ரோமருக்குக் கடிதம் 16:1-27
16 கெங்கிரேயா+ சபையில் ஊழியம் செய்கிற நம் சகோதரி பெபேயாளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.*
2 நீங்கள் பரிசுத்தவான்களை வரவேற்பதுபோல் நம் எஜமானைப் பின்பற்றுகிற அவளையும் வரவேற்று அவளுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்யுங்கள்.+ ஏனென்றால், அவள் நிறைய பேருக்கு ஆதரவாக இருந்தாள், எனக்கும்கூட ஆதரவாக இருந்தாள்.
3 கிறிஸ்து இயேசுவின் சேவையில் என் சக வேலையாட்களாக இருக்கிற பிரிஸ்கில்லாளுக்கும் ஆக்கில்லாவுக்கும்+ என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.
4 எனக்காக அவர்கள் தங்களுடைய உயிரையே பணயம் வைத்தார்கள்.+ அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன், மற்ற தேசத்தாரின் எல்லா சபைகளும்கூட நன்றி சொல்கின்றன.
5 அந்தத் தம்பதியின் வீட்டில் கூடுகிற சபைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.+ ஆசியாவில் முதன்முதலாகக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவரான என் அன்புக்குரிய எப்பனெத்துவுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்.
6 உங்களுக்காகக் கடினமாக உழைத்த மரியாளுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்.
7 என்னோடு கைதிகளாயிருந்த என்னுடைய சொந்தக்காரர்கள்+ அன்றோனீக்குவுக்கும் யூனியாவுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். இவர்கள் அப்போஸ்தலர்களிடம் நல்ல பெயர் எடுத்தவர்கள், எனக்கு முன்பே கிறிஸ்துவின் சீஷர்களானவர்கள்.
8 நம் எஜமானைப் பின்பற்றுகிற என் அன்புக்குரிய அம்பிலியாத்துக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்.
9 கிறிஸ்துவின் சேவையில் நம்முடைய சக வேலையாளாகிய உர்பானுவுக்கும், என்னுடைய அன்பான ஸ்தாக்கிக்குவுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.
10 கிறிஸ்துவின் சீஷனாக நல்ல பெயர் எடுத்த அப்பெல்லேவுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். அரிஸ்தொபுலுவின் வீட்டில் இருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்.
11 என்னுடைய சொந்தக்காரர் ஏரோதியோனுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். நம்முடைய எஜமானைப் பின்பற்றுகிற நர்கீசுவின் வீட்டில் இருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்.
12 நம் எஜமானுக்காகக் கடினமாய் உழைத்து வருகிற பெண்களான திரிபேனாளுக்கும் திரிபோசாளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். நம் எஜமானுக்காக கடினமாய் உழைத்த அன்புக்குரிய பெர்சியாளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.
13 நம் எஜமானால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூபுவுக்கும் அவனுடைய அம்மாவுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்; அவர் எனக்கும் அம்மாதான்.
14 அசிங்கிரீத்து, பிலெகோன், எர்மே, பத்திரொபா, எர்மா ஆகியோருக்கும் அவர்களோடு இருக்கிற சகோதரர்களுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.
15 பிலொலோகுவுக்கும், யூலியாளுக்கும், நேரேயைக்கும், அவனுடைய சகோதரிக்கும், ஒலிம்பாவுக்கும், அவர்களோடு இருக்கிற பரிசுத்தவான்கள் எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.
16 சுத்தமான இதயத்தோடு ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து வாழ்த்துச் சொல்லுங்கள். கிறிஸ்துவின் எல்லா சபைகளும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கின்றன.
17 சகோதரர்களே, நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். நீங்கள் கற்றுக்கொண்ட போதனைக்கு முரணாகப் பிரிவினைகளையும் தடைகளையும் ஏற்படுத்துகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், அவர்களிடமிருந்து விலகியிருங்கள்.+
18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய எஜமானாகிய கிறிஸ்துவுக்கு அடிமைகளாக இல்லை, தங்களுடைய ஆசைகளுக்கே* அடிமைகளாக இருக்கிறார்கள். கள்ளம்கபடம் இல்லாதவர்களுடைய உள்ளத்தைத் தங்கள் நயமான பேச்சினாலும் புகழ்ச்சியினாலும் ஏமாற்றுகிறார்கள்.
19 நீங்கள் கீழ்ப்படிந்து நடப்பதை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள்; அதனால், உங்களை நினைத்து சந்தோஷப்படுகிறேன். ஆனால், நீங்கள் நன்மை செய்வதில் ஞானமுள்ளவர்களாகவும், தீமையைப் பற்றித் தெரியாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.+
20 சமாதானத்தைத் தருகிற கடவுள் சீக்கிரத்தில் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப்போடுவார்.+ நம் எஜமானாகிய இயேசுவின் அளவற்ற கருணை உங்களோடு இருக்கட்டும்.
21 என்னுடைய சக வேலையாளாகிய தீமோத்தேயுவும், என்னுடைய சொந்தக்காரர்கள்+ லூகியுவும் யாசோனும் சொசிபத்தரும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்.
22 பவுல் சொல்லச்சொல்ல இந்தக் கடிதத்தை எழுதிய தெர்தியுவாகிய நான் கிறிஸ்தவ வாழ்த்துக்களை உங்களுக்குச் சொல்கிறேன்.
23 என்னையும் சபையார் எல்லாரையும் உபசரித்து வருகிற காயு+ உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார். நகர பொருளாளர்* ஏரஸ்துவும் அவருடைய சகோதரன் குவர்த்துவும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்.
24 *——
25 கடவுளால் உங்களைப் பலப்படுத்த முடியும் என்பதை நான் அறிவிக்கிற நல்ல செய்தியும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்கப்படுகிற செய்தியும் காட்டுகின்றன. அந்த நல்ல செய்தி, நீண்ட காலம் மறைபொருளாக வைக்கப்பட்டு இப்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிற பரிசுத்த ரகசியத்தோடு+ ஒத்திருக்கிறது.
26 தீர்க்கதரிசனப் புத்தகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த ரகசியம், எல்லா தேசத்து மக்களுக்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது. என்றென்றும் இருக்கிற கடவுளின் கட்டளைப்படி அவர்கள் விசுவாசித்துக் கீழ்ப்படிவதற்காக அவர்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டு வருகிறது.
27 அந்தக் கடவுள் ஒருவர்தான் ஞானமுள்ளவர்.+ இயேசு கிறிஸ்துவின் மூலம் அவருக்கே என்றென்றும் புகழ் உண்டாவதாக. ஆமென்.*
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “சிபாரிசு செய்கிறேன்.”
^ வே.வா., “வயிற்றுக்கே.”
^ வே.வா., “நிர்வாகி.”
^ இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
^ அதாவது, “அப்படியே ஆகட்டும்.”