யோபு 41:1-34

  • பிரமாண்டமான லிவியாதானைப் பற்றிக் கடவுள் விளக்குகிறார் (1-34)

41  பின்பு அவர், “லிவியாதானை*+ தூண்டில் போட்டுப் பிடிக்க உன்னால் முடியுமா?அதன் நாக்கைக் கயிற்றால் அழுத்திப் பிடிக்க முடியுமா?   அதற்கு மூக்கணாங்கயிறு போட முடியுமா?அதன் தாடைகளைக் கொக்கியால்* துளைக்க முடியுமா?   அது உன்னைப் பார்த்துக் கெஞ்சுமா?சாந்தமாகப் பேசுமா?   அது உன்னோடு ஒப்பந்தம் செய்துகொண்டு,கடைசி வரைக்கும் உனக்கு அடிமையாக இருக்குமா?   குருவியைக் கொஞ்சுவதுபோல் அதை நீ கொஞ்சுவாயா?உன் செல்ல மகள்கள் விளையாடுவதற்காக அதைக் கட்டிப் போடுவாயா?   வியாபாரிகள் அதன் விலையைப் பேரம் பேச முடியுமா? அதைக் கூறு போட்டு விற்க முடியுமா?   அதன் தோலை அம்புகளால் துளைக்க உன்னால் முடியுமா?+அதன் தலையில் ஈட்டிகளைப் பாய்ச்ச முடியுமா?   அதன்மேல் உன் கையை வைத்துப் பார்.அது உன்னை உண்டு இல்லை என்றாக்கிவிடும்; அதன் பிறகு அந்தப் பக்கமே நீ போக மாட்டாய்.   அதை ஜெயிக்க முடியும் என்று கற்பனைகூட செய்யாதே. அதைப் பார்த்தாலே விழுந்தடித்து ஓடுவாய். 10  அதைச் சீண்டிப் பார்க்க ஒருவனுக்கும் துணிச்சல் வராது. அப்படியென்றால், என்னோடு மோத யாரால் முடியும்?+ 11  நான் கைமாறு செய்யும்படி முன்னதாகவே எனக்கு எதையாவது கொடுத்தவன் யார்?+ வானத்தின் கீழிருக்கிற எல்லாமே எனக்குத்தான் சொந்தம்.+ 12  லிவியாதானின் உறுப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?அதன் பலத்தையும் அழகான வடிவத்தையும் பற்றிச் சொல்கிறேன், கேள். 13  அதன் தோலை யாராவது உரித்திருக்கிறார்களா? அதன் வாய்க்குள் யாராவது நுழைந்திருக்கிறார்களா? 14  அதன் வாயைப் பிளக்க யாருக்காவது துணிச்சல் வருமா? அதன் பற்களைப் பார்த்து நடுங்காதவர்கள் உண்டா? 15  அதன் முதுகில் அடுக்கடுக்காகச் செதில்கள் இருக்கும்.*அந்தச் செதில்கள் நெருக்க நெருக்கமாக இருக்கும். 16  காற்று போகக்கூட இடைவெளி இருக்காது.அவ்வளவு இறுக்கமாக இணைந்திருக்கும். 17  அவை நன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும்.பிரிக்க முடியாத அளவுக்குப் பிணைந்திருக்கும். 18  அது தும்மல் போடும்போது மின்னல் வெட்டுவதுபோல் இருக்கும்.கண்களைத் திறக்கும்போது சூரியன் உதிப்பதுபோல் இருக்கும். 19  அதன் வாயிலிருந்து தீப்பிழம்புகள் புறப்படும்.தீப்பொறிகள் பறக்கும். 20  எரியும்* உலையிலிருந்து புகை எழும்புவது போல,அதன் மூக்கிலிருந்து புகை எழும்பும். 21  அதன் மூச்சுக்காற்று நிலக்கரியைக்கூட கொளுத்திவிடும்.அதன் வாயிலிருந்து தீ ஜுவாலை புறப்படும். 22  அதன் கழுத்தில் அதிக பலம் இருக்கும்.அதன் முன்னால் வருபவர்களுக்குக் குலைநடுங்கும். 23  அதன் வயிற்றுப் பகுதி மடிப்பு மடிப்பாக இருக்கும்.அது இரும்புபோல் கெட்டியாகவும் அசைக்க முடியாததாகவும் இருக்கும். 24  அதன் இதயம் ஒரு பாறையைப் போன்றது.மாவு அரைக்கும் கல்லை* போல் கடினமானது. 25  அது எழும்பும்போது பலசாலிகள்கூட பயந்து நடுங்குவார்கள்.அது வாலை அடித்துக்கொண்டு நீந்தும்போது மிரண்டுபோவார்கள். 26  ஈட்டியும் வேலும் அம்பும் அதைத் துளைக்காது.எந்த வாளும் அதை ஊடுருவாது.+ 27  அதற்கு இரும்புகூட வெறும் துரும்பு.செம்புகூட உளுத்துப்போன மரக்கொம்பு. 28  அம்புகளை எறிந்தாலும் அது ஓடாமல் நிற்கும்.கற்களைச் சுழற்றி வீசினாலும் தூசிபோல் உதறித்தள்ளும். 29  பெரிய தடியைக்கூட ஒரு புல்லைப் போலப் பார்க்கும்.ஈட்டியின் சத்தம் கேட்டு கிண்டலாகச் சிரிக்கும். 30  அதன் அடிப்பகுதி கூர்மையான ஓடுகளை அடுக்கி வைத்ததுபோல் இருக்கும்.ஒரு பெரிய மரப்பலகையை* போல அது சேற்றில் நகர்ந்து போகும்.+ 31  அது ஆவேசமாக நீந்தும்போது, உலைபானையைப் போலக் கடல்* பொங்கியெழும்.எண்ணெய்ச் சட்டியில் நுரை வருவது போலக் கடலில் நுரை வரும். 32  அது நீந்திப்போகிற வழியெல்லாம் வெள்ளி போல மின்னும். கடலுக்கு நரை தட்டியது போலத் தெரியும். 33  பூமியில் அது போன்ற பிராணியே கிடையாது.அதற்கு இருக்கும் துணிச்சல் வேறு எதற்குமே கிடையாது. 34  கர்வமுள்ள எல்லா பிராணிகளையும் அது முறைத்துப் பார்க்கிறது. பலம் படைத்த எல்லா காட்டு மிருகங்களுக்கும் அதுவே ராஜா” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

ஒருவேளை, “முதலையை.”
நே.மொ., “முள்ளால்.”
அல்லது, “அடுக்கடுக்கான செதில்கள் அதற்குப் பெருமை சேர்க்கும்.”
வே.வா., “காய்ந்த நாணற்புல்லினால் எரியும்.”
வே.வா., “திரிகைக் கல்லின் அடிக்கல்லை.”
அதாவது, “தானியங்களைப் போரடிக்கும் பலகையை.”
இதற்கான எபிரெய வார்த்தை பெரிய ஆற்றையும் குறிக்கலாம்.