கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 9:1-27

  • பவுலின் முன்மாதிரி (1-27)

    • “போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக் கூடாது” (9)

    • “நல்ல செய்தியை நான் அறிவிக்காவிட்டால் எனக்குக் கேடுதான்!” (16)

    • எல்லா விதமான ஆட்களுக்கும் எல்லா விதமாகவும் ஆனேன் (19-23)

    • வாழ்வுக்கான ஓட்டத்தில் சுயக்கட்டுப்பாடு (24-27)

9  என் விருப்பப்படி நடக்க எனக்குச் சுதந்திரம் இருக்கிறது, இல்லையா? நானும் ஓர் அப்போஸ்தலன்தான், இல்லையா? நம் எஜமானாகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன், இல்லையா?+ எஜமானுக்காக நான் செய்கிற ஊழியத்தின் பலன் நீங்கள்தான், இல்லையா?  நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாக இல்லாவிட்டாலும், நிச்சயமாகவே உங்களுக்கு அப்போஸ்தலன்தான்! ஏனென்றால், எஜமானுடைய சேவையில் நான் அப்போஸ்தலனாக இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்துகிற முத்திரை நீங்கள்தான்.  என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு என்னுடைய தரப்பில் நான் சொல்வது இதுதான்:  சாப்பிடவும் குடிக்கவும் எங்களுக்கு உரிமை* இல்லையா?  மற்ற அப்போஸ்தலர்களும் நம் எஜமானின் சகோதரர்களும்+ கேபாவும்*+ செய்வதுபோல், ஒரு கிறிஸ்தவப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, கூடவே கூட்டிக்கொண்டு போக எங்களுக்கு உரிமை இல்லையா?+  பிழைப்புக்காக வேலை செய்யாமல் இருக்க பர்னபாவுக்கும்+ எனக்கும் மட்டும்தான் உரிமை இல்லையா?  சொந்தச் செலவில் எவனாவது படைவீரனாக வேலை செய்வானா? திராட்சைத் தோட்டக்காரன் எவனாவது அதன் பழத்தைச் சாப்பிடாமல் இருப்பானா?+ அல்லது, ஆடு மேய்க்கிற எவனாவது அதன் பாலைக் குடிக்காமல் இருப்பானா?  நான் மனிதர்களுடைய கண்ணோட்டத்திலா இவற்றைச் சொல்கிறேன்? திருச்சட்டமும் இவற்றைச் சொல்கிறது, இல்லையா?  “போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக் கூடாது” என்று மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறதே.+ மாடுகள் மீதுள்ள அக்கறையால் கடவுள் இப்படிச் சொல்கிறாரா? 10  அல்லது, முழுக்க முழுக்க நமக்காக இப்படிச் சொல்கிறாரா? ஆமாம், நமக்காகத்தான் அது எழுதப்பட்டிருக்கிறது. ஏனென்றால், விளைச்சலில் பங்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு உழவன் உழ வேண்டும், கதிரடிக்கிறவன் கதிரடிக்க வேண்டும். 11  ஆன்மீக விஷயங்களை உங்கள் மத்தியில் நாங்கள் விதைத்திருப்பதால், எங்களுடைய பொருளாதாரத் தேவைகளை உங்களிடமிருந்து அறுவடையாகப் பெற்றாலும் தவறில்லைதானே?+ 12  உங்களிடமிருந்து இவற்றைப் பெற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உரிமை* இருக்கிறது என்றால், எங்களுக்கு அதைவிட அதிக உரிமை இருக்கிறது, இல்லையா? அப்படியிருந்தும்கூட நாங்கள் இந்த உரிமையைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.+ கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தி பரவுவதற்கு எங்களால் எந்தத் தடையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் சகித்துக்கொள்கிறோம்.+ 13  ஆலயத்தில் பரிசுத்த வேலைகளைச் செய்கிறவர்கள் அங்கே கிடைக்கிற உணவைச் சாப்பிடுகிறார்கள் என்பதும், பலிபீடத்தில் தவறாமல் சேவை செய்கிறவர்கள் பலிப்பொருள்களில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?+ 14  அதுபோலவே, நல்ல செய்தியை அறிவிக்கிறவர்களும் அந்த நல்ல செய்தியின் மூலம் பிழைப்புக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் எஜமான் கட்டளை கொடுத்திருக்கிறார்.+ 15  ஆனால், இந்த ஏற்பாடுகளில் ஒன்றைக்கூட நான் பயன்படுத்திக்கொள்ளவில்லை.+ உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் இதையெல்லாம் எழுதவில்லை. அதைவிட நான் சாவதே மேல். இந்த விஷயத்தில் எனக்கு இருக்கும் பெருமையை எடுத்துப்போட யாரையும் அனுமதிக்க மாட்டேன்.+ 16  நான் இப்போது நல்ல செய்தியை அறிவித்து வந்தாலும் பெருமை பேச எனக்கு இடமில்லை; ஏனென்றால், அதை அறிவிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. உண்மையில், நல்ல செய்தியை நான் அறிவிக்காவிட்டால் எனக்குக் கேடுதான்!+ 17  அதை விருப்பத்தோடு செய்தால் எனக்குப் பலன் இருக்கிறது; அதை விருப்பமில்லாமல் செய்தால்கூட, என்னிடம் ஒரு நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.+ 18  அப்படியானால், எனக்குக் கிடைக்கிற பலன் என்ன? உங்களுக்கு எந்தச் செலவும் வைக்காமல் நல்ல செய்தியை அறிவிக்கிற பெருமைதான் எனக்குக் கிடைக்கிற பலன்; நல்ல செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு இருக்கிற உரிமையைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை. 19  நான் யாருக்கும் கடமைப்பட்டவனாக இல்லையென்றாலும், எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரையும் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவர என்னையே எல்லாருக்கும் அடிமையாக்கியிருக்கிறேன். 20  யூதர்களைக் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவர யூதர்களுக்கு யூதனைப் போல் ஆனேன்;+ திருச்சட்டத்தின்கீழ் நான் இல்லாதபோதிலும், திருச்சட்டத்தின்கீழ் இருப்பவர்களைக் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவர திருச்சட்டத்தின்கீழ் இருப்பவனைப் போல் ஆனேன்.+ 21  திருச்சட்டம் இல்லாதவர்களைக் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவர திருச்சட்டம் இல்லாதவனைப் போல் ஆனேன். ஆனாலும் நான் கடவுளுடைய சட்டத்தின்கீழ் இல்லாதவன் என்று அர்த்தம் கிடையாது, ஏனென்றால் நான் கிறிஸ்துவின் சட்டத்தின்கீழ் இருக்கிறேன்.+ 22  பலவீனமானவர்களைக் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவர பலவீனமானவர்களுக்குப் பலவீனமானவன் ஆனேன்.+ எப்படியாவது சிலரை மீட்புக்கு வழிநடத்த வேண்டும் என்பதற்காக எல்லா விதமான ஆட்களுக்கும் எல்லா விதமாகவும் ஆனேன். 23  நல்ல செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்காக எல்லாவற்றையும் நல்ல செய்திக்காகவே செய்கிறேன்.+ 24  ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்கிற எல்லாரும் ஓடுவார்கள், ஆனால் ஒருவர் மட்டும்தான் பரிசு பெறுவார் என்று உங்களுக்குத் தெரியாதா? பரிசைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் நீங்களும் ஓடுங்கள்.+ 25  போட்டியில் கலந்துகொள்கிற எல்லாரும்* எல்லாவற்றிலும் சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். அழிந்துபோகிற கிரீடத்தைப் பெறுவதற்காக அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்,+ ஆனால் நாம் அழிந்துபோகாத கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கிறோம்.+ 26  அதனால், நான் இப்போது ஓடுகிறேன், ஆனால் சேரவேண்டிய இடம் எதுவென்று தெரியாதவன்போல் ஓடுவதில்லை.+ குத்துச்சண்டை போடுகிறேன், ஆனால் காற்றோடு குத்துச்சண்டை போடுகிறவன்போல் போடுவதில்லை. 27  மற்றவர்களுக்கு நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிற நானே எந்த விதத்திலும் கடவுளால் ஒதுக்கப்படாதபடி* என்னுடைய உடலை அடக்கியொடுக்கி*+ அடிமைபோல் நடத்தி வருகிறேன்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “அதிகாரம்.”
பேதுரு என்றும் அழைக்கப்படுகிறார்.
நே.மொ., “அதிகாரம்.”
வே.வா., “ஓட்டப்பந்தய வீரர்கள் ஒவ்வொருவரும்.”
வே.வா., “எந்த விதத்திலும் தகுதியில்லாதவனாக ஆகிவிடாதபடி.”
வே.வா., “தண்டித்து; கடுமையாகக் கண்டித்து.”