1 சாமுவேல் 17:1-58

  • தாவீது கோலியாத்தைத் தோற்கடிக்கிறார் (1-58)

    • இஸ்ரவேலர்களிடம் கோலியாத் சவால்விடுகிறான் (8-10)

    • தாவீது சவாலை ஏற்றுக்கொள்கிறார் (32-37)

    • தாவீது யெகோவாவின் பெயரில் போர் செய்கிறார் (45-47)

17  போர் செய்வதற்காக பெலிஸ்தியர்கள்+ படைகளைத் திரட்டினார்கள். யூதாவுக்குச் சொந்தமான சோக்கோவில்+ அவர்கள் ஒன்றுகூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும்+ இடையில் எபேஸ்-தம்மீம்+ என்ற இடத்தில் முகாம்போட்டார்கள்.  சவுலும் இஸ்ரவேல் வீரர்களும் திரண்டு வந்து ஏலா பள்ளத்தாக்கில்+ முகாம்போட்டு, பெலிஸ்தியர்களோடு போர் செய்வதற்காக அணிவகுத்து நின்றார்கள்.  ஒரு பக்கத்திலுள்ள மலையில் பெலிஸ்தியர்கள் நின்றார்கள், இன்னொரு பக்கத்திலுள்ள மலையில் இஸ்ரவேலர்கள் நின்றார்கள், நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.  பின்பு, பெலிஸ்தியர்களுடைய முகாமிலிருந்து ஒரு மாவீரன் வந்தான். அவனுடைய பெயர் கோலியாத்.+ அவன் காத்+ நகரத்தைச் சேர்ந்தவன். அவனுடைய உயரம் சுமார் ஒன்பது அடி, ஆறு அங்குலம்.*  செம்பினால் செய்யப்பட்ட தலைக்கவசத்தையும், செதில்செதிலாக வடிவமைக்கப்பட்ட உடல்கவசத்தையும் அவன் போட்டிருந்தான். அந்தச் செம்பு உடல்கவசத்தின்+ எடை 5,000 சேக்கல்.*  கால்களில் அவன் செம்புக் கவசங்களைப் போட்டிருந்தான், செம்பினால் செய்யப்பட்ட சிறிய ஈட்டியை+ முதுகுக்குப் பின்னால் வைத்திருந்தான்.  அவன் கையில் வைத்திருந்த பெரிய ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல்+ இருந்தது. அந்த ஈட்டியின் இரும்பு முனை 600 சேக்கல்* எடையுள்ளதாக இருந்தது. அவனுடைய கேடயத்தைச் சுமந்தவன் அவனுக்கு முன்னால் நடந்துவந்தான்.  பின்பு, கோலியாத் இஸ்ரவேல் படையைப் பார்த்து,+ “எதற்காகப் போருக்கு அணிவகுத்து நிற்கிறீர்கள்? நான் ஒரு பெலிஸ்திய வீரன். ஆனால், நீங்கள் சவுலின் அடிமைகள். என்னோடு மோதுவதற்குச் சரியான ஒரு ஆளை அனுப்புங்கள்.  அவன் என்னோடு சண்டைபோட்டு என்னைக் கொன்றுவிட்டால், நாங்கள் உங்களுக்கு அடிமைகளாக இருப்போம். ஆனால் நான் அவனைக் கொன்றுவிட்டால், நீங்கள் எங்களுக்கு அடிமைகளாக இருப்பீர்கள்” என்று கத்தினான். 10  அதோடு, “இன்று இஸ்ரவேல் படைக்குச் சவால்விடுகிறேன்.+ என்னோடு மோதுவதற்கு ஒருவனை அனுப்புங்கள், இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம்!” என்று சொன்னான். 11  அந்தப் பெலிஸ்தியன் பேசியதை சவுலும் இஸ்ரவேலர்களும் கேட்டு பயந்து நடுங்கினார்கள். 12  யூதாவிலுள்ள பெத்லகேமைச்+ சேர்ந்த எப்பிராத்தியரான+ ஈசாயின்+ மகன்களில் ஒருவன்தான் தாவீது. ஈசாய்க்கு மொத்தம் எட்டு மகன்கள்+ இருந்தார்கள். சவுலின் காலத்தில் ஈசாய் வயதானவராக இருந்தார். 13  இவருடைய மூத்த மகன் எலியாபும்,+ இரண்டாம் மகன் அபினதாபும்,+ மூன்றாம் மகன் சம்மாவும்+ சவுலோடு போருக்குப் போயிருந்தார்கள்.+ 14  தாவீதுதான் கடைசி மகன்.+ மூத்தவர்கள் மூன்று பேரும் சவுலோடு போயிருந்தார்கள். 15  சவுலுக்குப் பணிவிடை செய்துவந்த தாவீது, தன்னுடைய அப்பாவின் ஆடுகளை மேய்ப்பதற்காக+ பெத்லகேமுக்குப் போவதும் வருவதுமாக இருந்தான். 16  இதற்கிடையில், அந்தப் பெலிஸ்தியன் 40 நாட்களுக்குக் காலையிலும் சாயங்காலத்திலும் வந்துவந்து நின்றான். 17  ஈசாய் தன்னுடைய மகன் தாவீதிடம், “ஒரு எப்பா அளவு* உள்ள இந்த வறுத்த தானியத்தையும் பத்து ரொட்டிகளையும் தயவுசெய்து எடுத்துக்கொண்டு, முகாமில் இருக்கிற உன் அண்ணன்களிடம் சீக்கிரமாகப் போ. 18  ஆயிரம் வீரர்களின் தலைவனுக்கு இந்தப் பத்துப் பாலாடைக் கட்டிகளைக் கொடு. அதோடு, உன் அண்ணன்கள் பத்திரமாக இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக அவர்களிடமிருந்து ஏதாவது வாங்கிக்கொண்டு வா” என்று சொன்னார். 19  பெலிஸ்தியர்களுடன் போர் செய்வதற்காக+ அவர்கள் சவுலோடும் மற்ற எல்லா இஸ்ரவேல் வீரர்களோடும் ஏலா பள்ளத்தாக்கில்+ கூடியிருந்தார்கள். 20  தாவீது விடியற்காலையிலேயே எழுந்து, ஆடுகளை வேறொருவனிடம் ஒப்படைத்துவிட்டு, ஈசாய் சொன்னபடியே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனான். அவன் முகாமுக்குள் போனபோது படைவீரர்கள் போர் முழக்கம் செய்தபடி அணிவகுத்துப் போய்க்கொண்டிருந்தார்கள். 21  இஸ்ரவேல் படையும் பெலிஸ்தியப் படையும் எதிரெதிராக அணிவகுத்து நின்றன. 22  தாவீது உடனே மூட்டைமுடிச்சுகளைக் காவலனிடம் ஒப்படைத்துவிட்டுப் போர்க்களத்துக்கு நேராக ஓடினான். அங்கு போய்ச் சேர்ந்தவுடன், தன் அண்ணன்களிடம் நலம் விசாரித்தான்.+ 23  அவர்களிடம் தாவீது பேசிக்கொண்டிருந்த சமயத்தில், காத் நகரத்தைச் சேர்ந்த மாவீரன் கோலியாத்+ பெலிஸ்தியப் படையிலிருந்து வந்து, முன்பு சொல்லிய அதே வார்த்தைகளைச் சொல்லி+ சவால்விட்டான். அதை தாவீது கேட்டான். 24  இஸ்ரவேல் வீரர்கள் கோலியாத்தைப் பார்த்தபோது பயந்துபோய்,+ தலைதெறிக்க ஓடினார்கள். 25  இஸ்ரவேலர்கள் ஒருவருக்கொருவர், “இஸ்ரவேல் படைக்கு முன்னால் வந்து நின்றுகொண்டு சவால் விடுகிற+ மனிதனைப் பார்த்தீர்களா? அவனை ஜெயிக்கிறவனுக்கு ராஜா பெரிய சன்மானம் கொடுப்பாராம், தன்னுடைய மகளையே கல்யாணம் செய்து கொடுப்பாராம்.+ அதுமட்டுமல்ல, இஸ்ரவேலில் அவனுடைய அப்பாவின் குடும்பத்துக்கு விசேஷ சலுகைகளும் செய்வாராம்” என்று சொல்லிக்கொண்டார்கள். 26  தாவீது தனக்குப் பக்கத்தில் நின்றவர்களிடம், “அந்தப் பெலிஸ்தியனைக் கொன்று, இஸ்ரவேலர்களின் பெயரைக் காப்பாற்றுகிறவனுக்கு என்ன கிடைக்கும்? விருத்தசேதனம் செய்யாத அந்தப் பெலிஸ்தியன் எப்படி உயிருள்ள கடவுளின் படைக்குச் சவால்விடலாம்?”+ என்று கேட்டான். 27  அப்போது அந்த வீரர்கள், அவனைக் கொன்றுபோடுகிறவனுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருந்ததோ அதை தாவீதிடம் சொன்னார்கள். 28  வீரர்களிடம் தாவீது பேசிக்கொண்டிருப்பதை மூத்த அண்ணன் எலியாப்+ கேட்டபோது அவன்மேல் கோபப்பட்டு, “நீ எதற்கு இங்கே வந்தாய்? இருக்கிற கொஞ்சநஞ்ச ஆடுகளையும் வனாந்தரத்தில் யாரிடம் விட்டுவிட்டு வந்தாய்?+ போர் நடப்பதை வேடிக்கை பார்க்கத்தானே வந்தாய்? எனக்குத் தெரியும், நீ கெட்ட எண்ணம்பிடித்தவன், திமிர்பிடித்தவன்” என்றான். 29  அதற்கு தாவீது, “இப்போது நான் என்ன செய்துவிட்டேன்? ஒரேவொரு கேள்விதானே கேட்டேன்!” என்றான். 30  பின்பு, வேறொருவனிடம் திரும்பி, முன்பு கேட்டதையே கேட்டான்.+ அங்கிருந்தவர்களும் முன்பு சொன்னதையே சொன்னார்கள்.+ 31  தாவீது பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட சிலர் சவுலிடம் போய் அதைச் சொன்னார்கள். உடனே, சவுல் அவனைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார். 32  தாவீது சவுலிடம் வந்து, “அந்தப் பெலிஸ்தியனைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். நான் போய் அவனோடு சண்டை போடுகிறேன்”+ என்று சொன்னான். 33  அதற்கு சவுல், “அந்தப் பெலிஸ்தியனை எதிர்த்து உன்னால் சண்டை போட முடியாது. நீ சின்னப் பையன்,+ ஆனால் அவன் சின்ன வயதிலிருந்தே ஒரு போர்வீரன்” என்று சொன்னார். 34  அப்போது தாவீது, “உங்கள் அடியேனாகிய நான் என்னுடைய அப்பாவின் ஆடுகளை மேய்த்துவருகிறேன். ஒருநாள் ஒரு சிங்கமும்,+ இன்னொரு நாள் ஒரு கரடியும் வந்து மந்தையிலுள்ள ஆட்டைக் கவ்விக்கொண்டு போனது. 35  நான் அதைத் துரத்திக் கொண்டுபோய், அதன் வாயிலிருந்து ஆட்டைக் காப்பாற்றினேன். அது என்மேல் பாய்ந்தபோது, அதன் தாடையைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன். 36  சிங்கம், கரடி இரண்டையுமே அடித்துக் கொன்றேன். விருத்தசேதனம் செய்யாத இந்தப் பெலிஸ்தியனுக்கும் அதே கதிதான் வரும்! உயிருள்ள கடவுளின் படையிடமே அவன் சவால்விட்டிருக்கிறானே!”+ என்றான். 37  அதோடு, “சிங்கத்தின் பிடியிலிருந்தும் கரடியின் பிடியிலிருந்தும் என்னைக் காப்பாற்றிய யெகோவாதான் இந்தப் பெலிஸ்தியனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்”+ என்றான். அதற்கு சவுல், “சரி, புறப்பட்டுப் போ, யெகோவா உன்னோடு இருப்பார்!” என்று சொன்னார். 38  பின்பு, சவுல் தாவீதுக்குத் தன்னுடைய உடைகளைப் போட்டுவிட்டார். அதோடு, செம்பினால் செய்யப்பட்ட தலைக்கவசத்தையும் உடல்கவசத்தையும் போட்டுவிட்டார். 39  அதன்பின், தாவீது சவுலின் வாளைத் தன் உடைமேல் வைத்துக் கட்டிக்கொண்டு, நடந்து பார்த்தான். அதையெல்லாம் போட்டுப் பழக்கமில்லாததால் அவனால் நடக்க முடியவில்லை. அதனால் சவுலிடம், “எனக்குப் பழக்கமில்லாததால் இதையெல்லாம் போட்டுக்கொண்டு என்னால் நடக்க முடியவில்லை” என்று சொல்லி, அவற்றைக் கழற்றிவிட்டான். 40  பின்பு, ஆற்றுப்படுகையிலிருந்து* ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து, மேய்ப்பனுக்குரிய தன் பையில் போட்டுக்கொண்டு, தடியையும் கவணையும்+ எடுத்துக்கொண்டு அந்தப் பெலிஸ்தியனின் முன்னால் போனான். 41  அந்தப் பெலிஸ்தியன் தாவீதை நெருங்கிக்கொண்டே வந்தான், அவனுடைய கேடயத்தைச் சுமந்தவன் அவனுக்கு முன்னால் நடந்துவந்தான். 42  செக்கச்செவேல் என்று அழகாக இருந்த தாவீது அவன் முன்னால் போனான். தாவீது வெறும் சின்னப் பையனாக+ இருந்ததால் அவனை அந்தப் பெலிஸ்தியன் ரொம்பவே இளக்காரமாகப் பார்த்தான். 43  அவன் தாவீதிடம், “ஒரு தடியை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாயே, நான் என்ன நாயா?”+ என்று கேட்டான். பின்பு, தன்னுடைய தெய்வங்களின் பெயரைச் சொல்லி அவனைச் சபித்தான். 44  அதோடு, “இங்கே வா, உன்னுடைய உடலை வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் இரையாகப் போடுகிறேன்” என்று மிரட்டினான். 45  அதற்கு தாவீது, “நீ வாளோடும் பெரிய ஈட்டியோடும்+ சிறிய ஈட்டியோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நான் பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயரில் உன்னை எதிர்த்து வருகிறேன்,+ நீ சவால்விட்ட இஸ்ரவேல் படையின் கடவுளுடைய பெயரில் வருகிறேன்.+ 46  இன்றைக்கு யெகோவா உன்னை என் கையில் கொடுப்பார்.+ நான் உன்னைக் கொல்வேன், உன் தலையை வெட்டுவேன். இன்று பெலிஸ்திய வீரர்களின் உடல்களை வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் இரையாகப் போடுவேன். அப்போது, இஸ்ரவேலின் கடவுள்தான் உண்மைக் கடவுள் என்பதைப் பூமியிலுள்ள எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.+ 47  யெகோவாவுக்குத் தன்னுடைய ஜனங்களைக் காப்பாற்ற வாளோ ஈட்டியோ தேவையில்லை+ என்பதை இங்கே இருக்கிற எல்லாரும் தெரிந்துகொள்வார்கள். இந்தப் போர் யெகோவாவின் போர்,+ உங்கள் எல்லாரையும் அவர் எங்கள் கையில் கொடுப்பார்”+ என்று சொன்னான். 48  அந்தப் பெலிஸ்தியன் தாவீதை நெருங்கிக்கொண்டே வந்தான், தாவீதும் அவனைத் தாக்குவதற்காகப் போர்க்களத்தில் வேகமாக ஓடினான். 49  தன்னுடைய பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து, அதைக் கவணில் வைத்துச் சுழற்றி, அந்தப் பெலிஸ்தியனின் நெற்றியைக் குறிபார்த்து வீசினான். அது அந்தப் பெலிஸ்தியனின் நெற்றியைத் துளைத்தது, அவன் அப்படியே தரையில் குப்புற விழுந்தான்.+ 50  இப்படி, தாவீது ஒரு கவணையும் கல்லையும் வைத்தே அந்தப் பெலிஸ்தியனை ஜெயித்தான். கையில் வாள் இல்லாமலேயே அவனைத் தாக்கிக் கொன்றுபோட்டான்.+ 51  பின்பு, ஓடிப்போய் அந்தப் பெலிஸ்தியன்மேல் ஏறி நின்று, அந்தப் பெலிஸ்தியனின் வாளை உருவி,+ அவனுடைய தலையை வெட்டி, அவன் செத்துவிட்டதை ஊர்ஜிதப்படுத்தினான். தங்களுடைய மாவீரன் செத்துப்போனதை பெலிஸ்தியர்கள் பார்த்தபோது அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள்.+ 52  உடனே, இஸ்ரவேல் வீரர்களும் யூதாவின் வீரர்களும் கத்திக் கூச்சல் போட்டுக்கொண்டே பள்ளத்தாக்கிலிருந்து+ எக்ரோனின்+ நுழைவாசல்கள் வரைக்கும் பெலிஸ்தியர்களைத் துரத்திக்கொண்டு போனார்கள். சாராயிமுக்குப்+ போகும் சாலை தொடங்கி காத் மற்றும் எக்ரோன் வரைக்கும் பெலிஸ்தியர்களை வழியெல்லாம் வெட்டிச் சாய்த்தார்கள். 53  பெலிஸ்தியர்களை விரட்டிப் பிடித்து சாகடித்த பின்பு அவர்களுடைய முகாம்களுக்கு வந்து அவற்றைச் சூறையாடினார்கள். 54  பின்பு, தாவீது அந்தப் பெலிஸ்தியனுடைய தலையை எருசலேமுக்குக் கொண்டுவந்தான். அந்தப் பெலிஸ்தியனுடைய ஆயுதங்களை தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டான்.+ 55  அந்தப் பெலிஸ்தியனோடு சண்டை போட தாவீது புறப்பட்டுப் போனதை சவுல் பார்த்தபோது தன்னுடைய படைத் தளபதி அப்னேரிடம்,+ “இவன் யாருடைய பையன்?”+ என்று கேட்டார். அதற்கு அப்னேர், “ராஜாவே, உங்கள் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* எனக்குத் தெரியாது!” என்றான். 56  அதற்கு ராஜா, “அப்படியென்றால், இவன் யாருடைய பையன் என்று விசாரி” என்றார். 57  தாவீது அந்தப் பெலிஸ்தியனைக் கொன்றுவிட்டுத் திரும்பியதும் அப்னேர் அவனை சவுலிடம் கூட்டிக்கொண்டு வந்தான். தாவீது அந்தப் பெலிஸ்தியனுடைய தலையைக்+ கையில் வைத்திருந்தான். 58  அப்போது சவுல் அவனிடம், “நீ யாருடைய பையன்?” என்று கேட்டார். அதற்கு தாவீது, “பெத்லகேம் ஊரைச் சேர்ந்த+ உங்கள் அடிமை ஈசாயின்+ பையன்” என்று சொன்னான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “உயரம் ஆறு முழம், ஒரு சாண்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
சுமார் 57 கிலோ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
சுமார் 6.84 கிலோ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “சுமார் 10 கிலோ.”
வே.வா., “காட்டாற்றுப் பள்ளத்தாக்கிலிருந்து.”
வே.வா., “நீங்கள் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”