ரோமருக்குக் கடிதம் 12:1-21

  • உங்கள் உடலை உயிருள்ள பலியாக அர்ப்பணியுங்கள் (1, 2)

  • வித்தியாசமான வரங்கள், ஆனால் ஒரே உடல் (3-8)

  • கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஆலோசனைகள் (9-21)

12  அதனால் சகோதரர்களே, கடவுள் கரிசனையுள்ளவராக இருப்பதால் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். உங்களுடைய உடலை+ உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும்+ கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள். சிந்திக்கும் திறனைப்+ பயன்படுத்தி அவருக்குப் பரிசுத்த சேவை செய்யுங்கள்.  இந்த உலகத்தின்* பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள்.+ அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம்* என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்.*+  உங்களில் யாரும் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எண்ணாமல்,+ அவரவருக்குக் கடவுள் கொடுத்திருக்கிற* விசுவாசத்தின்படியே+ எண்ண வேண்டும். அப்படிச் செய்வது உங்களுக்குத் தெளிந்த புத்தி இருப்பதைக் காட்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட அளவற்ற கருணையால் இதை உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன்.  ஒரே உடலில் பல உறுப்புகள் இருந்தாலும்+ எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை;  அதேபோல், நாமும் பலராக இருந்தாலும் கிறிஸ்துவோடு ஒன்றுபட்டு ஒரே உடலாக இருக்கிறோம். ஆனால், ஒன்றையொன்று சார்ந்திருக்கிற தனித்தனி உறுப்புகளாக இருக்கிறோம்.+  நமக்குக் கொடுக்கப்பட்ட அளவற்ற கருணையின்படி நம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான வரங்கள் இருக்கின்றன.+ இதனால், அவரவருக்குக் கொடுக்கப்பட்ட விசுவாசத்தின்படியே, தீர்க்கதரிசனம் சொல்கிறவர்கள் தொடர்ந்து தீர்க்கதரிசனம் சொல்லட்டும்.  ஊழியம் செய்கிறவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்யட்டும். கற்றுக்கொடுக்கிறவர்கள் தொடர்ந்து கற்றுக்கொடுக்கட்டும்.+  உற்சாகப்படுத்துகிறவர்கள்* தொடர்ந்து உற்சாகப்படுத்தட்டும்.*+ பகிர்ந்து கொடுக்கிறவர்கள் தாராளமாகப் பகிர்ந்து கொடுக்கட்டும்.*+ தலைமை தாங்குகிறவர்கள் ஊக்கம் தளராமல்* தலைமை தாங்கட்டும்.+ இரக்கம் காட்டுகிறவர்கள் சந்தோஷமாக இரக்கம் காட்டட்டும்.+  உங்களுடைய அன்பு போலியாக இருக்க வேண்டாம்.+ பொல்லாததை அடியோடு வெறுத்துவிடுங்கள்.+ நல்லதை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். 10  ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள். ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்.*+ 11  சுறுசுறுப்பாக* இருங்கள், சோம்பேறியாக இருக்காதீர்கள்.*+ யெகோவாவின்* சக்தியால் நிறைந்து ஆர்வத்துடிப்போடு செயல்படுங்கள்.+ அவருக்கு அடிமைகளாக வேலை செய்யுங்கள்.+ 12  நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்தில் சகித்திருங்கள்;+ விடாமல் ஜெபம் செய்யுங்கள்.+ 13  உங்களிடம் இருப்பதைப் பரிசுத்தவான்களுடைய தேவைகளுக்கு ஏற்ப அவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.+ உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.+ 14  உங்களைக் கொடுமைப்படுத்துகிறவர்களை ஆசீர்வதிக்கச் சொல்லி கடவுளிடம் தொடர்ந்து கேளுங்கள்.+ ஆம், ஆசீர்வதிக்கச் சொல்லிக் கேளுங்கள், அவர்களைச் சபிக்காதீர்கள்.+ 15  சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள். அழுகிறவர்களோடு அழுங்கள். 16  உங்களைப் பற்றி எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களைப் பற்றியும் நினையுங்கள். மேட்டிமையான விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்காதீர்கள்,* மனத்தாழ்மையாக இருங்கள்.+ உங்களை ஞானிகள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.+ 17  யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்.+ எல்லாருடைய பார்வையிலும் எது நல்லதோ அதையே செய்யுங்கள். 18  கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்.+ 19  அன்புக் கண்மணிகளே, “‘பழிவாங்குவது என் பொறுப்பு, நானே பதிலடி கொடுப்பேன்’ என்று யெகோவா* சொல்கிறார்” என்று எழுதப்பட்டிருப்பதால்,+ நீங்கள் பழிக்குப்பழி வாங்காமல் அதைக் கடவுளுடைய கடும் கோபத்துக்கு விட்டுவிடுங்கள்.+ 20  “உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிட கொடுங்கள். அவன் தாகமாக இருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள். இப்படிச் செய்யும்போது நெருப்புத் தணலை அவன் தலைமேல் குவிப்பீர்கள்.”*+ 21  தீமை உங்களை வெல்ல விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “சகாப்தத்தின்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “சித்தம்.”
வே.வா., “நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும்.”
வே.வா., “பகிர்ந்து கொடுத்திருக்கிற.”
வே.வா., “அறிவுரை சொல்கிறவர்கள்.”
வே.வா., “அறிவுரை சொல்லட்டும்.”
வே.வா., “நன்கொடை கொடுக்கிறவர்கள் தாராளமாகக் கொடுக்கட்டும்.”
வே.வா., “ஆர்வமாக.”
வே.வா., “முதல் படியை எடுங்கள்.”
வே.வா., “பக்திவைராக்கியத்தோடு.”
வே.வா., “உங்கள் வேலையில் மந்தமாக இருக்காதீர்கள்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “மேட்டிமையான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
அதாவது, ஒருவரைச் சாந்தப்படுத்தி, அவருடைய கல்நெஞ்சத்தைக் கரைய வைப்பதைக் குறிக்கிறது.