யோபு 21:1-34

  • யோபுவின் பதில் (1-34)

    • ‘கெட்டவர்கள் ஏன் நன்றாக வாழ்கிறார்கள்?’ (7-13)

    • “ஆறுதல் சொல்ல வந்தவர்களின்” எண்ணத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார் (27-34)

21  அதற்கு யோபு,   “நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.அப்படிக் கேட்டாலே நீங்கள் எனக்கு ஆறுதல் சொல்வதுபோல் இருக்கும்.   கொஞ்ச நேரம் நான் பேசுவதைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.அதன் பின்பு என்னை எப்படி வேண்டுமானாலும் கேலி செய்யுங்கள்.+   ஒரு மனுஷனிடமா என் குறையைச் சொல்கிறேன்? அப்படிச் சொல்லியிருந்தால், பொறுமை இழந்திருப்பேனே.   என்னை உற்றுப் பாருங்கள், அப்போது ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.   நடந்ததையெல்லாம் நினைக்கும்போது என் மனம் படபடக்கிறது.உடம்பெல்லாம் நடுநடுங்குகிறது.   கெட்டவர்கள் ஏன் ஒழிந்துபோவதில்லை?+அவர்கள் சொத்துசுகத்தோடு* ரொம்ப நாள் வாழ்கிறார்கள்.+   எப்போதும் பிள்ளைகளோடு சேர்ந்து இருக்கிறார்கள்.பேரப்பிள்ளைகளைப் பார்க்கும் பாக்கியமும் அவர்களுக்குக் கிடைக்கிறது.   எந்தப் பயமும் இல்லாமல் வீட்டில் பத்திரமாக இருக்கிறார்கள்.+கடவுள் அவர்களுக்குத் தண்டனை கொடுப்பதில்லை. 10  அவர்களுடைய காளைகள் இணைசேருவது வீணாவதில்லை.அவர்களுடைய பசுக்களுக்கு நல்லபடியாகக் கன்றுகள் பிறக்கின்றன.* 11  அவர்களுடைய பிள்ளைகள் ஆடுகளைப் போல வெளியே துள்ளி ஓடுகிறார்கள்.சந்தோஷத்தில் குதித்தாடுகிறார்கள். 12  கஞ்சிராவையும் யாழையும் வைத்துக்கொண்டு பாடுகிறார்கள்.குழல் ஓசையைக் கேட்டு சந்தோஷப்படுகிறார்கள்.+ 13  திருப்தியாக வாழ்கிறார்கள்.நிம்மதியாக* கல்லறைக்குப் போகிறார்கள். 14  ஆனால் அவர்கள் உண்மைக் கடவுளிடம், ‘எங்களை விட்டுவிடுங்கள்! உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள எங்களுக்கு விருப்பமே இல்லை’ என்று சொல்கிறார்கள்.+ 15  அதோடு, ‘சர்வவல்லமையுள்ளவரா? யார் அவர்? அவரை நாங்கள் ஏன் வணங்க வேண்டும்?+ அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதால் எங்களுக்கு என்ன பிரயோஜனம்?’ என்று கேட்கிறார்கள்.+ 16  ஆனால், அவர்களுடைய செல்வச்செழிப்பு அவர்கள் கையில் இல்லை என்று எனக்குத் தெரியும்.+ பொல்லாதவர்களைப் போல் நான் யோசிப்பதே* கிடையாது.+ 17  பொல்லாதவர்களுடைய வாழ்க்கை எப்போதாவது இருண்டுபோயிருக்கிறதா?*+ அவர்களுக்கு எப்போதாவது ஆபத்து வந்திருக்கிறதா? கடவுள் அவர்களை எப்போதாவது கோபத்தில் அழித்திருக்கிறாரா? 18  அவர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படும் துரும்பைப் போலக் காணாமல்போகிறார்களா?புயல்காற்றில் பறந்துபோகும் பதரைப் போல மறைந்துபோகிறார்களா? 19  ஒருவனுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையை அவனுடைய மகன்களுக்குக் கடவுள் கொடுப்பார். ஆனால், அவனுடைய தப்பை உணர்த்துவதற்காக அவனையே கடவுள் தண்டிக்கட்டும்.+ 20  அவனுக்கு வருகிற அழிவை அவனே பார்க்கட்டும். சர்வவல்லமையுள்ளவரின் கோபக் கிண்ணத்திலிருந்து அவன் குடிக்கட்டும்.+ 21  அவன் கொஞ்சக் காலம்தான் வாழப்போகிறான்+ என்றால்,பிள்ளைகளைப் பற்றி அவனுக்கு என்ன கவலை? 22  கடவுளுக்கு யார் கற்றுத்தர* முடியும்?+உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்குக்கூட அவர்தானே தீர்ப்பு கொடுக்கிறார்?+ 23  ஒருவன் இளமைத்துடிப்போடு இருக்கும்போது,கவலையே இல்லாமல் நிம்மதியாக இருக்கும்போது,+ 24  தொடைகள் கொழுத்திருக்கும்போது,எலும்புகள் பலமாக இருக்கும்போது செத்துப்போகிறான்.+ 25  ஆனால், இன்னொருவன் நல்லது எதையுமே அனுபவிக்காமல்வேதனைக்குமேல் வேதனைப்பட்டு சாகிறான். 26  இவர்கள் இரண்டு பேருமே மண்ணுக்குத்தான் போகிறார்கள்.+இரண்டு பேருமே புழுபுழுத்துப் போகிறார்கள்.+ 27  இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.எனக்குக் கெடுதல் செய்ய* திட்டம் போடுகிறீர்கள்.+ 28  ‘அதிபதியின் வீடு அழிந்துவிட்டதே!கெட்டவனின் கூடாரம் காணாமல் போய்விட்டதே!’ என்று நீங்கள் சொல்கிறீர்கள்.+ 29  ஊர் ஊராகப் பயணம் செய்பவர்களிடம் நீங்கள் கேட்கவில்லையா?அவர்கள் சொன்னதையெல்லாம் கவனமாக யோசித்துப் பார்க்கவில்லையா? 30  அழிவு நாளில் கெட்டவனுக்கு ஒன்றும் ஆவதில்லை, கடும் கோபத்தின் நாளில் அவன் தப்பித்துக்கொள்கிறான் என்றுதானே அவர்கள் சொல்லியிருப்பார்கள். 31  கெட்டவன் செய்கிற தவறுகளை யாராவது தட்டிக்கேட்கிறார்களா?அவனுக்கு யாராவது தண்டனை கொடுக்கிறார்களா? 32  அவன் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவான்.அவனுடைய சமாதிக்குக் காவல் வைக்கப்படும். 33  மண்ணுக்குள் படுத்திருப்பது அவனுக்குச் சொகுசாக இருக்கும்.+அவனுக்குமுன் கணக்குவழக்கு இல்லாத ஆட்கள் அங்கே போயிருக்கிறார்கள்.+அவனுக்குப் பின்னும் மனுஷர்கள் எல்லாரும் அங்குதான் போவார்கள். 34  அதனால், ஏன் வீணாக எனக்கு ஆறுதல் சொல்கிறீர்கள்?+ உங்கள் பேச்சில் பொய்யும் புரட்டும் தவிர வேறொன்றும் இல்லை” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “செல்வாக்கோடு.”
வே.வா., “கன்றுகள் செத்துப் பிறப்பதில்லை.”
வே.வா., “ஒரு நொடியில்.” அதாவது, “வேதனைப்படாமல் சட்டென.”
வே.வா., “சதி செய்வதே.”
நே.மொ., “பொல்லாதவர்களுடைய விளக்கு எப்போதாவது அணைந்துபோயிருக்கிறதா?”
வே.வா., “அறிவைப் புகட்ட.”
அல்லது, “என்னைத் தாக்க.”