கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 11:1-34

  • “என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” (1)

  • தலைமையும் முக்காடும் (2-16)

  • எஜமானுடைய இரவு விருந்தை அனுசரிப்பது (17-34)

11  நான் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதுபோல் நீங்கள் என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.+  என்னை ஞாபகத்தில் வைத்து எல்லாவற்றையும் செய்வதற்காகவும், நான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த விஷயங்களை அப்படியே கடைப்பிடிப்பதற்காகவும் உங்களைப் பாராட்டுகிறேன்.  ஆனால், ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்,+ பெண்ணுக்கு ஆண் தலையாக* இருக்கிறான்,+ கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்+ என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.  ஜெபம் செய்யும்போது அல்லது தீர்க்கதரிசனம் சொல்லும்போது தன்னுடைய தலையை மூடிக்கொள்கிற ஒவ்வொரு ஆணும் தன்னுடைய தலையை அவமதிக்கிறான்.  ஆனால், ஜெபம் செய்யும்போது அல்லது தீர்க்கதரிசனம் சொல்லும்போது முக்காடு போடாத ஒவ்வொரு பெண்ணும்+ தன்னுடைய தலையை அவமதிக்கிறாள்; இது அவளுடைய தலைமுடியைச் சிரைத்துவிட்டதற்குச் சமம்.  ஒரு பெண் முக்காடு போடவில்லை என்றால், தன்னுடைய தலைமுடியை ஒட்ட வெட்டிக்கொள்ள வேண்டும்; அப்படித் தன்னுடைய தலைமுடியை ஒட்ட வெட்டிக்கொள்வதோ தலைமுடியைச் சிரைத்துக்கொள்வதோ அவளுக்கு அவமானமாக இருந்தால், அவள் முக்காடு போட வேண்டும்.  ஆண் தன்னுடைய தலையில் முக்காடு போட்டுக்கொள்ளக் கூடாது, ஏனென்றால் அவன் கடவுளுடைய சாயலாகவும்+ அவருக்குப் பெருமை சேர்க்கிறவனாகவும் இருக்கிறான்; பெண்ணோ ஆணுக்குப் பெருமை சேர்க்கிறவளாக இருக்கிறாள்.  பெண்ணிலிருந்து ஆண் வரவில்லை, ஆணிலிருந்துதான் பெண் வந்தாள்.+  அதோடு, பெண்ணுக்காக ஆண் படைக்கப்படவில்லை, ஆணுக்காகத்தான் பெண் படைக்கப்பட்டாள்.+ 10  இதை முன்னிட்டும் தேவதூதர்களை முன்னிட்டும்,+ பெண் தன்னுடைய தலையில் கீழ்ப்படிதலின் அடையாளமாகிய முக்காட்டைப் போட்டுக்கொள்ள வேண்டும். 11  ஆனாலும், நம் எஜமானைப் பின்பற்றுகிறவர்கள் மத்தியில் ஆண் இல்லாமல் பெண் இல்லை, பெண் இல்லாமல் ஆண் இல்லை. 12  ஆணிலிருந்து பெண் உண்டானது போலவே,+ பெண்ணிலிருந்து ஆண் உண்டாகிறான்; ஆனால், எல்லாமே கடவுளிடமிருந்துதான் உண்டாகின்றன.+ 13  அதனால், ஒரு பெண் முக்காடு போட்டுக்கொள்ளாமல் கடவுளிடம் ஜெபம் செய்வது சரியா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 14  ஓர் ஆணுக்கு நீளமான தலைமுடி இருப்பது அவனுக்கு வெட்கக்கேடு என்பதையும், 15  ஒரு பெண்ணுக்கு நீளமான தலைமுடி இருப்பது அவளுக்குப் பெருமை என்பதையும் இயற்கையே உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது, இல்லையா? தலைமுடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. 16  ஆனால், வேறு ஏதாவது வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்று ஒருவன் வாக்குவாதம் செய்தால், எங்களுக்கும் கடவுளுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட எந்த வழக்கமும் இல்லை என்று அவன் தெரிந்துகொள்ளட்டும். 17  இந்த அறிவுரைகளைக் கொடுக்கிற நான் உங்களைப் பாராட்டப்போவதில்லை; ஏனென்றால், நீங்கள் ஒன்றுகூடிவருவது நன்மைக்குப் பதிலாகத் தீமையையே உண்டாக்குகிறது. 18  முதலாவதாக, சபை கூடிவரும்போது உங்களுக்குள் பிரிவினைகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்; அதை ஓரளவு நம்புகிறேன். 19  கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்கள் யார் என்பது தெளிவாய்த் தெரிவதற்காக உங்கள் மத்தியில் பிரிவினைகள் இருக்கத்தான் செய்யும்.+ 20  நீங்கள் கூடிவரும்போது நம்முடைய எஜமானின் இரவு விருந்தை+ சரியான விதத்தில் அனுசரிப்பதில்லை. 21  நீங்கள் அதை அனுசரிக்கும்போது, உங்களில் சிலர் தங்களுடைய உணவை முதலில் சாப்பிட்டுவிடுகிறார்கள்; இதனால் ஒருவன் பசியோடு இருக்கிறான், மற்றொருவன் குடிவெறியோடு இருக்கிறான். 22  சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? கடவுளுடைய சபையை அவமதிக்கிறீர்களா, ஏழைகளை அவமானப்படுத்துகிறீர்களா? நான் என்ன சொல்வது? உங்களைப் பாராட்டுவதா? இந்த விஷயத்தில் உங்களைப் பாராட்டப்போவதில்லை. 23  நம் எஜமானிடமிருந்து பெற்றுக்கொண்டதையே உங்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்: எஜமானாகிய இயேசு தான் காட்டிக்கொடுக்கப்படவிருந்த இரவில்+ ரொட்டியை எடுத்து, 24  நன்றி சொல்லி அதைப் பிட்டு, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடலைக் குறிக்கிறது.+ என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்று சொன்னார்.+ 25  உணவு சாப்பிட்ட பின்பு, அதேபோல் கிண்ணத்தையும் எடுத்து,+ “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தின் அடிப்படையிலான+ புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது;+ நீங்கள் இதிலிருந்து குடிக்கும்போதெல்லாம் என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்று சொன்னார்.+ 26  நீங்கள் இந்த ரொட்டியைச் சாப்பிட்டு இந்தக் கிண்ணத்திலிருந்து குடிக்கும்போதெல்லாம் நம் எஜமான் வரும்வரை அவருடைய மரணத்தை அறிவிக்கிறீர்கள். 27  அதனால், எவன் தகுதியில்லாமல் இந்த ரொட்டியைச் சாப்பிட்டு, நம் எஜமானுடைய கிண்ணத்திலிருந்து குடிக்கிறானோ அவன் நம் எஜமானுடைய உடலையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாக இருப்பான். 28  எந்த மனிதனும் தான் தகுதியுள்ளவனா என்று சோதித்துப் பார்த்த பின்புதான்+ இந்த ரொட்டியைச் சாப்பிட்டு, இந்தக் கிண்ணத்திலிருந்து குடிக்க வேண்டும். 29  ஏனென்றால், ரொட்டி நம் எஜமானுடைய உடலைக் குறிக்கிறது என்பதைப் பகுத்தறியாமல் சாப்பிடுகிறவனும் குடிக்கிறவனும் தனக்கே நியாயத்தீர்ப்பை வரவழைத்துக்கொள்கிறான். 30  அதனால்தான் உங்களில் நிறைய பேர் பலவீனமானவர்களாகவும் நோய்வாய்ப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்; அதோடு, நிறைய பேர் ஏற்கெனவே இறந்துவிட்டார்கள்.*+ 31  ஆனால், நாம் எப்படிப்பட்டவர்கள் என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்த்தால் நியாயத்தீர்ப்புக்கு ஆளாக மாட்டோம். 32  நியாயத்தீர்ப்புக்கு ஆளாகிறோம் என்றால், யெகோவாவினால்* கண்டிக்கப்படுகிறோம் என்று அர்த்தம்.+ அப்போதுதான், இந்த உலக மக்களோடு சேர்த்து தண்டிக்கப்பட மாட்டோம்.+ 33  அதனால் என் சகோதரர்களே, நீங்கள் அதைச் சாப்பிடுவதற்கு ஒன்றுகூடி வரும்போது ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். 34  ஒருவன் பசியோடு இருந்தால் அவன் வீட்டிலேயே சாப்பிடட்டும். அப்போதுதான், நீங்கள் கூடிவரும்போது நியாயத்தீர்ப்புக்கு ஆளாக மாட்டீர்கள்.+ மற்ற விஷயங்களை நான் அங்கே வரும்போது சரிசெய்வேன்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “தலைவனாக.”
அநேகமாக, ஆன்மீக அர்த்தத்தில் இறந்துவிட்டதைக் குறிக்கலாம்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.