ரோமருக்குக் கடிதம் 9:1-33

  • இஸ்ரவேலர்களை நினைத்து பவுல் துக்கப்படுகிறார் (1-5)

  • ஆபிரகாமின் உண்மையான சந்ததி (6-13)

  • கடவுள் தேர்ந்தெடுக்கிறவர்களைப் பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது (14-26)

    • கடும் கோபத்துக்கும் அழிவுக்கும் உரிய பாத்திரங்கள் (22, 23)

  • மீதியாக இருப்பவர்களே காப்பாற்றப்படுவார்கள் (27-29)

  • இஸ்ரவேலர்கள் தடுக்கி விழுந்தார்கள் (30-33)

9  கிறிஸ்துவைப் பின்பற்றுகிற நான் உண்மையைத்தான் பேசுகிறேன், பொய் பேசவில்லை. ஏனென்றால், கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிற என் மனசாட்சி என்னோடுகூட சாட்சி சொல்கிறது.  இதயத்தில் எனக்கு மிகுந்த துக்கமும் தீராத வேதனையும் இருக்கிறது.  என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்காக நானே கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து சாபத்துக்குள்ளாக முடியுமானால் அதற்கும் தயாராயிருக்கிறேன்.  அவர்கள்தான் இஸ்ரவேலர்கள், அவர்கள்தான் கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்பட்டவர்கள்,+ மகிமையையும் ஒப்பந்தங்களையும்+ திருச்சட்டத்தையும்+ பரிசுத்த சேவை செய்கிற பாக்கியத்தையும்+ வாக்குறுதிகளையும்+ பெற்றவர்கள்.  அவர்கள்தான் முன்னோர்களின் வழியில் வந்தவர்கள்;+ அவர்களுடைய வம்சத்தில்தான் கிறிஸ்து வந்தார்.+ எல்லாவற்றுக்கும் மேலான கடவுள் என்றென்றும் போற்றப்படுவாராக. ஆமென்.*  ஆனாலும், கடவுளுடைய வார்த்தை நிறைவேறாமல் போய்விட்டதென்று அர்த்தமாகாது. ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தில் வருகிற எல்லாரும் உண்மையில் “இஸ்ரவேலர்கள்” கிடையாது.+  அதேபோல், அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் எல்லாரும் உண்மையில் அவருடைய பிள்ளைகளும் கிடையாது.+ ஆனால், “ஈசாக்கின் வழியாக உருவாகும் சந்ததிதான் உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படும்”+ என்று அவருக்குச் சொல்லப்பட்டது.  அதனால், இயல்பான முறையில் ஆபிரகாமுக்குப் பிறந்த பிள்ளைகள் கடவுளுடைய பிள்ளைகள் கிடையாது,+ வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகள்தான்+ ஆபிரகாமின் சந்ததியாகக் கடவுளால் கருதப்படுகிறார்கள்.  “இதே சமயம் நான் வருவேன், அப்போது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது.+ 10  அதுமட்டுமல்ல, நம்முடைய மூதாதையான ஈசாக்கின் மூலம் ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்தபோது,+ 11  அதாவது இன்னும் அந்தக் குழந்தைகள் பிறக்காமலும் நல்லதோ கெட்டதோ செய்யாமலும் இருந்தபோது, “பெரியவன் சின்னவனுக்கு அடிமையாக இருப்பான்” என்று அவளிடம் சொல்லப்பட்டது.+ 12  “யாக்கோபை நேசித்தேன், ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டும் இருக்கிறது.+ 13  அதனால், கடவுளுடைய நோக்கத்தின்படி மனிதர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அவர்களுடைய செயல்களைச் சார்ந்தில்லை, தேர்ந்தெடுக்கிற அவரையே எப்போதும் சார்ந்திருக்கிறது. 14  அப்படியானால், நாம் என்ன சொல்வோம்? கடவுளிடம் அநியாயம் இருக்கிறதா? இல்லவே இல்லை!+ 15  ஏனென்றால் அவர் மோசேயிடம், “யாருக்கு இரக்கம் காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்; யாருக்குக் கரிசனை காட்ட நினைக்கிறேனோ அவர்களுக்குக் கரிசனை காட்டுவேன்”+ என்று சொன்னார். 16  அதனால், தேர்ந்தெடுக்கப்படுவது இரக்கமுள்ள கடவுளைத்தான் சார்ந்திருக்கிறது,+ ஒருவருடைய விருப்பத்தையோ முயற்சியையோ* சார்ந்தில்லை. 17  பார்வோனிடம் கடவுள், “உன் மூலம் என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்” என்று சொன்னதாக வேதவசனம் குறிப்பிடுகிறது.+ 18  அதனால், அவர் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறாரோ அவருக்கு இரக்கம் காட்டுகிறார், யாரைப் பிடிவாதக்காரராக இருக்கும்படி விட்டுவிட விரும்புகிறாரோ அவரைப் பிடிவாதக்காரராக இருக்கும்படி விட்டுவிடுகிறார்.+ 19  அப்படியானால், “மனிதர்கள்மீது கடவுள் குற்றம் கண்டுபிடிப்பது நியாயமா? அவர் தீர்மானித்திருப்பதை யாராலும் மாற்ற முடியாது, இல்லையா?” என்று நீங்கள் கேட்கலாம். 20  ஆனால், கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்?+ வடிவமைக்கப்பட்ட பொருள் தன்னை வடிவமைத்தவரிடம், “நீ ஏன் என்னை இப்படி வடிவமைத்தாய்?” என்று கேட்க முடியுமா?+ 21  ஒரே களிமண் உருண்டையை வைத்து கண்ணியமான காரியத்துக்காக ஒரு பாத்திரத்தையும் கண்ணியமற்ற காரியத்துக்காக இன்னொரு பாத்திரத்தையும் செய்ய அந்தக் களிமண்மீது குயவனுக்கு அதிகாரம் இல்லையா?+ 22  தன்னுடைய கடும் கோபத்தையும் வல்லமையையும் வெளிக்காட்ட கடவுளுக்கு விருப்பம் இருந்தாலும், கடும் கோபத்துக்கும் அழிவுக்கும் உரிய பாத்திரங்களைப் பொறுமையோடு சகித்துக்கொண்டார் என்றால், யார் என்ன சொல்ல முடியும்? 23  மகிமை பெறும்படி தான் உண்டாக்கியிருந்த இரக்கத்துக்குரிய பாத்திரங்கள்மீது+ தன்னுடைய அளவில்லாத மகிமையைக் காட்டுவதற்காக, 24  அதாவது யூதர்களிலிருந்து மட்டுமல்லாமல் மற்ற தேசத்து மக்களிலிருந்தும் அழைக்கப்பட்டவர்களாகிய+ நம்மீது தன்னுடைய அளவில்லாத மகிமையைக் காட்டுவதற்காக, அப்படிப் பொறுமையோடு இருந்தார் என்றால், யார் என்ன சொல்ல முடியும்? 25  அதுபோலவே, “என்னுடைய ஜனங்களாக இல்லாதவர்களை+ ‘என் ஜனங்கள்’ என்றும், அன்புக்குரியவளாக இல்லாதவளை ‘அன்புக்குரியவள்’ என்றும் அழைப்பேன்” என்று ஓசியா புத்தகத்தில்கூட அவர் சொல்லியிருக்கிறாரே.+ 26  அதோடு, “‘நீங்கள் என்னுடைய ஜனங்கள் அல்ல’ என்று எந்த இடத்தில் சொன்னேனோ அதே இடத்தில், ‘நீங்கள் உயிருள்ள கடவுளின் பிள்ளைகள்’ என்று அழைப்பேன்” என்றும் சொல்லியிருக்கிறாரே.+ 27  அதோடு, இஸ்ரவேலர்களைப் பற்றி ஏசாயா, “இஸ்ரவேல் ஜனங்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப் போல் இருந்தாலும், மீதியாக இருப்பவர்களே காப்பாற்றப்படுவார்கள்.+ 28  ஏனென்றால், இந்தப் பூமியில் வாழும் மக்களிடம் யெகோவா* கணக்குக் கேட்பார், அதைச் சீக்கிரமாகச் செய்து முடிப்பார்”+ என்று சொன்னார். 29  அதோடு, “பரலோகப் படைகளின் யெகோவா* நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காமல் போயிருந்தால், நாம் சோதோமைப் போலவும், கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்”+ என்று அவர் முன்கூட்டியே சொன்னார். 30  அப்படியானால், நாம் என்ன சொல்வோம்? மற்ற தேசத்து மக்கள் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்யாதபோதிலும்,+ விசுவாசத்தால் கடவுளுக்குமுன் நீதிமான்களானார்கள்.+ 31  ஆனால் இஸ்ரவேலர்கள் திருச்சட்டத்தின் அடிப்படையில் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்தபோதிலும், நீதிமான்களாகவில்லை. 32  ஏன்? ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தால் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்யாமல், செயல்களால் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்தார்கள். “தடைக்கல்” மீது அவர்கள் தடுக்கி விழுந்தார்கள்.+ 33  இதைப் பற்றித்தான், “இதோ! தடைக்கல்லை,+ அதாவது தடுக்கி விழ வைக்கும் கற்பாறையை, நான் சீயோனில் வைக்கிறேன். அதன்மீது விசுவாசம் வைக்கிறவன் ஏமாற்றம் அடைய மாட்டான்”+ என்று எழுதப்பட்டிருக்கிறது.

அடிக்குறிப்புகள்

அதாவது, “அப்படியே ஆகட்டும்.”
நே.மொ., “விரும்புகிறவனையோ ஓடுகிறவனையோ.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.