1 சாமுவேல் 16:1-23

  • சாமுவேல் தாவீதை அடுத்த ராஜாவாக அபிஷேகம் செய்கிறார் (1-13)

    • ‘யெகோவா இதயத்தைப் பார்க்கிறார்’ (7)

  • கடவுளுடைய சக்தி சவுலைவிட்டு விலகுகிறது (14-17)

  • தாவீது சவுலுக்கு யாழ் வாசிக்கிறவராக ஆகிறார் (18-23)

16  கடைசியில் யெகோவா சாமுவேலிடம், “நீ இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சவுலை நினைத்துத் துக்கப்பட்டுக் கொண்டிருப்பாய்?+ நான்தான் அவனை ராஜாவாக இல்லாதபடி ஒதுக்கித்தள்ளிவிட்டேனே.+ இப்போது ஒரு கொம்பில்* எண்ணெயை நிரப்பிக்கொண்டு+ புறப்படு. பெத்லகேம் ஊரைச் சேர்ந்த ஈசாயிடம்+ போ. அவனுடைய மகன்களில் ஒருவனை ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்”+ என்று சொன்னார்.  ஆனால் சாமுவேல், “நான் எப்படிப் போவேன்? சவுலுக்கு விஷயம் தெரிந்தால் என்னைக் கொன்றுவிடுவானே”+ என்றார். அதற்கு யெகோவா, “ஒரு இளம் பசுவை ஓட்டிக்கொண்டு போய், யெகோவாவுக்குப் பலி கொடுக்க வந்திருப்பதாகச் சொல்.  பலி செலுத்துகிற இடத்துக்கு ஈசாயை வரச் சொல். அதன்பின் நீ என்ன செய்ய வேண்டுமென்று அப்போது சொல்வேன். நான் யாரைக் காட்டுகிறேனோ அவனை நீ அபிஷேகம் செய்ய வேண்டும்”+ என்று சொன்னார்.  யெகோவா சொன்னபடியே சாமுவேல் செய்தார். அவர் பெத்லகேமுக்கு+ வந்தபோது, நகரத்துப் பெரியோர்கள்* அவரைப் பார்த்து, “நல்ல விஷயமாகத்தானே வந்திருக்கிறீர்கள்?” என்று பதற்றத்தோடு கேட்டார்கள்.  அதற்கு அவர், “ஆமாம், நல்ல விஷயமாகத்தான் வந்திருக்கிறேன். யெகோவாவுக்குப் பலி செலுத்த வந்திருக்கிறேன். உங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு, பலி செலுத்தும் இடத்துக்கு என்னோடு வாருங்கள்” என்றார். பின்பு, ஈசாயையும் அவருடைய மகன்களையும் அவர் புனிதப்படுத்தினார். அதன்பின், பலி செலுத்தும் இடத்துக்கு அவர்களை வரச் சொன்னார்.  அவர்கள் அங்கே வந்தார்கள். சாமுவேல் எலியாபைப்+ பார்த்தபோது, “நிச்சயம் இவனைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்திருப்பார்” என்று நினைத்துக்கொண்டார்.  ஆனால் யெகோவா சாமுவேலிடம், “இவன் தோற்றத்தையோ உயரத்தையோ பார்க்காதே.+ நான் இவனைத் தேர்ந்தெடுக்கவில்லை. மனிதன் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை. மனிதன் வெளித்தோற்றத்தை மட்டும்தான் பார்க்கிறான். ஆனால், யெகோவாவாகிய நான் இதயத்தைப் பார்க்கிறேன்”+ என்று சொன்னார்.  பின்பு, ஈசாய் சாமுவேலின் முன்னால் அபினதாபை+ நிறுத்தினார். அப்போது சாமுவேல், “யெகோவா இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றார்.  அடுத்ததாக, ஈசாய் சாமுவேலின் முன்னால் சம்மாவை+ நிறுத்தினார். ஆனால் சாமுவேல், “யெகோவா இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றார். 10  இப்படியே, ஈசாய் தன்னுடைய ஏழு மகன்களையும் ஒவ்வொருவராக சாமுவேலின் முன்னால் நிறுத்தினார். ஆனால் சாமுவேல் ஈசாயிடம், “இவர்களில் யாரையும் யெகோவா தேர்ந்தெடுக்கவில்லை” என்று சொன்னார். 11  கடைசியாக சாமுவேல் ஈசாயிடம், “இவர்களைத் தவிர வேறு மகன்கள் உனக்கு இருக்கிறார்களா?” என்று கேட்டார். அதற்கு அவர், “கடைசி பையன்+ ஒருவன் இருக்கிறான், அவன் ஆடு மேய்க்கப் போயிருக்கிறான்”+ என்று சொன்னார். அப்போது சாமுவேல் ஈசாயிடம், “உடனே ஆள் அனுப்பி அவனை வரச் சொல். அவன் வரும்வரை யாரும் சாப்பிடப்போவதில்லை” என்று சொன்னார். 12  அதனால், ஈசாய் ஆள் அனுப்பி அவனை வரவழைத்தார். அவன் அழகான கண்களோடு செக்கச்செவேல் என்று இருந்தான், பார்ப்பதற்கு ரொம்பவும் லட்சணமாக இருந்தான்.+ அப்போது யெகோவா, “இவனைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன், இவனை அபிஷேகம் செய்!”+ என்று சொன்னார். 13  உடனே சாமுவேல், எண்ணெய் நிரப்பிய கொம்பை+ எடுத்து, அவனுடைய சகோதரர்களுக்கு முன்பாக அவனை அபிஷேகம் செய்தார். அந்த நாளிலிருந்து, யெகோவாவின் சக்தியால் தாவீது பலம் பெற்றான்.+ பிறகு, சாமுவேல் ராமாவுக்குப் புறப்பட்டுப் போனார்.+ 14  அந்தச் சமயத்தில், யெகோவாவின் சக்தி சவுலைவிட்டு விலகியிருந்தது.+ அவருடைய மனம்* அவரை ஆட்டிப்படைப்பதற்கு யெகோவா விட்டுவிட்டார்.+ 15  சவுலின் ஊழியர்கள் அவரிடம் வந்து, “எஜமானே, உங்கள் மனம் உங்களை ஆட்டிப்படைப்பதற்குக் கடவுள் விட்டுவிட்டார். 16  யாழ் வாசிப்பதில் திறமைசாலியான ஒருவனைத்+ தேடிப் பிடித்து உங்கள் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறோம், தயவுசெய்து உத்தரவு கொடுங்கள். உங்கள் மனம் உங்களை ஆட்டிப்படைக்கும் சமயங்களில் அவன் யாழ் வாசிக்கட்டும். அப்போது, உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்” என்று சொன்னார்கள். 17  அதற்கு சவுல், “அப்படியென்றால், நன்றாக வாசிக்கிற ஒருவனைத் தயவுசெய்து தேடிப் பிடித்து என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று சொன்னார். 18  அவருடைய ஊழியர்களில் ஒருவன், “பெத்லகேம் ஊரானாகிய ஈசாயின் மகன் ஒருவன் திறமையாக யாழ் வாசிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவன் தைரியசாலி, அவன் ஒரு மாவீரன்.+ அதுமட்டுமல்ல, அவனுக்கு நல்ல பேச்சுத் திறமை இருக்கிறது, பார்க்கவும் அழகாக இருப்பான்.+ யெகோவா அவனோடு இருக்கிறார்”+ என்றான். 19  அப்போது சவுல் ஈசாயிடம் ஆட்களை அனுப்பி, “ஆடு மேய்க்கிற உங்கள் மகன் தாவீதை என்னிடம் அனுப்பி வையுங்கள்”+ என்று சொன்னார். 20  அதைக் கேட்ட ஈசாய், ரொட்டியையும் ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் ஒரு தோல் பையில் திராட்சமதுவையும் கழுதைமேல் ஏற்றி தன் மகன் தாவீதிடம் கொடுத்து அனுப்பினார். 21  இப்படி, தாவீது சவுலிடம் வந்து அவருக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தான்.+ சவுல் அவனை மிகவும் நேசித்தார், அவன் அவருடைய ஆயுதங்களைச் சுமக்கிற வேலை செய்துவந்தான். 22  சவுல் ஈசாயிடம் ஆள் அனுப்பி, “தாவீதை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. தயவுசெய்து அவன் இங்கேயே இருந்து எனக்குப் பணிவிடை செய்யட்டும்” என்று சொன்னார். 23  சவுலின் மனம் அவரை ஆட்டிப்படைப்பதற்குக் கடவுள் எப்போதெல்லாம் விட்டுவிட்டாரோ அப்போதெல்லாம் தாவீது யாழ் வாசித்தான். அதனால், சவுலுக்கு ஆறுதலும் நிம்மதியும் கிடைத்தது, அவருடைய மனமும் அவரை ஆட்டிப்படைக்கவில்லை.+

அடிக்குறிப்புகள்

சொல் பட்டியலில் “கொம்பு” என்ற தலைப்பைப் பாருங்கள்.
வே.வா., “மூப்பர்கள்.”
வே.வா., “கெட்ட சிந்தை.”