யோபு 5:1-27

  • எலிப்பாஸ் தொடர்ந்து பேசுகிறான் (1-27)

    • ‘ஞானிகளை அவர்களுடைய தந்திரத்தை வைத்தே கடவுள் மடக்குகிறார்’ (13)

    • ‘கடவுளின் புத்திமதியை யோபு அசட்டை செய்யக் கூடாது’ (17)

5  பின்பு அவன், “தயவுசெய்து யாரையாவது கூப்பிடு! உனக்குப் பதில் கிடைக்கிறதா என்று பார்க்கலாம். எந்தப் பரிசுத்தவானிடம் உதவி கேட்கப்போகிறாய்?   பழிவாங்கும் எண்ணம் முட்டாளைக் கொன்றுவிடும்.பொறாமைக் குணம் ஏமாளியைச் சாகடித்துவிடும்.   முட்டாள் சீரும் சிறப்புமாக வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.ஆனால், அவனுடைய வீடு திடீரென்று சபிக்கப்படும்.   அவனுடைய மகன்களுக்குப் பாதுகாப்பு இருக்காது.நகரவாசலில் அவர்கள் ஒடுக்கப்படுவார்கள்,+யாரும் அவர்களைக் காப்பாற்ற மாட்டார்கள்.   அவன் அறுவடை செய்ததைப் பசியாயிருப்பவன் சாப்பிடுகிறான்.முட்களுக்கு நடுவில் இருப்பதைக்கூட எடுத்துக்கொள்கிறான்.அவர்களுடைய சொத்து எல்லாமே பறிபோகும்.   கெட்ட காரியங்கள் மண்ணிலிருந்தா முளைக்கின்றன?கஷ்டங்கள் நிலத்திலிருந்தா துளிர்விடுகின்றன?   நெருப்பிலிருந்து தீப்பொறி பறப்பது உறுதி.அதுபோல், மனுஷனாகப் பிறக்கிறவனுக்குக் கஷ்டம் வருவது உறுதி.   ஆனால், நான் கடவுளிடம் முறையிடுவேன்.என்னுடைய வழக்கை அவரிடம் கொண்டுபோவேன்.   மனுஷனுடைய அறிவுக்கு எட்டாத அதிசயங்களைச் செய்கிறவர் அவர்.எண்ண முடியாதளவுக்கு ஏராளமான அற்புதங்களைச் செய்கிறவர் அவர். 10  பூமியில் அவர் மழையைப் பொழிகிறார்.வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார். 11  தாழ்ந்தவனை மேலே உயர்த்துகிறார்.விரக்தியில் மூழ்கியிருப்பவனைத் தூக்கி நிறுத்தி, அவனை மீட்கிறார். 12  சதிகாரர்களின் திட்டங்களை முறியடிக்கிறார்.அவர்கள் என்ன செய்தாலும் தோல்வியடைய வைக்கிறார். 13  ஞானிகளை அவர்களுடைய தந்திரத்தை வைத்தே மடக்குகிறார்.+சாமர்த்தியசாலிகளின் திட்டங்களைக் கவிழ்க்கிறார். 14  பகலிலேயே இருள் அவர்களைச் சூழ்ந்துகொள்கிறது.பட்டப்பகலிலேயே அவர்கள் தட்டுத்தடுமாறுகிறார்கள். 15  அவர்களுடைய குத்தலான பேச்சிலிருந்து எளியவர்களைக் கடவுள் காப்பாற்றுகிறார்.பலம் படைத்தவர்களின் பிடியிலிருந்து ஏழைகளை விடுவிக்கிறார். 16  அதனால் எளியவர்களுக்கு நம்பிக்கை கிடைக்கிறது,அக்கிரமக்காரர்களின் வாய் அடங்குகிறது. 17  கடவுள் யாரைக் கண்டிக்கிறாரோ அவர் சந்தோஷமானவர்.அதனால், சர்வவல்லமையுள்ளவர் கண்டித்துத் திருத்துவதை அலட்சியம் செய்யாதே! 18  அவர் காயப்படுத்தினாலும் கட்டுப் போடுவார்.அடித்தாலும் தன்னுடைய கையாலேயே மருந்து போடுவார். 19  ஆறு விதமான ஆபத்துகளிலிருந்து உன்னைக் காப்பாற்றுவார்.ஏழாவது ஆபத்தும் உன்னை நெருங்காது. 20  பஞ்ச காலத்தில் பட்டினியில் சாகும்படி உன்னை விட மாட்டார்.போர்க் காலத்தில் வாளுக்குப் பலியாகும்படி உன்னை விட மாட்டார். 21  சாட்டையடி போன்ற வார்த்தைகளிலிருந்து+ நீ காப்பாற்றப்படுவாய்.நாசம் ஏற்பட்டாலும் நடுங்க மாட்டாய். 22  அழிவும் பஞ்சமும் வந்தால்கூட வாய்விட்டுச் சிரிப்பாய்.காட்டு மிருகங்களைப் பார்த்தும்கூட பயப்பட மாட்டாய். 23  வயலிலுள்ள கற்கள் உன்னைக் காயப்படுத்தாது.*காட்டு மிருகங்களும் உன்னைத் தாக்காது. 24  உன் கூடாரம் பாதுகாப்பாக இருப்பதை நீ பார்ப்பாய்.*உன் மந்தையில் ஒன்றும் குறையாமல் இருப்பதைப் பார்ப்பாய். 25  நிறைய பிள்ளைகளைப் பெற்று சந்தோஷமாக வாழ்வாய்.உன்னுடைய வம்சம் பூமியிலுள்ள புல்பூண்டுகளைப் போல் அளவில்லாமல் பெருகும். 26  கல்லறைக்குப் போய்ச் சேரும் காலத்தில்கூட நீ கட்டுறுதியோடு இருப்பாய்.முற்றிய கதிர்மணிகளைப் போல் இருப்பாய். 27  இதெல்லாம் நாங்கள் கண்டறிந்த உண்மைகள். நன்றாகக் கேட்டு, மனதார ஏற்றுக்கொள்” என்று சொன்னான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்யும்.”
வே.வா., “உன் கூடாரத்தில் நிம்மதியாக இருப்பாய்.”