கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 14:1-40

  • தீர்க்கதரிசனம் சொல்கிற வரமும் வெவ்வேறு மொழிகளில் பேசுகிற வரமும் (1-25)

  • ஒழுங்காக நடத்தப்படும் கிறிஸ்தவக் கூட்டங்கள் (26-40)

    • சபையில் பெண்களின் ஸ்தானம் (34, 35)

14  அன்பு காட்ட ஊக்கமாக முயற்சி செய்யுங்கள்; அதேசமயம், கடவுளுடைய சக்தி கொடுக்கிற வரங்களைப் பெற கடினமாக* முயற்சி செய்யுங்கள், முக்கியமாக, தீர்க்கதரிசனம் சொல்கிற வரத்தைப் பெற கடினமாக முயற்சி செய்யுங்கள்.+  ஏனென்றால், வேறொரு மொழியில்* பேசுகிறவன் மனிதர்களிடம் அல்ல, கடவுளிடம் பேசுகிறான்; அவருடைய சக்தியால் பரிசுத்த ரகசியங்களைப்+ பேசுகிறான்; அதை யாரும் புரிந்துகொள்வதில்லை.+  தீர்க்கதரிசனம் சொல்கிறவனோ தன்னுடைய பேச்சின் மூலம் மற்றவர்களைப் பலப்படுத்துகிறான், உற்சாகப்படுத்துகிறான், ஆறுதல்படுத்துகிறான்.  வேறொரு மொழியில் பேசுகிறவன் தன்னைப் பலப்படுத்துகிறான். தீர்க்கதரிசனம் சொல்கிறவனோ சபையைப் பலப்படுத்துகிறான்.  நீங்கள் எல்லாரும் வெவ்வேறு மொழிகளில் பேச+ வேண்டும் என்று விரும்புகிறேன்; ஆனாலும், நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்ல+ வேண்டும் என்றே அதிகமாக விரும்புகிறேன். உண்மையில், வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறவன் சபையைப் பலப்படுத்துவதற்காக அவற்றை மொழிபெயர்க்கவும் வேண்டும்; இல்லையென்றால், அவனைவிட தீர்க்கதரிசனம் சொல்கிறவன்தான் உயர்ந்தவன்.  ஆனால் சகோதரர்களே, இந்தச் சமயத்தில் நான் உங்களிடம் வந்து வெவ்வேறு மொழிகளில் மட்டும் பேசிவிட்டு, வெளிப்படுத்துதல் என்ற வரத்தினாலோ,+ அறிவு என்ற வரத்தினாலோ,+ தீர்க்கதரிசனம் என்ற வரத்தினாலோ, போதனை என்ற வரத்தினாலோ அவற்றுக்கு விளக்கம் கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு என்ன பிரயோஜனம்?  குழல், யாழ் போன்ற உயிரற்ற கருவிகளிலிருந்து வருகிற சத்தம் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இல்லையென்றால், குழலிசை எதுவென்றும் யாழிசை எதுவென்றும் எப்படித் தெரியும்?  எக்காள சத்தம் தெளிவாக இல்லையென்றால் போருக்கு யார் தயாராவார்கள்?  அதேபோல், எளிமையாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் நீங்கள் பேசவில்லை என்றால், பேசுகிற விஷயம் என்னவென்று எப்படித் தெரியும்? சொல்லப்போனால், உளறுகிறவர்களாகத்தான் இருப்பீர்கள். 10  உலகத்தில் எத்தனையோ விதமான மொழிகள் இருக்கின்றன. ஆனால், அர்த்தம் தராத மொழி எதுவுமே இல்லை. 11  ஒருவன் பேசுவது எனக்குப் புரியவில்லை என்றால், அவன் எனக்கு வெளிநாட்டவன்போல் இருப்பான், நான் அவனுக்கு வெளிநாட்டவன்போல் இருப்பேன். 12  இது உங்களுக்கும் பொருந்துகிறது; கடவுளுடைய சக்தி கொடுக்கிற வரங்களில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், சபையைப் பலப்படுத்துகிற வரங்களை+ அதிகமதிகமாகப் பெற முயற்சி செய்யுங்கள். 13  அதனால், வேறொரு மொழியில் பேசுகிறவன் அதை மொழிபெயர்க்கிற வரத்திற்காக+ ஜெபம் செய்ய வேண்டும். 14  நான் வேறொரு மொழியில் ஜெபம் செய்தால், கடவுளுடைய சக்தி கொடுக்கிற வரத்தால்தான் ஜெபம் செய்வேன்; ஆனால் என் மனம் அதைப் புரிந்துகொள்ளாது. 15  அப்படியானால், நான் என்ன செய்வேன்? கடவுளுடைய சக்தி கொடுக்கிற வரத்தால் ஜெபம் செய்வேன், என் மனதாலும் ஜெபம் செய்வேன். கடவுளுடைய சக்தி கொடுக்கிற வரத்தால் புகழ்ந்து பாடுவேன், என் மனதாலும் புகழ்ந்து பாடுவேன். 16  இல்லையென்றால், கடவுளுடைய சக்தி கொடுக்கிற வரத்தால் நீங்கள் அவரைப் புகழ்ந்து அவருக்கு நன்றி சொல்லும்போது, அங்கே இருக்கிற ஒரு பாமரன் “ஆமென்”* என்று எப்படிச் சொல்வான்? ஏனென்றால், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே அவனுக்குப் புரியாது. 17  நீங்கள் நன்றி சொல்லி ஜெபம் செய்வது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் மற்றவன் பலப்படுத்தப்படுவதில்லை. 18  உங்கள் எல்லாரையும்விட நான் அதிகமாய் வெவ்வேறு மொழிகளில் பேசுவதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். 19  இருந்தாலும், சபையில் நான் வேறொரு மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுவதைவிட மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக* அர்த்தத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசவே விரும்புகிறேன்.+ 20  சகோதரர்களே, கெட்ட குணத்தைப் பொறுத்ததில் குழந்தைகளாக இருங்கள்;+ புரிந்துகொள்ளும் திறனைப் பொறுத்ததிலோ குழந்தைகளாக இல்லாமல்+ முதிர்ச்சி அடைந்தவர்களாக இருங்கள்.+ 21  ஏனென்றால், “‘அன்னியர்களுடைய மொழிகளிலும், முன்பின் தெரியாதவர்களுடைய வார்த்தைகளிலும் நான் இந்த ஜனங்களிடம் பேசுவேன்; அப்போதும் நான் சொல்வதை அவர்கள் காதுகொடுத்துக் கேட்க மாட்டார்கள்’ என்று யெகோவா* சொல்கிறார்” என்று திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+ 22  அதனால், வெவ்வேறு மொழிகள் பேசுவது இயேசுமேல் விசுவாசமுள்ளவர்களுக்கு அடையாளமாக இல்லாமல் விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது;+ தீர்க்கதரிசனம் சொல்வதோ விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இல்லாமல் விசுவாசமுள்ளவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது. 23  சபையார் ஓரிடத்தில் கூடிவந்து எல்லாரும் வெவ்வேறு மொழிகளில் பேசுவதாக வைத்துக்கொள்ளுங்கள்; அப்போது, பாமரர்களோ விசுவாசம் இல்லாதவர்களோ உள்ளே வந்தால், உங்களைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்று சொல்ல மாட்டார்களா? 24  ஆனால், நீங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்வதாக வைத்துக்கொள்ளுங்கள்; அப்போது, விசுவாசம் இல்லாதவனோ பாமரனோ உள்ளே வந்தால், எல்லாருடைய வார்த்தைகளும் அவனுடைய தவறுகளை அவனுக்குப் புரிய வைக்கும், இல்லையா? தன்னையே நன்றாக ஆராய்ந்து பார்ப்பதற்கு அவன் தூண்டப்படுவான், இல்லையா? 25  அப்போது, அவனுடைய இதயத்தில் இருக்கிற ரகசியங்கள் வெளிப்படும்; அதனால் அவன் சாஷ்டாங்கமாக விழுந்து கடவுளை வணங்கி, “உண்மையாகவே கடவுள் உங்கள் மத்தியில் இருக்கிறார்”+ என்று சொல்வான். 26  அப்படியானால் சகோதரர்களே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் கற்றுக்கொடுக்கிறான், ஒருவன் தனக்கு வெளிப்படுத்தப்பட்ட விஷயங்களைச் சொல்கிறான், ஒருவன் வேறொரு மொழியில் பேசுகிறான், ஒருவன் மொழிபெயர்க்கிறான்;+ இவை எல்லாவற்றையும் சபையைப் பலப்படுத்துகிற விதத்தில் செய்ய வேண்டும். 27  வேறொரு மொழியில் பேசுவதாக இருந்தால், இரண்டு பேர் பேசலாம், மிஞ்சிப்போனால் மூன்று பேர் பேசலாம். ஆனால், ஒருவர்பின் ஒருவராகப் பேச வேண்டும்; வேறொருவன் அதை மொழிபெயர்க்க வேண்டும்.+ 28  மொழிபெயர்க்க யாரும் இல்லையென்றால், அவன் தன்னுடைய மனதில் கடவுளோடு மட்டும் பேசிக்கொண்டு சபையில் அமைதியாக இருக்க வேண்டும். 29  இரண்டு பேரோ மூன்று பேரோ தீர்க்கதரிசனம் சொல்லலாம்;+ மற்றவர்கள் அதன் அர்த்தத்தைப் பகுத்தறிய வேண்டும். 30  அங்கே உட்கார்ந்திருக்கிற வேறொருவனுக்கு ஏதாவது வெளிப்படுத்துதல் கிடைத்தால், முதலில் பேசிக்கொண்டிருந்தவன் அமைதியாகிவிட வேண்டும். 31  நீங்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராகத் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்; அப்போதுதான் எல்லாராலும் கற்றுக்கொள்ள முடியும், உற்சாகம் பெற முடியும்.+ 32  தீர்க்கதரிசனம் சொல்கிறவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். 33  ஏனென்றால், கடவுள் குழப்பத்தின் கடவுள் அல்ல, சமாதானத்தின் கடவுள்.+ பரிசுத்தவான்களுடைய சபைகள் எல்லாவற்றிலும் கடைப்பிடிக்கப்படுகிறபடி, 34  சபைகளில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஏனென்றால், பேச அவர்களுக்கு அனுமதியில்லை;+ அவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.+ அதைத்தான் திருச்சட்டமும் சொல்கிறது. 35  அவர்கள் ஏதோவொன்றைத் தெரிந்துகொள்ள விரும்பினால், வீட்டில் தங்களுடைய கணவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், சபையில் ஒரு பெண் பேசுவது அவமதிப்பான செயல். 36  கடவுளுடைய வார்த்தை உங்களிடமிருந்தா வந்தது? உங்களுக்கு மட்டுமா கொடுக்கப்பட்டது? 37  ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசனம் சொல்கிறவன் என்றோ கடவுளுடைய சக்தி கொடுக்கிற வரத்தைப் பெற்றவன் என்றோ நினைத்தால், நான் உங்களுக்கு எழுதுகிற விஷயங்களை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஏனென்றால், அவை நம் எஜமானுடைய கட்டளைகளாக இருக்கின்றன. 38  இவற்றை ஒருவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், கடவுள் அவனை ஏற்றுக்கொள்ள மாட்டார்.* 39  அதனால் சகோதரர்களே, தீர்க்கதரிசனம் சொல்வதற்குக் கடினமாக முயற்சி செய்யுங்கள்.+ அதேசமயம், வெவ்வேறு மொழிகளில் பேசுவதையும் தடை செய்யாதீர்கள்.+ 40  எல்லா காரியங்களும் கண்ணியமாகவும் ஒழுங்காகவும் நடக்க வேண்டும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “பக்திவைராக்கியத்தோடு.”
வே.வா., “அன்னிய பாஷையில்.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”
வே.வா., “வாய்மொழியாகக் கற்றுக்கொடுப்பதற்காக.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
அல்லது, “ஒருவன் இவற்றைத் தெரியாதவனாக இருந்தால், தொடர்ந்து தெரியாதவனாகவே இருப்பான்.”