ரோமருக்குக் கடிதம் 10:1-21

  • கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாவது எப்படி (1-15)

    • வாயினால் அறிவிப்பது (10)

    • யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறவர்கள் மீட்புப் பெறுவார்கள் (13)

    • நல்ல செய்தியை அறிவிக்கிறவர்களின் பாதங்கள் அழகானவை (15)

  • நல்ல செய்தி ஒதுக்கித்தள்ளப்படுகிறது (16-21)

10  சகோதரர்களே, இஸ்ரவேலர்கள் மீட்புப் பெற வேண்டும் என்பது என் இதயப்பூர்வமான ஆசை,+ அதற்காகவே நான் கடவுளிடம் மன்றாடுகிறேன்.  அவர்களுக்குக் கடவுள்மீது பக்திவைராக்கியம் இருக்கிறது என்று சாட்சி சொல்கிறேன்;+ ஆனால், அது திருத்தமான அறிவுக்கேற்ற வைராக்கியம் கிடையாது.  கடவுளுடைய வழியில் நீதிமான்களாவது எப்படியென்று தெரியாமல்+ தங்களுடைய சொந்த வழியில் நீதிமான்களாவதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.+ அதனால், கடவுளுடைய நீதியான வழிக்குக் கட்டுப்படாமல் இருக்கிறார்கள்.+  கிறிஸ்து திருச்சட்டத்தின் முடிவாக இருக்கிறார்+ என்பதால் விசுவாசம் வைக்கிற எல்லாரும் கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக முடியும்.+  திருச்சட்டத்தின்படி நீதிமானாக இருக்கிறவனைப் பற்றிச் சொல்லும்போது, “அதிலுள்ள கட்டளைகளின்படி நடக்கிற மனிதன் அவற்றால் வாழ்வு பெறுவான்”+ என்று மோசே எழுதியிருக்கிறார்.  ஆனால், விசுவாசத்தின் மூலம் கடவுளுக்குமுன் நீதிமான்களாவதைப் பற்றி, “‘பரலோகத்துக்கு யாரால் ஏறிப்போக முடியும்?’+ அதாவது யாரால் பரலோகத்துக்கு ஏறிப்போய் கிறிஸ்துவைக் கீழே கொண்டுவர முடியும், என்றோ,  ‘அதலபாதாளத்துக்குள் யாரால் இறங்கிப்போக முடியும்?’+ அதாவது யாரால் அதலபாதாளத்துக்குள் இறங்கிப்போய் மரணத்திலிருந்து கிறிஸ்துவை மேலே கொண்டுவர முடியும், என்றோ உங்கள் மனதில் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள்”+ என வேதவசனம் சொல்கிறது.  வேதவசனம் இன்னும் என்ன சொல்கிறது? “அந்த வார்த்தை,” அதாவது நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் செய்தி, “உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கிறது, உங்கள் வாயிலும் இதயத்திலும் இருக்கிறது.”+  இயேசுதான் எஜமான் என்று உங்களுடைய வாயினால் எல்லாருக்கும் சொல்லி,+ அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார் என உங்களுடைய இதயத்தில் விசுவாசித்தால் உங்களுக்கு மீட்பு கிடைக்கும். 10  ஒருவன் இதயத்தில் விசுவாசிக்கும்போது கடவுளுக்கு முன்னால் நீதிமானாகிறான். தன்னுடைய வாயினால் அறிவிக்கும்போது+ மீட்புப் பெறுகிறான். 11  “அவர்மீது விசுவாசம் வைக்கிற யாருமே ஏமாற்றம் அடைய மாட்டார்கள்” என்றும் வேதவசனம் சொல்கிறது.+ 12  யூதனுக்கும் கிரேக்கனுக்கும் இடையில் எந்தப் பாகுபாடும் இல்லை.+ ஏனென்றால், எல்லாருக்கும் எஜமான் ஒருவரே; அவரிடம் வேண்டிக்கொள்கிற எல்லாருக்கும் அவர் ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுக்கிறார். 13  அதனால், “யெகோவாவின்* பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.”+ 14  ஆனாலும், அவர்மேல் விசுவாசம் வைக்காதவர்கள் எப்படி அவரிடம் வேண்டிக்கொள்வார்கள்? அவரைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் எப்படி அவர்மேல் விசுவாசம் வைப்பார்கள்? யாருமே பிரசங்கிக்காவிட்டால் எப்படி அவர்கள் கேள்விப்படுவார்கள்? 15  அனுப்பப்படாமல் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?+ “நல்ல விஷயங்களை நல்ல செய்தியாக அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!”+ என்று எழுதப்பட்டிருக்கிறதே. 16  ஆனாலும், அவர்கள் எல்லாருமே நல்ல செய்தியைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. இதைப் பற்றி, “யெகோவாவே,* நாங்கள் சொன்ன விஷயத்தை* கேட்டு அதில் விசுவாசம் வைத்தது யார்?” என்று ஏசாயா கேட்கிறார்.+ 17  அதனால், சொல்லப்பட்ட விஷயத்தைக் கேட்டால்தான் விசுவாசம் உண்டாகும்.+ கிறிஸ்துவைப் பற்றிய செய்தி சொல்லப்பட்டால்தான் அதைக் கேட்க முடியும். 18  ஆனாலும், அவர்கள் கேட்காமலா இருந்தார்கள்? சொல்லப்போனால், “அவர்களுடைய சத்தம் பூமியெங்கும் எட்டுகிறது; அவர்களுடைய செய்தி பூமியின் எல்லைகள்வரை போய்ச் சேருகிறது.”+ 19  ஆனாலும், இஸ்ரவேலர்களுக்குத் தெரியாமலா இருந்தது?+ “ஒன்றுக்கும் உதவாத ஜனங்களைக் கொண்டு உங்களுடைய கோபத்தைக் கிளறுவேன். முட்டாள்தனமான தேசத்தைக் கொண்டு உங்களுக்கு ஆக்ரோஷத்தை உண்டாக்குவேன்” என்று முதலில் மோசே சொல்கிறார்.+ 20  ஏசாயா மிகவும் தைரியத்தோடு, “என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுபிடிக்க வழிசெய்தேன்,+ என்னைப் பற்றிக் கேட்காதவர்களுக்கு என்னைத் தெரியப்படுத்தினேன்” என்று சொல்கிறார்.+ 21  ஆனால், “கீழ்ப்படியாமல் இருக்கிற, பிடிவாதம் பிடிக்கிற ஜனங்களைப் பார்த்து நாளெல்லாம் என் கைகளை நீட்டிக்கொண்டிருந்தேன்”+ என்று இஸ்ரவேலர்களைப் பற்றிச் சொல்கிறார்.

அடிக்குறிப்புகள்

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “செய்தியை.”