னைத் தாக்குவதிலேயே கடவுள் குறியாய் இருப்பதாக யோபு சொல்கிறார் (12)

16  அதற்கு யோபு,   “நான் இதுபோல் எவ்வளவோ கேட்டிருக்கிறேன். ஆறுதல்படுத்துவதற்குப் பதிலாக நீங்கள் எல்லாரும் என் மனதை நோகடிக்கிறீர்களே.+   அர்த்தமில்லாத பேச்சுக்கு ஒரு முடிவே இல்லை. என்னிடம் ஏன் இப்படி எரிந்து விழுகிறீர்கள்?   எனக்கும் உங்களைப் போலப் பேசத் தெரியும். என்னுடைய இடத்தில் நீங்கள் இருந்தால்என்னாலும் உங்களுக்கு எதிராகச் சாமர்த்தியமாய்ப் பேச முடியும்.கிண்டலாக உங்களைப் பார்த்துத் தலையசைக்க முடியும்.+   ஆனால் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்; உங்களைத் தைரியப்படுத்துவேன்.ஆறுதல் சொல்லி உங்கள் கவலைகளைப் போக்குவேன்.+   நான் இப்படி என்னதான் பேசினாலும் என் வலி தணிவதில்லை.+பேசுவதை நிறுத்தினாலும் அது குறைவதில்லை.   கடவுள் என்னைச் சோகத்தில் தள்ளிவிட்டார்.+எனக்கென்று இருந்த* எல்லாரையும் அழித்துவிட்டார்.   இப்போதும் அவர் என்னை ஆட்டிப்படைப்பதை மற்றவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள்.தப்பு செய்ததற்குத் தண்டனையாகத்தான் எலும்பும் தோலுமாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்.   கோபத்தில் அவர் என்னை நார்நாராகக் கிழித்துவிட்டார்; என்மேல் வெறியோடு இருக்கிறார்.+ என்னைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடிக்கிறார். என் எதிரிகளின் கண்கள் என்னைக் குத்திக் கிழிக்கின்றன.+ 10  அவர்கள் என்னைப் பற்றி இல்லாததையெல்லாம் சொல்கிறார்கள்.+கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்துகிறார்கள்.எனக்கு எதிராக ஒரு பெரிய கூட்டமே திரண்டிருக்கிறது.+ 11  கடவுள் என்னைப் பொடியன்களிடம் ஒப்படைத்தார்.கெட்டவர்களின் கையில் கொடுத்தார்.+ 12  கவலையில்லாமல் இருந்த என்னை நொறுக்கினார்.+கழுத்தைப் பிடித்துத் தள்ளி என்னை மிதித்தார்.என்னைத் தாக்குவதிலேயே குறியாக இருந்தார். 13  அவருடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.+அவர் ஈவிரக்கமே இல்லாமல் அம்புகளால் என்னை ஆழமாக* துளைக்கிறார்.+என் பித்தநீரைத் தரையில் ஊற்றுகிறார். 14  மதிலைத் துளைப்பதுபோல் என்னை மாறிமாறி துளைக்கிறார்.போர்வீரனைப் போல் என்மேல் பாய்கிறார். 15  நான் போட்டுக்கொள்வதற்குத் துக்கத் துணியை* தைத்தேன்.+என் மானம் மரியாதையைக் குழிதோண்டிப் புதைத்தேன்.+ 16  அழுது அழுது என் முகம் சிவந்துவிட்டது.+கண்ணீர் சிந்தி சிந்தி என் கண்கள் வீங்கிவிட்டன.* 17  இத்தனைக்கும், நான் வன்முறையில் இறங்கியதே இல்லை.சுத்தமான மனதோடுதான் ஜெபம் செய்கிறேன். 18  மண்ணே, என் இரத்தத்தை மூடி மறைக்காதே!+ அது எனக்காக ஓயாமல் கதறட்டும்! 19  இதோ, எனக்குச் சாட்சி சொல்பவர் பரலோகத்தில் இருக்கிறார்.எனக்காக வாதாடுபவர் மேலே இருக்கிறார். 20  என் நண்பர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள்.+நான் கடவுளிடம் கண்ணீர்விட்டுக் கெஞ்சுகிறேன்.*+ 21  மனுஷனுக்கும் மனுஷனுக்கும் இடையே உள்ள வழக்கை இன்னொரு மனுஷன் தீர்த்துவைப்பது உண்டு.அதுபோலவே, எனக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள வழக்கை யாராவது தீர்த்துவைக்கட்டும்.+ 22  இன்னும் சில வருஷங்கள்தான் நான் வாழப்போகிறேன்.அதன்பின், திரும்பிவர முடியாத இடத்துக்குப் போய்விடுவேன்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “என்னோடு கூடி வாழ்ந்த.”
நே.மொ., “என் சிறுநீரகங்களை.”
வே.வா., “என் கண்களில் சாவு நிழலாடுகிறது.”
அல்லது, “நான் கண் மூடாமல் கடவுளுக்காகக் காத்திருக்கிறேன்.”