யோவான் எழுதியது 21:1-25

  • இயேசு சீஷர்களுக்குமுன் தோன்றுகிறார் (1-14)

  • இயேசுமேல் தனக்கு அன்பு இருப்பதை பேதுரு உறுதிப்படுத்துகிறார் (15-19)

    • “என் ஆட்டுக்குட்டிகளுக்கு உணவு கொடு” (17)

  • இயேசுவின் அன்புச் சீஷருடைய எதிர்காலம் (20-23)

  • முடிவுரை (24, 25)

21  இவற்றுக்குப் பின்பு, திபேரியா கடலுக்குப் பக்கத்தில் இயேசு மறுபடியும் தன்னுடைய சீஷர்களுக்குத் தோன்றினார். அவர் தோன்றிய விவரம் இதுதான்:  சீமோன் பேதுருவும், திதிமு என்ற தோமாவும்,+ கலிலேயாவில் இருக்கிற கானா ஊரைச் சேர்ந்த நாத்தான்வேலும்,+ செபெதேயுவின் மகன்களும்,+ அவருடைய சீஷர்களில் இன்னும் இரண்டு பேரும் கூடியிருந்தார்கள்.  அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னார். அதற்கு அவர்கள், “நாங்களும் உங்களோடு வருகிறோம்” என்று சொல்லிவிட்டு, படகில் ஏறிப் போனார்கள். ஆனால், அன்று ராத்திரி அவர்களுக்கு ஒரு மீன்கூட கிடைக்கவில்லை.+  பொழுது விடியும் நேரத்தில், இயேசு கடற்கரையில் நின்றுகொண்டிருந்தார். ஆனால், அவர்தான் இயேசு என்பதைச் சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை.+  இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே, உங்களிடம் சாப்பிடுவதற்கு ஏதாவது* இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஒன்றுமே இல்லை!” என்று சொன்னார்கள்.  அப்போது அவர், “படகின் வலது பக்கத்தில் வலையைப் போடுங்கள், உங்களுக்கு மீன் கிடைக்கும்” என்று சொன்னார். அவர்களும் வலையைப் போட்டார்கள், ஏராளமான மீன்கள் சிக்கின. அதனால், வலையை அவர்களால் இழுக்கக்கூட முடியவில்லை.+  இயேசுவின் அன்புச் சீஷர்+ அதைப் பார்த்து, “அவர் நம் எஜமான்தான்!” என்று சீமோன் பேதுருவிடம் சொன்னார். பேதுரு அதைக் கேட்டதும், கழற்றி வைத்திருந்த மேலங்கியைப் போட்டுக்கொண்டு கடலில் குதித்தார்.  மற்ற சீஷர்களோ சிறிய படகில் இருந்தபடி, மீன்கள் நிறைந்த வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். ஏனென்றால், கரையிலிருந்து அவர்கள் வெகு தூரத்தில் இல்லை, சுமார் 300 அடி* தூரத்தில்தான் இருந்தார்கள்.  அவர்கள் படகைவிட்டு இறங்கியபோது, கரியால் தீ மூட்டப்பட்டு அதன்மேல் மீன் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார்கள், அங்கே ரொட்டியும் இருந்தது. 10  இயேசு அவர்களிடம், “இப்போது நீங்கள் பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார். 11  அதனால் சீமோன் பேதுரு படகில் ஏறி, பெரிய மீன்கள் நிறைந்த வலையைக் கரைக்கு இழுத்தார். அதில் 153 மீன்கள் இருந்தன. அத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12  இயேசு அவர்களிடம், “வந்து சாப்பிடுங்கள்” என்று சொன்னார். சீஷர்களில் ஒருவருக்குக்கூட, “நீங்கள் யார்?” என்று கேட்கத் தைரியம் வரவில்லை; ஏனென்றால், அவர்தான் தங்கள் எஜமான் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. 13  இயேசு வந்து ரொட்டியை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார், அதேபோல் மீனையும் கொடுத்தார். 14  இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பின்பு தன்னுடைய சீஷர்கள் முன்னால் தோன்றியது இது மூன்றாவது தடவை.+ 15  அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்பு சீமோன் பேதுருவிடம் இயேசு, “யோவானின் மகனான சீமோனே, இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஆமாம், எஜமானே, உங்கள்மேல் எனக்குப் பாசம் இருப்பது உங்களுக்கே தெரியும்” என்று சொன்னார். “அப்படியென்றால், என் ஆட்டுக்குட்டிகளுக்கு நீ உணவு கொடுக்க வேண்டும்”+ என்று சொன்னார். 16  பின்பு இரண்டாவது தடவையாக, “யோவானின் மகனான சீமோனே, என்மேல் உனக்கு அன்பு இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஆமாம், எஜமானே, உங்கள்மேல் எனக்குப் பாசம் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்” என்று சொன்னார். “அப்படியென்றால், என் ஆட்டுக்குட்டிகளை நீ மேய்க்க வேண்டும்”+ என்று சொன்னார். 17  பின்பு மூன்றாவது தடவையாக, “யோவானின் மகனான சீமோனே, என்மேல் உனக்குப் பாசம் இருக்கிறதா?” என்று கேட்டார். இப்படி மூன்றாவது தடவையாக, “என்மேல் உனக்குப் பாசம் இருக்கிறதா?” என்று அவர் கேட்டதால் பேதுரு துக்கப்பட்டு, “எஜமானே, உங்களுக்கு எல்லாமே தெரியும். உங்கள்மேல் எனக்குப் பாசம் இருப்பதும் தெரியும்” என்று சொன்னார். அப்போது இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளுக்கு நீ உணவு கொடுக்க வேண்டும்.+ 18  உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்கிறேன், நீ இளைஞனாக இருந்தபோது நீயே உடை உடுத்திக்கொண்டு விரும்பிய இடங்களுக்குப் போனாய். ஆனால், வயதாகும்போது நீ உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உனக்கு உடை உடுத்தி நீ விரும்பாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான்” என்று சொன்னார். 19  பேதுரு எப்படி மரணமடைந்து கடவுளுக்கு மகிமை சேர்ப்பார் என்பதைச் சுட்டிக்காட்டவே அவர் அப்படிச் சொன்னார். அப்படிச் சொல்லிவிட்டு, “நீ என்னைத் தொடர்ந்து பின்பற்றி வா”+ என்று சொன்னார். 20  பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீஷர்+ பின்னால் நடந்து வருவதைப் பார்த்தார்; சாயங்கால உணவு சாப்பிட்ட சமயத்தில் அவருடைய நெஞ்சில் சாய்ந்துகொண்டு, “எஜமானே, உங்களைக் காட்டிக்கொடுப்பவன் யார்?” என்று கேட்டது அந்தச் சீஷர்தான். 21  பேதுரு அவரைப் பார்த்ததும் இயேசுவிடம், “எஜமானே, இவனுக்கு என்ன நடக்கும்?” என்று கேட்டார். 22  அதற்கு இயேசு, “நான் வரும்வரை இவன் உயிரோடிருக்க வேண்டுமென்பது என்னுடைய விருப்பம் என்றால், உனக்கென்ன? நீ என்னைத் தொடர்ந்து பின்பற்றி வா” என்று சொன்னார். 23  அதனால், அந்தச் சீஷர் இறந்துபோக மாட்டார் என்ற பேச்சு சகோதரர்கள் மத்தியில் பரவியது. ஆனால், அவர் இறந்துபோக மாட்டார் என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, “நான் வரும்வரை இவன் உயிரோடிருக்க வேண்டுமென்பது என்னுடைய விருப்பம் என்றால், உனக்கென்ன?” என்றுதான் சொன்னார். 24  அந்தச் சீஷர்தான்+ இவற்றைப் பற்றிச் சாட்சி கொடுத்து இவற்றை எழுதினார்; அவர் கொடுக்கும் சாட்சி உண்மை என்று நமக்குத் தெரியும். 25  இயேசு இன்னும் நிறைய காரியங்களைச் செய்தார். அவை ஒவ்வொன்றையும் எழுதினால், எழுதப்படும் சுருள்களை உலகமே கொள்ளாது என்று நினைக்கிறேன்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மீன் ஏதாவது.”
நே.மொ., “200 முழம்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.