ரூத் 2:1-23

  • போவாசின் வயலில் கதிர் பொறுக்க ரூத் போகிறாள் (1-3)

  • போவாஸ் ரூத்தைச் சந்தித்துப் பேசுகிறார் (4-16)

  • போவாஸ் கருணை காட்டியதைப் பற்றி நகோமியிடம் ரூத் சொல்கிறாள் (17-23)

2  நகோமிக்குத் தன் கணவன் வழியில் ஒரு சொந்தக்காரர் இருந்தார். அவர் பெரிய பணக்காரர். அவருடைய பெயர் போவாஸ்.+ அவர் எலிமெலேக்கின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  ஒருநாள், நகோமியிடம் மோவாபியப் பெண்ணாகிய ரூத், “நான் வயல்வெளிக்குப் போகட்டுமா? யார் எனக்குக் கருணை காட்டுகிறாரோ அவருடைய வயலில் கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு+ வரட்டுமா?” என்று கேட்டாள். அதற்கு நகோமி, “போய் வா, என் மகளே” என்று சொன்னாள்.  உடனே அந்த இளம் பெண் அங்கிருந்து போய், அறுவடை செய்கிறவர்களின் பின்னால் கதிர் பொறுக்க ஆரம்பித்தாள். அந்த வயல்நிலம் எலிமெலேக்கின்+ குடும்பத்தைச் சேர்ந்த போவாசின்+ வயல்நிலம் என்பது அவளுக்குத் தெரியவில்லை.  கொஞ்ச நேரம் கழித்து, பெத்லகேமிலிருந்து போவாஸ் அங்கு வந்தார். அவர் அறுவடை செய்கிறவர்களைப் பார்த்து, “யெகோவா உங்களோடு இருக்கட்டும்!” என்று வாழ்த்தினார். அதற்கு அவர்கள், “யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும்!” என்று வாழ்த்தினார்கள்.  பின்பு போவாஸ், அறுவடை வேலையை மேற்பார்வை செய்துவந்த வாலிபனிடம், “இவள் யார் வீட்டுப் பெண்?” என்று கேட்டார்.  அதற்கு அவன், “இவள் மோவாபியப் பெண்.+ மோவாப் தேசத்திலிருந்து+ நகோமியோடு வந்திருக்கிறாள்.  இவள் என்னிடம், ‘அறுப்பவர்கள் சிந்துகிற கதிர்களை* தயவுசெய்து பொறுக்கிக்கொள்ளட்டுமா?’+ என்று கேட்டாள். காலையிலிருந்தே இங்கு கதிர் பொறுக்கிக்கொண்டிருக்கிறாள். இப்போதுதான் பந்தலில் கொஞ்சம் ஓய்வாக உட்கார்ந்தாள்” என்று சொன்னான்.  பின்பு போவாஸ் ரூத்திடம், “என் மகளே, கதிர் பொறுக்க இனி நீ வேறு எந்த வயலுக்கும் போக வேண்டாம். இங்கேயே இரு, என்னுடைய வேலைக்காரப் பெண்களின் கூடவே இரு.+  அவர்கள் எங்கே போய் அறுக்கிறார்கள் என்பதைப் பார்த்து, அவர்கள் பின்னாலேயே போ. உனக்குத் தொல்லை கொடுக்க* கூடாதென்று என்னுடைய வேலைக்காரப் பையன்களிடம் எச்சரித்திருக்கிறேன். உனக்குத் தாகமெடுத்தால், ஜாடிகளில் அவர்கள் ஊற்றி வைத்திருக்கிற தண்ணீரைக் குடித்துக்கொள்” என்று சொன்னார். 10  அப்போது அவள் மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து, “நான் வேறு தேசத்துப் பெண்ணாக+ இருந்தும் என்மேல் இவ்வளவு அக்கறையும் கருணையும் காட்டுகிறீர்களே, ஏன்?” என்று கேட்டாள். 11  அதற்கு போவாஸ், “உன்னுடைய கணவர் இறந்தபின், நீ உன் மாமியாருக்குச் செய்த எல்லா நல்ல காரியங்களையும் பற்றி நான் கேள்விப்பட்டேன். நீ உன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் ஊரையும் உறவையும் விட்டுவிட்டு முன்பின் தெரியாத ஜனங்களோடு வாழ வந்ததைப் பற்றியும் கேள்விப்பட்டேன்.+ 12  நீ செய்த எல்லாவற்றுக்கும் யெகோவா உனக்குப் பலன் தரட்டும்!+ இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் சிறகுகளின் கீழ் அடைக்கலம்+ தேடி வந்திருக்கிற உனக்கு அவர் நிறைவான பலன் தரட்டும்” என்று சொன்னார். 13  அதற்கு அவள், “எஜமானே, உங்கள் கருணை எனக்கு எப்போதும் கிடைக்கட்டும். நான் உங்களுடைய வேலைக்காரியாக இல்லாவிட்டால்கூட, என்னிடம் ஆறுதலாகப் பேசினீர்கள், எனக்கு நம்பிக்கை தந்தீர்கள்” என்று சொன்னாள். 14  சாப்பாட்டு நேரத்தில் போவாஸ் அவளிடம், “மகளே, இங்கே வந்து கொஞ்சம் ரொட்டியை எடுத்து, காடியில் தொட்டுச் சாப்பிடு” என்று சொன்னார். அதனால் அறுவடை செய்கிறவர்களின் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டாள். வறுத்த தானியத்தையும் அவர் கொஞ்சம் கொடுத்தார், அவள் அதைத் திருப்தியாகச் சாப்பிட்ட பின்பு மீதியை எடுத்து வைத்துக்கொண்டாள். 15  பின்பு, கதிர் பொறுக்க+ அவள் எழுந்தபோது போவாஸ் தன்னுடைய வேலைக்காரப் பையன்களைப் பார்த்து, “அறுத்துப் போடப்பட்டிருக்கிற கதிர்களிலிருந்தும்* அவள் பொறுக்கிக்கொள்ளட்டும், அவளுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்.+ 16  கட்டுகளிலிருந்துகூட சில கதிர்களை அவளுக்காக உருவிப் போடுங்கள். அவற்றை அவள் எடுத்துக்கொள்ளட்டும், எதையாவது சொல்லி அவளைத் தடுத்துவிடாதீர்கள்” என்று சொன்னார். 17  அதனால், சாயங்காலம்வரை அவள் கதிர் பொறுக்கினாள்.+ அந்தக் கதிர்களை அவள் அடித்து உதிர்த்தபோது ஒரு எப்பா அளவு* பார்லி கிடைத்தது. 18  பின்பு, அவற்றை எடுத்துக்கொண்டு நகரத்துக்குள் போய், தன் மாமியாரிடம் காட்டினாள். அதோடு, தான் சாப்பிட்டதுபோக மீதியிருந்ததைத்+ தன்னுடைய மாமியாருக்குக் கொடுத்தாள். 19  அப்போது அவளுடைய மாமியார், “இன்றைக்கு நீ எங்கே கதிர் பொறுக்கினாய்? எங்கே வேலை செய்தாய்? உன்னைக் கவனித்து உன்மேல் அக்கறை காட்டியவரைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்”+ என்று சொன்னாள். அதற்கு ரூத், “போவாஸ் என்பவருடைய வயலில் நான் வேலை செய்தேன்” என்று சொன்னாள். 20  அதற்கு நகோமி, “உயிரோடு இருக்கிறவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் பேரன்பு* காட்டிய யெகோவா அவரை ஆசீர்வதிக்கட்டும்!+ அவர் நமக்குச் சொந்தக்காரர்.+ நம்மை மீட்கும் உரிமையுள்ளவர்களில்* ஒருவர்”+ என்று சொன்னாள். 21  அப்போது மோவாபியப் பெண்ணாகிய ரூத், “அதுமட்டுமல்ல, அவருடைய வேலைக்காரப் பெண்கள் அறுவடையை முடிக்கும்வரை அவர்களோடு கூடவே இருக்கச் சொன்னார்”+ என்றாள். 22  அதனால், நகோமி தன்னுடைய மருமகள் ரூத்திடம், “என் மகளே, வேறொருவனுடைய வயலுக்குப் போய் இம்சைப்படுவதைவிட அவருடைய வேலைக்காரப் பெண்களோடு இருப்பதுதான் உனக்கு நல்லது” என்று சொன்னாள். 23  அதனால், பார்லி அறுவடையும்+ கோதுமை அறுவடையும் முடியும்வரை, போவாசின் வேலைக்காரப் பெண்களின் கூடவே இருந்து ரூத் கதிர் பொறுக்கினாள். அவள் தன் மாமியாருடனேயே வாழ்ந்துவந்தாள்.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “அறுப்பவர்கள் விட்டுவிட்டுப் போகிற கதிர்க்கட்டுகளிலிருந்து சிந்துகிறவற்றை.”
வே.வா., “உன்னைத் தொட.”
அல்லது, “கதிர்க்கட்டுகளிலிருந்தும்.”
அதாவது, “சுமார் 13 கிலோ.”
வே.வா., “மாறாத அன்பு.”