ரோமருக்குக் கடிதம் 3:1-31

  • “கடவுள் உண்மையானவராக இருப்பார்” (1-8)

  • யூதர்களும் கிரேக்கர்களும் பாவிகள் (9-20)

  • விசுவாசத்தால் நீதிமான்களாக முடியும் (21-31)

    • எல்லாருமே கடவுளின் மகிமையான குணங்களைக் காட்டுவதில்லை (23)

3  அப்படியானால், யூதனாக இருப்பதால் நன்மை இருக்கிறதா, விருத்தசேதனம் செய்வதால் பயன் இருக்கிறதா?  எல்லா விதத்திலும் நிறைய நன்மை இருக்கிறது. முதலாவதாக, யூதர்களிடம்தான் கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகள் ஒப்படைக்கப்பட்டன.+  இருந்தாலும், சில யூதர்கள் விசுவாசம் வைக்கவில்லை! அதனால் என்ன? சிலர் விசுவாசம் வைக்காததால் கடவுள் உண்மையில்லாதவராக ஆகிவிடுவாரா?  இல்லவே இல்லை! மனிதர்கள் எல்லாரும் பொய்யர்களாக இருந்தாலும்+ கடவுள் உண்மையானவராக இருப்பார்.+ ஏனென்றால், “நீங்கள் நீதியுள்ளவர் என்பதை உங்களுடைய வார்த்தைகள் நிரூபிக்கும்.+ உங்களுடைய வழக்கில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.  ஆனாலும் சிலர், “நாம் அநீதியாக நடந்துகொள்ளும்போது, கடவுள் நீதியானவர் என்பது தெளிவாகத் தெரிகிறது, இல்லையா? அப்படியிருக்கும்போது, அவர் நம்மேல் கடும் கோபத்தைக் காட்டுவது நியாயமாக இருக்குமா?” என்று நினைக்கிறார்கள்.  கடவுள் நியாயமில்லாதவராக இருக்கவே முடியாது! அப்படி அவர் நியாயமில்லாதவர் என்றால், அவரால் எப்படி இந்த உலகத்தை நியாயந்தீர்க்க முடியும்?+  வேறு சிலர், “நான் பொய் பேசும்போது, கடவுள் உண்மையானவர் என்பது தெளிவாகத் தெரிவதோடு அவருக்கு மகிமையும் சேருகிறது, இல்லையா? அப்படியிருக்கும்போது, நான் ஏன் பாவி என்று தீர்ப்பளிக்கப்பட வேண்டும்” என்று கேட்கிறார்கள்.  அப்படிப் பார்த்தால், “நாம் தீமை செய்யலாம். அதன் மூலம் நன்மை வரும்” என்று சொல்லலாமே? நாங்கள் இப்படிச் சொல்வதாகச் சில ஆட்கள் எங்கள்மீது குற்றம்சாட்டுகிறார்கள். அவர்கள் சொல்வது பொய். அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைப்பது நியாயம்தான்.+  அப்படியானால் என்ன? யூதர்களான நாம் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களா? இல்லவே இல்லை! யூதர்கள், கிரேக்கர்கள் எல்லாருமே பாவத்தின் பிடியில் இருப்பதாக+ ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். 10  எழுதப்பட்டிருக்கிறபடி, “நீதிமானே இல்லை, ஒருவன்கூட இல்லை.+ 11  விவேகமாக நடக்கிறவன் ஒருவன்கூட இல்லை, கடவுளைத் தேடுகிறவன் ஒருவன்கூட இல்லை. 12  எல்லா மனிதர்களும் வழிவிலகிப் போயிருக்கிறார்கள், எல்லாரும் கெட்டுப்போயிருக்கிறார்கள்; கருணை காட்டுகிறவனே இல்லை, ஒருவன்கூட இல்லை.”+ 13  “அவர்களுடைய தொண்டை ஒரு திறந்த கல்லறை, அவர்கள் தங்களுடைய நாவுகளால் ஏமாற்றியிருக்கிறார்கள்.”+ “அவர்களுடைய உதடுகளின் பின்னால் பாம்பின் விஷம் இருக்கிறது.”+ 14  “அவர்கள் வாயைத் திறந்தாலே சாபங்களும் கசப்பான வார்த்தைகளும்தான் வருகின்றன.”+ 15  “அவர்களுடைய கால்கள் இரத்தத்தைச் சிந்த ஓடுகின்றன.”+ 16  “எப்போதும் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிறார்கள், கஷ்டம் கொடுக்கிறார்கள். 17  சமாதான வழியைப் பற்றித் தெரியாமல் இருக்கிறார்கள்.”+ 18  “அவர்களுக்குக் கடவுள்பயம் துளிகூட இல்லை.”+ 19  திருச்சட்டம் சொல்கிற எல்லாம் திருச்சட்டத்தின்கீழ் இருக்கிறவர்களுக்குத்தான் என்பது நமக்குத் தெரியும். அதனால், அவர்களில் யாரும் தங்களைக் குற்றமில்லாதவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாது. உலகமே கடவுளுடைய தண்டனைக்கு ஆளாகும் நிலையில் இருக்கிறது.+ 20  அதனால், திருச்சட்டத்தின் செயல்களைச் செய்வதால் யாருமே கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.+ திருச்சட்டத்தின் மூலம்தான் பாவத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்கிறார்கள்.+ 21  இப்போதோ, திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்காமலேயே கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக இருக்க முடியும் என்பது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது.+ இது திருச்சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும்கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது.+ 22  இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம் கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக இருக்க முடியும், விசுவாசம் வைக்கிற எல்லாருமே நீதிமான்களாக இருக்க முடியும். இதில் எந்தப் பாகுபாடும் இல்லை.+ 23  ஏனென்றால், எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைக் காட்டத் தவறியிருக்கிறார்கள்.+ 24  இருந்தாலும், கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலையால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு,+ நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இது கடவுளுடைய அளவற்ற கருணையால்+ கிடைக்கும் ஓர் இலவச அன்பளிப்பு.+ 25  கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைப்பதன் மூலம்+ மனிதர்கள் தன்னோடு சமாதானமாவதற்காக அவரைப் பிராயச்சித்த பலியாக* கடவுள் கொடுத்தார்.+ முற்காலத்தில் செய்யப்பட்ட பாவங்களைச் சகித்துக்கொண்டு மன்னித்தது நீதியான செயல் என்பதைக் காட்டுவதற்காக அவர் அப்படிச் செய்தார். 26  இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும் மனிதனை நீதிமானாக ஏற்றுக்கொள்வதன்+ மூலம் தான் நீதியுள்ளவர்+ என்பதை இந்தக் காலத்தில் நிரூபிப்பதற்காகவும் அவர் அப்படிச் செய்தார். 27  அதனால், ஒருவன் பெருமையடிக்க முடியுமா? முடியாது. எந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒருவனால் பெருமையடிக்க முடியும்? செயல்கள் முக்கியம் என்று சொல்கிற சட்டத்தின் அடிப்படையிலா?+ இல்லவே இல்லை, விசுவாசம் முக்கியம் என்று சொல்கிற சட்டத்தின் அடிப்படையில்தான். 28  அதனால், திருச்சட்டத்தின் செயல்களைச் செய்வதால் அல்ல, விசுவாசத்தால்தான் ஒருவன் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என்ற முடிவுக்கு வருகிறோம்.+ 29  கடவுள் யூதர்களுக்கு மட்டுமா கடவுள்?+ மற்ற தேசத்து மக்களுக்கும் அவர்தானே கடவுள்?+ ஆம், மற்ற தேசத்து மக்களுக்கும் அவர்தான் கடவுள்.+ 30  கடவுள் ஒருவர்+ என்பதால், விருத்தசேதனம் செய்தவர்களையும் சரி, விருத்தசேதனம் செய்யாதவர்களையும் சரி, அவர்களுடைய விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக ஏற்றுக்கொள்வார்.+ 31  அப்படியானால், நம்முடைய விசுவாசத்தால் நாம் திருச்சட்டத்தை ஒழிக்கிறோமா? இல்லவே இல்லை! உண்மையில், நாம் திருச்சட்டத்தை நிலைநாட்டுகிறோம்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “பாவப் பரிகார பலியாக.”