யோபு 2:1-13

  • யோபுவின் உள்நோக்கத்தைப் பற்றி சாத்தான் மறுபடியும் கேள்வி எழுப்புகிறான் (1-5)

  • யோபுவின் உடலைத் தாக்க சாத்தான் அனுமதிக்கப்படுகிறான் (6-8)

  • ‘கடவுளைத் திட்டித் தீர்த்துவிட்டு செத்துப்போங்கள்!’ என்று யோபுவின் மனைவி சொல்கிறாள் (9, 10)

  • யோபுவின் மூன்று நண்பர்கள் வருகிறார்கள் (11-13)

2  பின்பு ஒருநாள், தேவதூதர்கள்*+ யெகோவாவின் முன்னால் வந்து நின்றார்கள்.+ சாத்தானும் அவர்களோடு வந்து யெகோவாவின் முன்னால் நின்றான்.+  அப்போது யெகோவா சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன் யெகோவாவிடம், “பூமியெங்கும் சுற்றித் திரிந்துவிட்டு வருகிறேன்”+ என்று சொன்னான்.  அப்போது யெகோவா, “என் ஊழியன் யோபுவைக் கவனித்தாயா? பூமியில் அவனைப் போல் யாருமே இல்லை. அவன் நேர்மையானவன், உத்தமன்.*+ அவன் எனக்குப் பயந்து நடக்கிறான், கெட்டதை வெறுத்து ஒதுக்குகிறான். காரணமில்லாமல் அவனை அழிப்பதற்காக நீ என்னைத் தூண்டிவிடப் பார்த்தாலும்,+ அவன் இன்னமும் எனக்கு உத்தமமாகவே இருக்கிறான்”+ என்று சொன்னார்.  ஆனால் சாத்தான் யெகோவாவிடம், “ஒரு மனுஷன் எந்த உயிரையும்விட தன்னுடைய உயிரைத்தான் பெரிதாக நினைப்பான். அதைக் காப்பாற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராயிருப்பான்.*  அதனால், நீங்கள் அவனுடைய எலும்பையும் சதையையும் தொட்டுப் பாருங்கள்.* கண்டிப்பாக உங்கள் முகத்துக்கு நேராகவே உங்களைத் திட்டித் தீர்ப்பான்”+ என்று சொன்னான்.  அதற்கு யெகோவா, “அவனை உன் கையில் விட்டுவிடுகிறேன், அவன் உயிரை மட்டும் எடுத்துவிடாதே” என்று சொன்னார்.  உடனே, சாத்தான் யெகோவாவின் முன்னிலையிலிருந்து புறப்பட்டுப் போய், யோபுவை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை கொடிய கொப்புளங்களால் வாட்டி வதைத்தான்.+  யோபு தன் உடம்பிலிருந்த கொப்புளங்களைச் சுரண்டுவதற்காக, உடைந்துபோன ஓடு ஒன்றை எடுத்துக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தார்.+  அப்போது அவருடைய மனைவி, “இன்னுமா கடவுள் கடவுள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்?* அவரைத் திட்டித் தீர்த்துவிட்டு செத்துப்போங்கள்!” என்று சொன்னாள். 10  ஆனால் யோபு, “நீ பைத்தியக்காரிபோல் பேசுகிறாய். கடவுள் கொடுக்கிற நல்லதை மட்டும் ஏற்றுக்கொண்டு, கஷ்டத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாமா?”+ என்று கேட்டார். இதெல்லாம் நடந்தும்கூட, அவர் தன் வாயால் பாவம் செய்யவில்லை.+ 11  தேமானியனான எலிப்பாஸ்,+ சுவாகியனான+ பில்தாத்,+ நாகமாத்தியனான சோப்பார்+ ஆகிய மூன்று பேரும் யோபுவின் நண்பர்கள்.* அவருக்கு வந்த கஷ்டங்களைப் பற்றியெல்லாம் அவர்கள் கேள்விப்பட்டபோது, அவரவர் வீடுகளிலிருந்து புறப்பட்டு வந்து ஓர் இடத்தில் சந்தித்தார்கள். யோபுவைப் போய்ப் பார்த்து அவருக்கு அனுதாபம் காட்டவும் ஆறுதல் சொல்லவும் முடிவு செய்தார்கள். 12  யோபுவைத் தூரத்திலிருந்து பார்த்தபோது அவர்களுக்கு அடையாளமே தெரியவில்லை. உடனே, ஓவென்று கத்தி அழ ஆரம்பித்தார்கள். பின்பு, தங்களுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, மண்ணை வாரி தங்கள் தலையில் போட்டுக்கொண்டார்கள்.+ 13  பின்பு, ஏழு நாட்கள் ராத்திரி பகலாக அவரோடு தரையில் உட்கார்ந்துகொண்டார்கள். யோபு வலியில் பயங்கரமாய்த் துடித்ததை அவர்கள் பார்த்ததால் யாரும் அவரிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “உண்மைக் கடவுளின் மகன்கள்.”
வே.வா., “குற்றமற்றவன்.”
நே.மொ., “தோலுக்குத் தோல். ஒரு மனுஷன் தன் உயிருக்காகத் தன்னிடம் இருக்கிற எல்லாவற்றையும் கொடுப்பான்.”
வே.வா., “தாக்கிப் பாருங்கள்.”
வே.வா., “இன்னுமா உங்கள் உத்தமத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?”
வே.வா., “யோபுவுக்குத் தெரிந்தவர்கள்.”