கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 7:1-40

  • திருமணம் ஆனவர்களுக்கும் ஆகாதவர்களுக்கும் ஆலோசனை (1-16)

  • நீங்கள் எந்த நிலையில் அழைக்கப்பட்டீர்களோ அந்த நிலையிலேயே இருங்கள் (17-24)

  • திருமணமாகாதவர்களும் விதவைகளும் (25-40)

    • திருமணம் செய்யாமல் இருப்பதால் வரும் நன்மைகள் (32-35)

    • “எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்யுங்கள் (39)

7  இப்போது, நீங்கள் எனக்கு எழுதிக் கேட்ட விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்; ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தொடாமல்* இருப்பது நல்லது.  ஆனால், பாலியல் முறைகேடு* எல்லா இடங்களிலும் பரவியிருப்பதால், ஒவ்வொரு ஆணும் தன் சொந்த மனைவியோடு வாழட்டும்,+ ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்த கணவனோடு வாழட்டும்.+  கணவன் தன்னுடைய மனைவிக்குக் கொடுக்க வேண்டிய கடனை* கொடுக்கட்டும்; அதேபோல், மனைவியும் தன்னுடைய கணவனுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்கட்டும்.+  மனைவிக்குத் தன்னுடைய உடல்மீது அதிகாரம் இல்லை, அவளுடைய கணவனுக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கிறது; அதேபோல், கணவனுக்குத் தன்னுடைய உடல்மீது அதிகாரம் இல்லை, அவனுடைய மனைவிக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கிறது.  ஒருவருக்கொருவர் கொடுக்க வேண்டிய கடனைக் கொடுக்காமல் இருந்துவிடாதீர்கள்; இரண்டு பேரும் ஒத்துக்கொண்டால் மட்டுமே, ஜெபம் செய்ய நேரம் ஒதுக்குவதற்காகக் குறிப்பிட்ட காலத்துக்கு இணையாமல் இருக்கலாம். ஆனால், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத சமயங்களில் சாத்தான் உங்களைச் சோதிக்காமல் இருப்பதற்காக மறுபடியும் இணைந்துவிடுங்கள்.  இருந்தாலும் இதை நான் ஒரு கட்டளையாகக் கொடுக்கவில்லை, சூழ்நிலையை மனதில் வைத்து உங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்.  எல்லாரும் என்னைப் போலவே இருந்துவிட்டால் நல்லது. ஆனாலும், ஒவ்வொருவனும் தன்தன் வரத்தைக் கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறான்;+ அது ஒருவனுக்கு ஒரு விதமாகவும் வேறொருவனுக்கு வேறு விதமாகவும் இருக்கிறது.  திருமணம் ஆகாதவர்களுக்கும் விதவைகளுக்கும் நான் சொல்வது இதுதான்: அவர்கள் என்னைப் போலவே இருந்துவிட்டால் நல்லது.+  ஆனால், அவர்களுக்குச் சுயக்கட்டுப்பாடு இல்லையென்றால் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனென்றால், காமத் தீயில் பற்றியெரிவதைவிட திருமணம் செய்துகொள்வதே மேல்.+ 10  திருமணம் ஆனவர்களுக்கு நான் தரும் அறிவுரைகள் இவைதான், உண்மையில் நான் அல்ல நம் எஜமான் தரும் அறிவுரைகள் இவைதான்: மனைவி தன்னுடைய கணவனைவிட்டுப் பிரிந்துபோகக் கூடாது.+ 11  அப்படியே பிரிந்துபோனாலும், அவள் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும் அல்லது மறுபடியும் தன்னுடைய கணவனோடு சமரசம் செய்துகொள்ள வேண்டும்; கணவனும் தன்னுடைய மனைவியைவிட்டுப் பிரிந்துபோகக் கூடாது.+ 12  ஆனால் மற்றவர்களுக்கு நான் சொல்வது இதுதான், நம் எஜமான் அல்ல, நான் சொல்வது இதுதான்:+ ஒரு சகோதரனுடைய மனைவி விசுவாசியாக* இல்லாவிட்டாலும் அவள் அவனோடு வாழச் சம்மதித்தால், அவன் அவளைவிட்டுப் பிரியக் கூடாது. 13  அதேபோல், ஒரு சகோதரியின் கணவன் விசுவாசியாக இல்லாவிட்டாலும் அவன் அவளோடு வாழச் சம்மதித்தால், அவள் அவனைவிட்டுப் பிரியக் கூடாது. 14  ஏனென்றால், விசுவாசியாக இல்லாத கணவன் விசுவாசியாக இருக்கிற தன்னுடைய மனைவியின் மூலம் பரிசுத்தமாக்கப்படுகிறான். அதேபோல், விசுவாசியாக இல்லாத மனைவியும் விசுவாசியாக இருக்கிற தன்னுடைய கணவனின் மூலம் பரிசுத்தமாக்கப்படுகிறாள்; இல்லையென்றால், உங்கள் பிள்ளைகள் அசுத்தமானவர்களாக இருப்பார்களே; இப்போதோ அவர்கள் பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்கள். 15  ஆனால், கணவன் மனைவி ஆகிய இரண்டு பேரில் விசுவாசியாக இல்லாதவர் பிரிந்துபோக விரும்பினால் பிரிந்துபோகட்டும்; இப்படிப்பட்ட சூழ்நிலையில் விசுவாசியாக இருக்கிற கணவனுக்கோ மனைவிக்கோ சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும், சமாதானமாக இருப்பதற்காகத்தான் கடவுள் உங்களை அழைத்திருக்கிறார்.+ 16  ஏனென்றால் மனைவியே, உன்னால் உன் கணவன் காப்பாற்றப்படலாம், இல்லையா?+ கணவனே, உன்னால் உன் மனைவி காப்பாற்றப்படலாம், இல்லையா? 17  யெகோவா* ஒருவனை எந்த நிலையில் இருக்க அனுமதித்திருக்கிறாரோ, ஒருவனை எந்த நிலையில் அழைத்திருக்கிறாரோ, அந்த நிலையிலேயே அவன் தொடர்ந்து வாழ வேண்டும்;+ இதை எல்லா சபைகளுக்கும் உத்தரவிடுகிறேன். 18  ஒருவன் அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் செய்தவனாக இருந்தானா?+ அப்படியானால், அவன் அந்த நிலையிலேயே இருக்கட்டும். ஒருவன் அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் செய்யாதவனாக இருந்தானா? அப்படியானால், அவன் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டாம்.+ 19  விருத்தசேதனம்* செய்துகொள்வதும் முக்கியமல்ல, விருத்தசேதனம் செய்துகொள்ளாமல் இருப்பதும் முக்கியமல்ல,+ கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் முக்கியம்.+ 20  ஒவ்வொருவனும் எந்த நிலையில் அழைக்கப்பட்டானோ அந்த நிலையிலேயே இருக்க வேண்டும்.+ 21  நீங்கள் அடிமையாக இருக்கும்போது அழைக்கப்பட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்.+ ஆனாலும், நீங்கள் சுதந்திரம் பெற வாய்ப்பு இருக்கிறதென்றால், அதை நழுவ விடாதீர்கள். 22  ஏனென்றால், அடிமையாக இருக்கும்போது நம் எஜமானால் அழைக்கப்பட்ட எவனும் அவரால் சுதந்திரம் பெற்று அவருக்குச் சொந்தமானவனாக இருக்கிறான்.+ அதேபோல், சுதந்திரமாக இருக்கும்போது அழைக்கப்பட்ட எவனும் கிறிஸ்துவின் அடிமையாக இருக்கிறான். 23  நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்;+ அதனால், மனிதர்களுக்கு அடிமைகளாவதை நிறுத்துங்கள். 24  சகோதரர்களே, ஒவ்வொருவனும் எந்த நிலையில் அழைக்கப்பட்டானோ அந்த நிலையிலேயே கடவுள் முன்னால் இருக்க வேண்டும். 25  திருமணம் ஆகாதவர்கள்* சம்பந்தமாக நம்முடைய எஜமானிடமிருந்து எனக்கு எந்தக் கட்டளையும் கிடைக்கவில்லை. ஆனால், நம் எஜமானுடைய இரக்கத்தால் உண்மையுள்ளவனாக இருக்கும் நான் என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்.+ 26  இன்றைய நெருக்கடியான நிலைமையைப் பார்க்கும்போது, ஒருவன் திருமணம் செய்யாமல் இருப்பதே மிகச் சிறந்தது என்று நினைக்கிறேன். 27  ஒரு பெண்ணோடு நீங்கள் திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டிருக்கிறீர்களா? அப்படியானால், அந்தப் பந்தத்திலிருந்து விடுபடுவதற்கு வழிதேடாதீர்கள்.+ நீங்கள் திருமண பந்தத்தில் இணைக்கப்படாமல் இருக்கிறீர்களா?* அப்படியானால், திருமணம் செய்துகொள்ள வழிதேடாதீர்கள். 28  நீங்கள் திருமணம் செய்துகொண்டாலும் அதில் பாவம் இல்லை. திருமணம் ஆகாதவர்* திருமணம் செய்துகொள்வதிலும் பாவம் இல்லை. ஆனாலும், திருமணம் செய்துகொள்கிறவர்களுக்கு வாழ்க்கையில்* உபத்திரவங்கள் வரும். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றவே முயற்சி செய்கிறேன். 29  அதோடு சகோதரர்களே, நான் சொல்வது இதுதான்: இன்னும் கொஞ்சக் காலம்தான் மீதியிருக்கிறது.+ அதனால் மனைவி உள்ளவர்கள் இனி மனைவி இல்லாதவர்கள் போலவும், 30  அழுகிறவர்கள் அழாதவர்கள் போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள் போலவும், பொருள்களை வாங்குகிறவர்கள் அவை இல்லாதவர்கள் போலவும், 31  உலகத்தைப் பயன்படுத்துகிறவர்கள் அதை முழுமையாகப் பயன்படுத்தாதவர்கள் போலவும் இருக்கட்டும். ஏனென்றால், இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது. 32  நீங்கள் கவலையில்லாமல் இருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறேன். திருமணம் ஆகாதவன் நம்முடைய எஜமானுக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாம் என்று யோசித்து, நம் எஜமானுடைய காரியங்களுக்காகக் கவலைப்படுகிறான். 33  ஆனால், திருமணம் ஆனவன் தன்னுடைய மனைவிக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாம் என்று யோசித்து, உலகக் காரியங்களுக்காகக் கவலைப்படுகிறான்.+ 34  அவனுடைய மனம் இரண்டுபட்டிருக்கிறது. அதேபோல், கணவனில்லாத பெண்ணும் சரி, கன்னிப்பெண்ணும் சரி, உடலிலும் உள்ளத்திலும் பரிசுத்தமாய் இருப்பதற்காக நம் எஜமானுடைய காரியங்களுக்காகக் கவலைப்படுகிறார்கள்.+ ஆனால், திருமணமான பெண் தன்னுடைய கணவனுக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாம் என்று யோசித்து, உலகக் காரியங்களுக்காகக் கவலைப்படுகிறாள். 35  உங்கள் சொந்த நன்மைக்காக இதைச் சொல்கிறேன், உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. ஆம், நீங்கள் சரியான காரியத்தைச் செய்வதற்கும் கவனச்சிதறல் இல்லாமல் நம் எஜமானுக்குத் தொடர்ந்து ஊழியம் செய்வதற்கும் உங்கள் மனதைத் தூண்டுவதற்காக இதைச் சொல்கிறேன். 36  ஆனால், திருமணம் செய்யாத ஒருவனால் தன்னுடைய காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தால்,* இளமை மலரும் பருவத்தை அவன் கடந்திருந்தால், அவன் தன் விருப்பப்படியே திருமணம் செய்யட்டும்; அதில் பாவம் இல்லை. அப்படிப்பட்டவர்கள் திருமணம் செய்துகொள்ளட்டும்.+ 37  ஆனால், ஒருவன் திருமணம் அவசியமில்லை என்று நினைத்து தன்னுடைய இதயத்தில் உறுதியாக இருந்தால், தன்னுடைய ஆசைகளைக் கட்டுப்படுத்த முடிந்தவனாக இருந்தால், அது அவனுக்கு நல்லது. அதோடு, திருமணமே வேண்டாம்* என்று அவன் தன்னுடைய இதயத்தில் தீர்மானம் எடுத்திருந்தால் நல்லது.+ 38  திருமணம் செய்வதும் நல்லதுதான், ஆனால் திருமணம் செய்யாமல் இருப்பது அதைவிட நல்லது.+ 39  கணவன் உயிரோடிருக்கும் காலமெல்லாம் மனைவி அவனோடு திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறாள்.+ ஆனால், அவளுடைய கணவன் இறந்துவிட்டால்* தனக்குப் பிடித்த ஒருவரை அவள் திருமணம் செய்துகொள்ளலாம். இருந்தாலும், நம் எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.+ 40  ஆனால், அவள் அப்படியே இருந்துவிட்டால் மிகவும் சந்தோஷமாக இருப்பாள் என்பதுதான் என் கருத்து. எனக்கும் கடவுளுடைய சக்தி இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “பெண்ணோடு உறவுகொள்ளாமல்.”
அதாவது, “தாம்பத்தியக் கடனை.”
வே.வா., “இயேசுவின் சீஷராக.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “கன்னி கழியாதவர்கள்.”
இது மனைவியை இழந்தவர்களையும் குறிக்கலாம்.
நே.மொ., “உடலில்.”
நே.மொ., “கன்னி கழியாதவர்.”
வே.வா., “ஒருவன் தன்னுடைய கற்பைக் காத்துக்கொள்ள முடியாததுபோல் உணர்ந்தால்.”
வே.வா., “கன்னி கழியாமல் இருக்க வேண்டும்.”
நே.மொ., “தூங்கிவிட்டால்.”