1 சாமுவேல் 13:1-23

  • சவுல் படைவீரர்களைத் தேர்ந்தெடுக்கிறார் (1-4)

  • சவுல் அகங்காரத்தோடு நடந்துகொள்கிறார் (5-9)

  • சாமுவேல் சவுலைக் கண்டிக்கிறார் (10-14)

  • இஸ்ரவேலர்களிடம் எந்த ஆயுதங்களும் இல்லை (15-23)

13  சவுல் ராஜாவானபோது+ அவருக்கு . . .* வயது. அவர் இஸ்ரவேலில் இரண்டு வருஷங்கள் ஆட்சி செய்த பிறகு,  இஸ்ரவேல் வீரர்களிலிருந்து 3,000 பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களில் 2,000 பேர் மிக்மாசிலும் பெத்தேலைச் சுற்றியுள்ள மலைப்பகுதியிலும் சவுலோடு இருந்தார்கள். 1,000 பேர் பென்யமீனியர்களின் பகுதியாகிய கிபியாவில்+ யோனத்தானோடு+ இருந்தார்கள். மற்ற வீரர்களை அவரவர் வீட்டுக்கு சவுல் அனுப்பிவிட்டார்.  கெபாவிலிருந்த+ பெலிஸ்தியர்களின்+ காவல்படை வீரர்களை யோனத்தான் வெட்டிச் சாய்த்தார். இதை பெலிஸ்தியர்கள் கேள்விப்பட்டார்கள். அப்போது சவுல், “எபிரெயர்களும் இதைக் கேள்விப்படட்டும்!” என்று சொல்லி, தேசமெங்கும் ஊதுகொம்பை ஊதும்படி+ கட்டளை கொடுத்தார்.  “பெலிஸ்தியர்களின் காவல்படை வீரர்களை சவுல் வெட்டிச் சாய்த்துவிட்டார், அதனால் இஸ்ரவேலர்கள்மேல் பெலிஸ்தியர்கள் வெறியோடு இருக்கிறார்கள்” என்ற செய்தியை இஸ்ரவேலர்கள் எல்லாரும் கேள்விப்பட்டார்கள். பின்பு சவுல், மற்ற எல்லாரையும் கில்காலுக்கு+ வரச் சொன்னார்.  இஸ்ரவேலர்களோடு போர் செய்ய பெலிஸ்தியர்கள் 30,000 போர் ரதங்களோடும், 6,000 குதிரை வீரர்களோடும், கடற்கரை மணலைப் போல ஏராளமாக இருந்த மற்ற வீரர்களோடும்+ பெத்-ஆவேனுக்குக்+ கிழக்கே இருக்கிற மிக்மாசில் முகாம்போட்டார்கள்.  இஸ்ரவேலர்கள் தாங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டதைப் பார்த்தபோது, குகைகளிலும்+ பாறை இடுக்குகளிலும் பதுங்கு குழிகளிலும் நிலத்தடி தண்ணீர்த் தொட்டிகளிலும் ஒளிந்துகொண்டார்கள்.  எபிரெயர்களில் சிலர் யோர்தானைக் கடந்து காத் பிரதேசத்துக்கும் கீலேயாத்+ பிரதேசத்துக்கும்கூட போனார்கள். ஆனால், சவுல் கில்காலில்தான் இருந்தார். அவரோடு இருந்த வீரர்கள் எல்லாரும் நடுநடுங்கிக்கொண்டிருந்தார்கள்.  சாமுவேல் சொன்னபடி, சவுல் ஏழு நாட்கள் அவருக்காகக் காத்திருந்தார். ஆனால், சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. வீரர்களும் சவுலைவிட்டுப் போக ஆரம்பித்தார்கள்.  கடைசியில் சவுல், “தகன பலியையும் சமாதான பலிகளையும் என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொல்லி, தகன பலியைச் செலுத்தினார்.+ 10  சவுல் தகன பலியைச் செலுத்தி முடித்ததுமே சாமுவேல் அங்கு வந்துசேர்ந்தார். சவுல் போய் அவரை வரவேற்றார். 11  ஆனால் சாமுவேல் அவரிடம், “என்ன காரியம் செய்திருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு சவுல், “சொன்ன நேரத்தில் நீங்கள் வரவில்லை. பெலிஸ்தியர்களும் மிக்மாசுக்குத் திரண்டு வந்துவிட்டார்கள்.+ அதோடு, என் வீரர்கள் என்னைவிட்டுப் போக ஆரம்பித்துவிட்டார்கள்.+ 12  அதனால், நான் யெகோவாவிடம் உதவி கேட்பதற்கு முன்பே பெலிஸ்தியர்கள் கில்காலுக்கு வந்து என்னைத் தாக்கிவிடுவார்களோ என்று பயந்துதான், வேறு வழியில்லாமல் தகன பலி செலுத்திவிட்டேன்” என்று சொன்னார். 13  அதற்கு சாமுவேல், “நீ முட்டாள்தனமாக நடந்துகொண்டாய். உன் கடவுளாகிய யெகோவா சொன்ன கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டாய்.+ கீழ்ப்படிந்திருந்தால், இஸ்ரவேலை என்றென்றும் ஆளுகிற உரிமையை உனக்கும் உன் வம்சத்துக்கும் யெகோவா தந்திருப்பார். 14  இனி உன் ஆட்சி நீடிக்காது.+ யெகோவாவின் கட்டளைக்கு நீ கீழ்ப்படியாததால்,+ யெகோவா தன்னுடைய இதயத்துக்குப் பிடித்த இன்னொருவரைக் கண்டுபிடிப்பார்.+ யெகோவா அவரைத் தன்னுடைய ஜனங்களுக்குத் தலைவராக நியமிப்பார்”+ என்று சொன்னார். 15  பின்பு, சாமுவேல் கில்காலிலிருந்து புறப்பட்டு பென்யமீனியர்களின் பகுதியாகிய கிபியாவுக்குப் போனார். வீரர்களை சவுல் எண்ணிப் பார்த்தபோது இன்னும் அவருடன் ஏறக்குறைய 600 பேர் இருந்தார்கள்.+ 16  சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் அவர்களோடு இருந்த வீரர்களும் பென்யமீனியர்களின் பகுதியாகிய கெபாவில்+ தங்கியிருந்தார்கள். பெலிஸ்தியர்கள் மிக்மாசில்+ முகாம்போட்டிருந்தார்கள். 17  இஸ்ரவேலர்களைச் சூறையாடுவதற்காக பெலிஸ்தியர்கள் தங்களுடைய முகாமிலிருந்து மூன்று பிரிவுகளாகப் போனார்கள். ஒரு பிரிவினர் ஒப்ராவின் சாலை வழியாக சூவால் பிரதேசத்தை நோக்கிப் போனார்கள். 18  மற்றொரு பிரிவினர் பெத்-ஓரோன்+ சாலை வழியாகப் போனார்கள். இன்னொரு பிரிவினர் செபோயிம் பள்ளத்தாக்குக்கு எதிரில் இருந்த எல்லைப் பகுதியின் சாலையை நோக்கி, அதாவது வனாந்தரத்தை நோக்கி, போனார்கள். 19  அந்தச் சமயத்தில், இஸ்ரவேல் தேசமெங்கும் ஒரு கொல்லன்கூட இருக்கவில்லை. ஏனென்றால், எபிரெயர்கள் தங்களுக்காக வாளோ ஈட்டியோ செய்யாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பெலிஸ்தியர்கள் பேசி வைத்திருந்தார்கள். 20  இஸ்ரவேலர்கள் எல்லாரும் தங்களுடைய கலப்பைக் கொழுக்களையும் மண்கொத்திகளையும் கோடாலிகளையும் அரிவாள்களையும் தீட்டுவதற்காக பெலிஸ்தியர்களிடம்தான் போக வேண்டியிருந்தது. 21  கலப்பைக் கொழுக்கள், மண்கொத்திகள், வைக்கோல் வாரிகள், கோடாலிகள் ஆகியவற்றைத் தீட்டுவதற்கும் தார்க்கோல்களை* பழுதுபார்ப்பதற்கும் எட்டு கிராம் வெள்ளியை* கூலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. 22  போர் நடந்த நாளில் சவுலையும் யோனத்தானையும் தவிர வேறெந்த வீரன் கையிலும் வாளோ ஈட்டியோ இருக்கவில்லை.+ சவுலும் யோனத்தானும் மட்டும்தான் ஆயுதங்கள் வைத்திருந்தார்கள். 23  அப்போது, பெலிஸ்தியர்களின் காவல்படை ஒன்று மிக்மாசிலுள்ள+ கணவாய்க்கு* வந்தது.

அடிக்குறிப்புகள்

எத்தனை வயது என்பது எபிரெய மூலப்பிரதியில் இல்லை.
நே.மொ., “ஒரு பிம்மை.” ஒரு பிம் என்பது ஒரு சேக்கலில் சுமார் மூன்றில் இரண்டு பாகமுள்ள பழங்காலத்து எடை.
கணவாய் என்பது இரண்டு மலைகளுக்கு இடையில் இயற்கையாக அமைந்துள்ள பாதை.