யோபு 42:1-17

  • யோபு யெகோவாவுக்குப் பதில் சொல்கிறார் (1-6)

  • மூன்று நண்பர்கள் கண்டிக்கப்படுகிறார்கள் (7-9)

  • யோபுவைப் பழைய நிலைமைக்கு யெகோவா உயர்த்துகிறார் (10-17)

    • யோபுவின் மகன்களும் மகள்களும் (13-15)

42  அப்போது யோபு யெகோவாவிடம்,   “உங்களால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்று புரிந்துகொண்டேன்.நினைப்பதையெல்லாம் செய்ய உங்களால் முடியும் என்று தெரிந்துகொண்டேன்.+   ‘நான் சொல்வதை அறிவே இல்லாமல் மாற்றிப் பேசுவது யார்?’+ என்று நீங்கள் கேட்டீர்கள். உண்மையில், நான்தான் புரிந்துகொள்ளாமல் பேசிவிட்டேன்.என் புத்திக்கு எட்டாத விஷயங்களைப்+ பற்றித் தப்பாகப் பேசிவிட்டேன்.   நீங்கள் என்னிடம், ‘நான் பேசுவதைத் தயவுசெய்து கேள். நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்’+ என்றீர்கள்.   உங்களைப் பற்றி என் காதுகளால் கேட்டிருக்கிறேன்.இப்போது என் கண்களாலேயே உங்களைப் பார்க்கிறேன்.   அதனால், நான் சொன்னதையெல்லாம் திரும்ப* வாங்கிக்கொள்கிறேன்.+மண்ணிலும் சாம்பலிலும் உட்கார்ந்து வருத்தப்படுகிறேன்”+ என்று சொன்னார்.  யெகோவா யோபுவிடம் பேசிய பின்பு தேமானியனான எலிப்பாசிடம் பேசினார். யெகோவா அவனிடம், “உன்மேலும் உன் நண்பர்கள்மேலும்+ என் கோபம் பற்றியெரிகிறது. என் ஊழியன் யோபு என்னைப் பற்றிச் சரியாகப் பேசியதுபோல் நீங்கள் பேசவில்லை.+  இப்போது ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் எடுத்துக்கொண்டு என் ஊழியன் யோபுவிடம் போங்கள். அங்கே உங்கள் பாவத்துக்காக அவற்றைத் தகன பலி செலுத்துங்கள். என் ஊழியன் யோபு உங்களுக்காக ஜெபம் செய்வான்.+ அவன் என்னைப் பற்றிச் சரியாகப் பேசியதுபோல் நீங்கள் பேசவில்லை. ஆனாலும், உங்களுடைய முட்டாள்தனத்துக்காக உங்களைத் தண்டிக்க வேண்டாமென்று அவன் என்னிடம் கெஞ்சுவான். என் ஊழியன் யோபுவுடைய ஜெபத்தை நான் நிச்சயமாகக் கேட்பேன்” என்றார்.  தேமானியனான எலிப்பாசும், சுவாகியனான பில்தாத்தும், நாகமாத்தியனான சோப்பாரும் யெகோவா சொன்னபடியே செய்தார்கள். யெகோவாவும் யோபு செய்த ஜெபத்தைக் கேட்டார். 10  நண்பர்களுக்காக யோபு ஜெபம் செய்த பின்பு+ அவருடைய எல்லா கஷ்டங்களையும் யெகோவா தீர்த்தார்.+ மறுபடியும் சீரும் சிறப்புமாக வாழ வைத்தார். முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு ஆசீர்வாதங்களை யெகோவா தந்தார்.+ 11  யோபுவின் சகோதரர்களும் சகோதரிகளும் நண்பர்களும்+ அவருடைய வீட்டுக்கு வந்து அவரோடு விருந்து சாப்பிட்டார்கள். அவருக்குப் பல கஷ்டங்கள் வரும்படி யெகோவா அனுமதித்திருந்ததை நினைத்து அவர்மேல் அனுதாபப்பட்டார்கள், அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். பின்பு, ஆளுக்கொரு வெள்ளிக் காசையும் தங்க வளையத்தையும் அவருக்குக் கொடுத்தார்கள். 12  யெகோவா முன்பைவிட அதிகமாக யோபுவை ஆசீர்வதித்தார்.+ 14,000 ஆடுகளையும் 6,000 ஒட்டகங்களையும் 1,000 ஜோடி மாடுகளையும் 1,000 கழுதைகளையும்* கொடுத்தார்.+ 13  யோபுவுக்குத் திரும்பவும் ஏழு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தார்கள்.+ 14  மூத்த மகளின் பெயர் எமீமாள், அடுத்தவள் பெயர் கெத்சீயாள், கடைசி மகளின் பெயர் கேரேனாப்புக். 15  யோபுவின் மகள்களைப் போல அழகான பெண்கள் அந்தத் தேசத்திலேயே இருக்கவில்லை. மகன்களுக்குக் கொடுத்தது போலவே மகள்களுக்கும் யோபு சொத்துகளைக் கொடுத்தார். 16  அதன் பிறகு யோபு 140 வருஷங்கள் உயிர்வாழ்ந்து, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என நான்கு தலைமுறையைப் பார்த்தார். 17  இப்படி, யோபு நிறைய காலம் மனநிறைவோடு வாழ்ந்து, பின்பு இறந்துபோனார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “வாபஸ்.”
நே.மொ., “பெட்டைக் கழுதைகளையும்.”