ரூத் 4:1-22

  • போவாஸ் மீட்டுக்கொள்ளும் உரிமையைப் பயன்படுத்துகிறார் (1-12)

  • போவாசுக்கும் ரூத்துக்கும் ஓபேத் பிறக்கிறார் (13-17)

  • தாவீதின் வம்சாவளி (18-22)

4  இதற்கிடையில், போவாஸ் நகரவாசலுக்குப்+ போய் உட்கார்ந்தார். அவர் சொல்லியிருந்த அந்த நெருங்கிய சொந்தக்காரன்*+ அந்த வழியாகப் போனான். உடனே போவாஸ் அந்த ஆளிடம்,* “கொஞ்சம் இங்கே வந்து உட்காருகிறாயா?” என்றார். அவன் போய் அங்கே உட்கார்ந்தான்.  பிறகு, ஊர்ப் பெரியோர்களில்*+ 10 பேரை போவாஸ் கூப்பிட்டு, “இங்கே வந்து உட்காருங்கள்” என்று சொன்னார். அவர்களும் உட்கார்ந்தார்கள்.  அப்போது போவாஸ் அந்த ஆளிடம்,*+ “மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்திருக்கிற நகோமி,+ நம்முடைய சகோதரன் எலிமெலேக்கின்+ நிலத்தை விற்கப்போகிறார்.  அதை உன்னிடம் தெரியப்படுத்த வேண்டுமென்று நினைத்தேன். ஊர்க்காரர்கள் முன்னிலையிலும் பெரியோர்கள் முன்னிலையிலும் நீ அதை வாங்கிக்கொள்.+ அதை மீட்டுக்கொள்ள உனக்கு இஷ்டம் இருந்தால் மீட்டுக்கொள். இல்லாவிட்டால், என்னிடம் சொல். அதை மீட்டுக்கொள்ளும் உரிமை முதலில் உனக்குத்தான் இருக்கிறது, அடுத்ததுதான் எனக்கு” என்றார். அதற்கு அவன், “நான் அதை மீட்டுக்கொள்கிறேன்” என்றான்.+  அப்போது போவாஸ், “நகோமியிடமிருந்து மட்டுமல்ல, இறந்துபோனவனுடைய மனைவியாகிய மோவாபியப் பெண் ரூத்திடமிருந்தும் நீ அந்த நிலத்தை வாங்க வேண்டும். அப்போதுதான், இறந்துபோனவனுடைய பெயரிலேயே அந்தச் சொத்து தொடர்ந்து இருக்கும்”+ என்றார்.  அதற்கு அந்த ஆள், “என்னால் அதை மீட்டுக்கொள்ள முடியாது. ஏனென்றால், எனக்கு நஷ்டம் வந்துவிடும்.* அதனால், மீட்டுக்கொள்ளும் உரிமையை நான் உங்களுக்கு விட்டுக்கொடுக்கிறேன், நீங்களே அதை மீட்டுக்கொள்ளுங்கள். என்னால் முடியாது” என்று சொன்னான்.  அந்தக் காலத்தில் இஸ்ரவேலர்களுக்கு ஒரு வழக்கம் இருந்தது. ஒன்றை மீட்டுக்கொள்ளும்போதோ கைமாற்றும்போதோ கொடுக்கல் வாங்கலை உறுதிப்படுத்துவதற்காக ஒருவர் தன்னுடைய செருப்பைக் கழற்றி+ மற்றவரிடம் கொடுப்பார். ஓர் ஒப்பந்தத்தைச் சட்டப்படி உறுதிப்படுத்துவதற்கு இப்படிச் செய்வதுதான் இஸ்ரவேலில் வழக்கம்.  அதனால் போவாசிடம் அந்த ஆள், “நீங்களே அதை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, தன்னுடைய செருப்பைக் கழற்றிக் கொடுத்தான்.  அப்போது போவாஸ் அங்கிருந்த பெரியோர்களையும் எல்லா ஜனங்களையும் பார்த்து, “எலிமெலேக்கு, கிலியோன், மக்லோன் ஆகியவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் நகோமியிடமிருந்து நான் இன்று வாங்கிக்கொள்கிறேன் என்பதற்கு நீங்கள்தான் சாட்சிகள்.+ 10  அதோடு, இறந்துபோன மக்லோனுடைய பெயரில் சொத்து தொடர்ந்து இருப்பதற்கு அவனுடைய மனைவியாகிய மோவாபியப் பெண் ரூத்தை என்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன்.+ இறந்துபோனவனுடைய பெயரை அவனுடைய சகோதரர்களும் இந்த நகரத்திலுள்ள ஜனங்களும் மறந்துபோகாமல் இருப்பதற்காக இதைச் செய்கிறேன். இதற்கு நீங்கள்தான் சாட்சிகள்”+ என்று சொன்னார். 11  அப்போது, நகரவாசலில் இருந்த எல்லா ஜனங்களும் பெரியோர்களும், “ஆமாம், நாங்கள்தான் சாட்சிகள்! உங்களுடைய வீட்டுக்கு வரும் மனைவியை யெகோவா ஆசீர்வதிக்கட்டும்! இஸ்ரவேல் ஜனங்களைத் தழைக்கச் செய்த ராகேலைப் போலவும் லேயாளைப் போலவும் அவளை ஆசீர்வதிக்கட்டும்!+ எப்பிராத்தாவில்+ நீங்கள் சீர்சிறப்போடு வாழ வேண்டும்! பெத்லகேமில் பேர்புகழோடு வாழ வேண்டும்!+ 12  அந்த இளம் பெண் மூலம் யெகோவா கொடுக்கிற வாரிசால்+ உங்கள் குடும்பம் தழைக்கட்டும்! யூதாவுக்கு தாமார் பெற்றெடுத்த பாரேசின்+ குடும்பம் போலப் பெருகட்டும்!” என்று வாழ்த்தினார்கள். 13  பின்பு, போவாஸ் ரூத்தைக் கூட்டிக்கொண்டு வந்து மனைவியாக்கிக்கொண்டார். யெகோவாவின் ஆசீர்வாதத்தால் அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். 14  அப்போது அங்கிருந்த பெண்கள் நகோமியைப் பார்த்து, “மீட்கும் உரிமையுள்ளவரை உங்களுக்குத் தந்த யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்! இந்தப் பிள்ளையின் பெயர் இஸ்ரவேலில் பிரபலமாகட்டும். 15  இவன் உங்களுக்குப் புது வாழ்வு தந்திருக்கிறான். உங்களுடைய வயதான காலத்தில் உங்களைக் காப்பாற்றுவான். ஏனென்றால், உங்களை நேசிக்கிற மருமகளின்+ பிள்ளை இவன்! ஏழு மகன்களைவிட உங்களுக்கு அருமையாக இருக்கிற மருமகள் பெற்ற பிள்ளை இவன்!” என்று சொன்னார்கள். 16  நகோமி அந்தக் குழந்தையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். அவனைத் தாலாட்டி சீராட்டி வளர்த்தாள். 17  பின்பு அக்கம்பக்கத்து பெண்கள், “நகோமிக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்” என்று சொல்லி, அவனுக்கு ஓபேத்+ என்று பெயர் வைத்தார்கள். ஓபேத்துக்குப் பிறந்த ஈசாயின்+ மகன்தான் தாவீது. 18  இதுதான் பாரேசின் வம்ச வரலாறு:+ பாரேசின் மகன் எஸ்ரோன்.+ 19  எஸ்ரோனின் மகன் ராம். ராமின் மகன் அம்மினதாப்.+ 20  அம்மினதாபின்+ மகன் நகசோன். நகசோனின் மகன் சல்மோன். 21  சல்மோனின் மகன் போவாஸ். போவாசின் மகன் ஓபேத். 22  ஓபேத்தின் மகன் ஈசாய்.+ ஈசாயின் மகன் தாவீது.+

அடிக்குறிப்புகள்

இவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.
நே.மொ., “மீட்கும் உரிமையுள்ளவன்.”
வே.வா., “மூப்பர்களில்.”
நே.மொ., “மீட்கும் உரிமையுள்ளவனிடம்.”
வே.வா., “என் சொத்தின் மதிப்புக் குறைந்துவிடும்.”