ரோமருக்குக் கடிதம் 15:1-33

  • கிறிஸ்து நம்மை வரவேற்றதுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் வரவேற்க வேண்டும் (1-13)

  • பவுல், மற்ற தேசத்து மக்களுக்குத் தொண்டர் (14-21)

  • பவுலின் பயணத் திட்டங்கள் (22-33)

15  ஆனாலும், விசுவாசத்தில் பலமாக இருக்கிற நாம் பலவீனமாக இருக்கிறவர்களுடைய பலவீனங்களைத் தாங்கிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.+ நமக்குப் பிரியமாக நாம் நடந்துகொள்ளக் கூடாது.+  நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும், அவர்களுக்குப் பிரியமாக நடந்துகொள்ள வேண்டும்.+  கிறிஸ்துவும் தனக்குப் பிரியமாக நடந்துகொள்ளாமல்,+ “உங்களைப் பழித்துப் பேசியவர்களின் பழிப்பேச்சுகளை நான் தாங்கிக்கொண்டேன்”+ என்று எழுதப்பட்டிருக்கிறபடியே நடந்துகொண்டார்.  அன்று எழுதப்பட்ட வேதவசனங்கள் எல்லாம் நமக்கு அறிவுரை கொடுப்பதற்காகவே எழுதப்பட்டன;+ அவை நமக்கு நம்பிக்கை தருகின்றன.+ ஏனென்றால், அவை நம்மை ஆறுதல்படுத்துகின்றன, சகித்திருக்க நமக்கு உதவுகின்றன.+  சகிப்புத்தன்மையையும் ஆறுதலையும் தருகிற கடவுள், கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தையை உங்களுக்கும் கொடுக்கட்டும்.  அப்போதுதான், நீங்கள் ஒன்றுசேர்ந்து+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளை, அவருடைய தகப்பனை, ஒரே குரலில்* புகழ்வீர்கள்.  அதனால், கிறிஸ்து நம்மை வரவேற்றதுபோல்*+ நீங்களும் ஒருவரை ஒருவர் வரவேற்க* வேண்டும்.+ அப்போது, கடவுளுக்குப் புகழ் சேர்ப்பீர்கள்.  கடவுள் உண்மையுள்ளவர் என்பதை நிரூபிப்பதற்காகவும் முன்னோர்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்துவதற்காகவும்,+ விருத்தசேதனம் செய்தவர்களுக்குக் கிறிஸ்து ஊழியரானார்.+  அதோடு, மற்ற தேசத்து மக்கள் கடவுளுடைய இரக்கத்தைப் பெற்று அவரைப் புகழ்வதற்காகவும்+ கிறிஸ்து ஊழியரானார் என்று நான் சொல்கிறேன். “அதனால் எல்லா மக்கள் மத்தியிலும் நான் உங்களைப் புகழ்வேன், உங்களுடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்”+ என்று எழுதப்பட்டிருக்கிறபடியே நடந்தது. 10  அதோடு, “தேசங்களே, அவருடைய ஜனங்களோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+ 11  “தேசங்களே, எல்லாரும் யெகோவாவை* புகழுங்கள்; எல்லா மக்களும் அவரைப் புகழ்வார்களாக” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+ 12  ஏசாயாவும் இப்படிச் சொல்கிறார்: “ஈசாயின் வேராக இருப்பவர் தோன்றுவார்,+ பல தேசத்து மக்களை ஆட்சி செய்வதற்கு அவர் எழும்புவார்.+ அந்த மக்கள் அவர்மேல் நம்பிக்கை வைப்பார்கள்.”+ 13  நீங்கள் கடவுள்மேல் விசுவாசம் வைத்திருப்பதால், நம்பிக்கை தருகிற கடவுள் உங்களை எல்லாவித சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்பட்டும். அப்போது, கடவுளுடைய சக்தியின் வல்லமையால் உங்களுடைய நம்பிக்கை அதிகமதிகமாகப் பலப்படும்.+ 14  என் சகோதரர்களே, நீங்கள் எல்லா அறிவும் நிறைந்தவர்களாக இருப்பது போலவே, நல்ல செயல்கள் செய்வதற்குத் தயாரானவர்களாகவும் ஒருவருக்கொருவர் புத்திசொல்ல* தகுதியுள்ளவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன். 15  இருந்தாலும் சகோதரர்களே, கடவுளுடைய அளவற்ற கருணை எனக்குக் கிடைத்திருப்பதால் இப்போது உங்களுக்குச் சில குறிப்புகளை மறுபடியும் ஞாபகப்படுத்துவதற்காக ஒளிவுமறைவில்லாமல் எழுதியிருக்கிறேன். 16  கிறிஸ்து இயேசுவின் தொண்டனாக நான் கடவுளுடைய நல்ல செய்தியை மற்ற தேசத்து மக்களுக்கு அறிவிப்பதற்காக அந்த அளவற்ற கருணையைப் பெற்றேன்.+ மற்ற தேசத்து மக்கள் கடவுளுடைய சக்தியால் புனிதமாக்கப்பட்டு அவருக்குப் பிரியமான காணிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த நல்ல செய்தியை அறிவிக்கும் பரிசுத்த வேலையைச் செய்து வருகிறேன்.+ 17  அதனால், கிறிஸ்து இயேசுவின் சீஷனாகிய நான் கடவுளுக்குச் செய்யும் சேவைகளை நினைத்து சந்தோஷப்பட காரணம் இருக்கிறது. 18  மற்ற தேசத்து மக்கள் கீழ்ப்படிவதற்காகக் கிறிஸ்து என் மூலம் செய்தவற்றைத் தவிர வேறெதைப் பற்றியும் பேசுவதற்கு நான் துணிய மாட்டேன். என்னுடைய சொல்லாலும் செயலாலும், 19  அற்புதங்களாலும் அடையாளங்களாலும்,+ கடவுளுடைய சக்தியின் வல்லமையாலும் எல்லாவற்றையும் அவர் செய்தார். அதனால், நான் எருசலேமிலிருந்து இல்லிரிக்கம்வரை சுற்றிலும் போய், கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியை முழுமையாகப் பிரசங்கித்திருக்கிறேன்.+ 20  கிறிஸ்துவைப் பற்றி இதுவரை அறிவிக்கப்படாத இடங்களில் மட்டும்தான் அந்த நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதை என்னுடைய குறிக்கோளாக வைத்தேன். ஏனென்றால், வேறொருவன் கட்டிய அஸ்திவாரத்தின் மேல் கட்ட எனக்கு விருப்பமில்லை. 21  அதனால், “அவரைப் பற்றி யாருக்குச் சொல்லப்படவில்லையோ அவர்கள் பார்ப்பார்கள், அவரைப் பற்றி யார் கேள்விப்படவில்லையோ அவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறபடியே+ செய்யத் தீர்மானமாயிருந்தேன். 22  அதனால்தான், உங்களிடம் வருவதற்குப் பல தடவை எனக்குத் தடங்கல் ஏற்பட்டது. 23  ஆனால், இந்த இடங்களில் நான் பிரசங்கிக்காத பகுதிகள் இனி எதுவும் இல்லை. அதோடு, உங்களிடம் வருவதற்குப் பல* வருஷங்களாக நான் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். 24  அதனால், ஸ்பெயினுக்குப் போகும் வழியில் உங்களைச் சந்தித்து சில காலமாவது உங்களோடு சந்தோஷமாக நேரம் செலவு செய்வேன் என்று எதிர்பார்க்கிறேன். பின்பு, அங்கிருந்து சற்றுத் தூரம் என் கூடவே வந்து என்னை வழியனுப்புவீர்கள் என்றும் நம்புகிறேன். 25  இப்போது, எருசலேமில் இருக்கிற பரிசுத்தவான்களுக்கு உதவி செய்ய* புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.+ 26  மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் இருக்கிற சகோதரர்கள் எருசலேமில் உள்ள ஏழை எளிய பரிசுத்தவான்களுக்குச் சந்தோஷமாக நன்கொடை கொடுத்திருக்கிறார்கள்.+ 27  உண்மையில், அப்படிக் கொடுப்பதற்கு அவர்கள் கடன்பட்டிருந்தார்கள். கடவுளிடமிருந்து அந்தப் பரிசுத்தவான்கள் பெற்றுக்கொண்டதை மற்ற தேசத்து மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதனால், மற்ற தேசத்து மக்கள் தங்களுடைய பொருள்களைக் கொடுத்து அந்தப் பரிசுத்தவான்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருந்தார்கள்.+ 28  இந்த நன்கொடையைப் பரிசுத்தவான்களின் கையில் பத்திரமாக ஒப்படைத்து என் வேலையை முடித்த பின்பு, ஸ்பெயினுக்குப் போகும் வழியில் உங்களைச் சந்திக்க வருவேன். 29  அப்போது, கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட நிறைவான ஆசீர்வாதங்களோடு வருவேன். 30  சகோதரர்களே, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கிற விசுவாசத்தின் காரணமாகவும், கடவுளுடைய சக்தி பொழிகிற அன்பின் காரணமாகவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்வது இதுதான்: என்னோடு சேர்ந்து எனக்காகக் கடவுளிடம் உருக்கமாக ஜெபம் செய்யுங்கள்.+ 31  யூதேயாவில் நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளாத ஆட்களிடமிருந்து நான் பாதுகாக்கப்பட வேண்டும்+ என்றும், எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களுக்கு நான் செய்யப்போகிற உதவியை அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்+ என்றும் ஜெபம் செய்யுங்கள். 32  அப்போதுதான், கடவுளுடைய விருப்பத்தின்படி* நான் சந்தோஷமாக வந்து உங்களோடு சேர்ந்து புத்துணர்ச்சி அடைவேன். 33  சமாதானத்தைத் தருகிற கடவுள் உங்கள் எல்லாரோடும் இருக்கட்டும்.+ ஆமென்.*

அடிக்குறிப்புகள்

நே.மொ., “வாயினால்.”
வே.வா., “ஏற்றுக்கொள்ள.”
வே.வா., “ஏற்றுக்கொண்டதுபோல்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “ஆலோசனை சொல்ல.”
அல்லது, “சில.”
நே.மொ., “சேவை செய்ய.”
வே.வா., “சித்தத்தின்படி.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”