யோபு 24:1-25

  • யோபுவின் பதில் தொடர்கிறது (1-25)

    • ‘கடவுள் தண்டனைத்தீர்ப்பு நாளை ஏன் குறிக்காமல் இருக்கிறார்?’ (1)

    • கடவுள் கெட்ட காரியங்களை அனுமதிப்பதாகச் சொல்கிறார் (12)

    • பாவிகள் இருட்டை நேசிக்கிறார்கள் (13-17)

24  பின்பு அவர், “சர்வவல்லமையுள்ளவர் தண்டனைத் தீர்ப்பு நாளை ஏன் குறிக்காமல் இருக்கிறார்?+ அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் அந்த நாளை ஏன் உணராமல் இருக்கிறார்கள்?   அவர்கள் மற்றவர்களுடைய நிலத்தின் எல்லைக் குறியைத் தள்ளிவைக்கிறார்கள்.+ஆட்டு மந்தைகளைத் திருடி தங்களுடைய மேய்ச்சல் நிலத்துக்குக் கொண்டுபோகிறார்கள்.   அப்பா இல்லாத பிள்ளையின் கழுதையை ஓட்டிக்கொண்டு போகிறார்கள்.விதவையின் காளையை அடமானமாகப் பிடுங்கிக்கொள்கிறார்கள்.+   ஏழைகளைத் தெருவில்கூட நடமாட விடுவதில்லை.ஆதரவற்றவர்களைப் பயத்தில் ஓடி ஒளிய வைக்கிறார்கள்.+   காட்டுக் கழுதைகள்+ உணவுக்காக வனாந்தரத்தில் அலைவது போல ஏழைகளும் அலைகிறார்கள்.பிள்ளைகளுக்காக உணவு தேடி பாலைவனத்தில் சுற்றித்திரிகிறார்கள்.   அவர்கள் வேறொருவரின் வயலில் அறுவடை செய்கிறார்கள்.*கெட்டவனின் திராட்சைத் தோட்டத்தில் பழங்களைப் பொறுக்குகிறார்கள்.   உடை இல்லாததால் ராத்திரியில் வெறும் உடம்போடு படுத்துக்கொள்கிறார்கள்.+குளிரில் போர்த்திக்கொள்ள அவர்களிடம் எதுவும் இல்லை.   மலைமேல் பெய்யும் மழையில் தொப்பலாக நனைந்துவிடுகிறார்கள்.ஒதுங்க இடமில்லாமல் பாறைகளை ஒட்டி நிற்கிறார்கள்.   கெட்டவர்கள், விதவைத் தாயிடம் பால் குடித்துக்கொண்டிருக்கிற குழந்தையைப் பறித்துக்கொண்டு போகிறார்கள்.+ஏழைகளின் துணிமணிகளை அடமானமாக எடுத்துக்கொள்கிறார்கள்.+ 10  அவர்களை வெறும் உடம்போடு அலைய விடுகிறார்கள்.பசியோடு கதிர்க் கட்டுகளைச் சுமக்க வைக்கிறார்கள். 11  மதில்கள் சூழ்ந்த திராட்சைத் தோட்டங்களிலே ஏழைகள் உச்சி வெயிலில் பாடுபடுகிறார்கள்.*திராட்சரச ஆலைகளில் கால்வலிக்க திராட்சைகளை மிதிக்கிறார்கள், ஆனாலும் தாகத்தில் தவிக்கிறார்கள்.+ 12  சாகக் கிடப்பவர்கள் நகரத்தில் முனகிக்கொண்டிருக்கிறார்கள்.படுகாயம் அடைந்தவர்கள் உதவிக்காகக் கதறுகிறார்கள்.+ஆனால், கடவுள் அதைக் கண்டுகொள்வதே இல்லை.* 13  வெளிச்சத்தை வெறுக்கும் ஆட்கள் சிலர் இருக்கிறார்கள்.+அதன் வழிகளை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.அதன் பாதைகளில் நடப்பதுமில்லை. 14  கொலைகாரன் விடியற்காலையில் எழுந்திருக்கிறான்.ஆதரவற்றவர்களையும் ஏழைகளையும் கொலை செய்கிறான்.+ராத்திரியில் திருடுகிறான். 15  மனைவிக்குத் துரோகம் செய்பவன் இருட்டுவதற்காகக் காத்திருக்கிறான்.+‘யாரும் என்னைப் பார்க்க மாட்டார்கள்’ என்று நினைக்கிறான்.+ தன்னுடைய முகத்தையும் மூடிக்கொள்கிறான். 16  அவர்கள் ராத்திரியில் வீடுகளை உடைத்து உள்ளே நுழைகிறார்கள்.பகலில் தங்கள் வீட்டில் பதுங்கிக்கொள்கிறார்கள். வெளிச்சத்தில் அவர்கள் தலைகாட்டுவதில்லை.+ 17  மற்றவர்கள் ராத்திரிக்குப் பயப்படுவதுபோல் அவர்கள் பகலுக்குப் பயப்படுகிறார்கள்.ஆனால், ராத்திரி நேர திகில்களுக்கு அவர்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள். 18  வெள்ளத்தில் அவர்கள் வேகமாக அடித்துச் செல்லப்படுவார்கள். அவர்களுடைய நிலம் சபிக்கப்படும்.+ அவர்களுடைய திராட்சைத் தோட்டத்துக்கு அவர்கள் திரும்பிவர மாட்டார்கள். 19  வறட்சியிலும் வெயிலிலும் பனி மறைந்துவிடுவது போல,கெட்டவன் கல்லறையில் மறைந்துவிடுவான்.+ 20  அவனைப் பெற்றவள் அவனை மறந்துவிடுவாள். புழுக்கள் அவனைத் தின்றுவிடும். அவனை யாரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.+ அந்த அக்கிரமக்காரன் மரத்தைப் போல் வெட்டிச் சாய்க்கப்படுவான். 21  ஏனென்றால், குழந்தையில்லாத பெண்ணிடம் அவன் கேவலமாக நடந்துகொள்கிறான்.விதவையைக் கொடுமைப்படுத்துகிறான். 22  பலமுள்ளவனைக் கடவுள் தன்னுடைய பலத்தால் அழிப்பார்.அவன் உயர்ந்த நிலையை அடைந்தாலும் அவனுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை. 23  கடவுள் அவனைத் தைரியத்தோடும் பாதுகாப்போடும் வாழ விடுகிறார்.+ஆனால், அவன் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.+ 24  அவன் கொஞ்சக் காலத்துக்கு உயர்ந்த நிலையில் இருந்தாலும், பின்பு காணாமல் போய்விடுவான்.+ அவன் தாழ்த்தப்படுவான்,+ மற்ற எல்லாரையும் போலச் செத்துப்போவான்.கதிர்கள் வெட்டப்படுவது போல வெட்டப்படுவான். 25  இதெல்லாம் பொய் என்று யாராவது சொல்ல முடியுமா?நான் சொல்வதை யாராவது மறுக்க முடியுமா?” என்றார்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “மிருகங்களுக்காகப் புல்லை அறுக்கிறார்கள்.”
அல்லது, “மதில்கள் சூழ்ந்த இடத்தில் எண்ணெயைப் பிழிந்தெடுக்கிறார்கள்.”
அல்லது, “அதற்காகக் கடவுள் யாரையும் குற்றப்படுத்துவதே இல்லை.”