1 சாமுவேல் 23:1-29

  • கேகிலா நகரத்தாரை தாவீது காப்பாற்றுகிறார் (1-12)

  • சவுல் தாவீதை விடாமல் தேடி அலைகிறார் (13-15)

  • தாவீதை யோனத்தான் பலப்படுத்துகிறார் (16-18)

  • சவுல் தன்னை நெருங்கிவிட்டபோதும் தாவீது தப்பித்துக்கொள்கிறார் (19-29)

23  ஒருநாள், தாவீதின் ஆட்கள் அவரிடம், “பெலிஸ்தியர்கள் கேகிலா+ நகரத்தைத் தாக்கி, அங்குள்ள களத்துமேடுகளைச் சூறையாடுகிறார்கள்” என்று சொன்னார்கள்.  உடனே அவர் யெகோவாவிடம், “நான் போய் பெலிஸ்தியர்களைத் தாக்கட்டுமா?” என்று விசாரித்தார்.+ அதற்கு யெகோவா, “போ, பெலிஸ்தியர்களைத் தாக்கி கேகிலா நகரத்தாரைக் காப்பாற்று” என்றார்.  ஆனால் தாவீதின் ஆட்கள் அவரிடம், “இங்கு யூதாவில் இருக்கும்போதே+ பயந்துகொண்டு இருக்கிறோம். இதில், கேகிலாவுக்கு வேறு போய் பெலிஸ்தியப் படையை எதிர்க்க வேண்டுமா?”+ என்றார்கள்.  அதனால் தாவீது மறுபடியும் யெகோவாவிடம் விசாரித்தார்.+ அதற்கு யெகோவா, “கேகிலாவுக்குப் புறப்பட்டுப் போ. பெலிஸ்தியர்களை உன்னுடைய கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார்.  அதனால், தாவீது தன் ஆட்களோடு கேகிலாவுக்குப் போய் பெலிஸ்தியர்களோடு போர் செய்து அவர்களுடைய கால்நடைகளைக் கைப்பற்றினார். அவர்களில் ஏராளமானவர்களை வெட்டிச் சாய்த்து, கேகிலாவின் ஜனங்களைக் காப்பாற்றினார்.+  அகிமெலேக்கின் மகன் அபியத்தார்+ கேகிலாவிலிருந்த தாவீதிடம் ஓடிப்போனபோது ஏபோத்தையும் கொண்டுபோனார்.  தாவீது கேகிலாவுக்கு வந்த விஷயம் சவுலுக்குச் சொல்லப்பட்டது. உடனே அவர், “அவனைக் கடவுள் என் கையில் கொடுத்துவிட்டார்.+ கோட்டைக் கதவுகளும் தாழ்ப்பாள்களும் உள்ள நகரத்துக்குள் வந்து அவன் வசமாக மாட்டிக்கொண்டான்” என்றார்.  கேகிலாவுக்குப் போய் போர் செய்து தாவீதையும் அவருடைய ஆட்களையும் வளைத்துப் பிடிப்பதற்காக வீரர்கள் எல்லாரையும் சவுல் வரச் சொன்னார்.  தன்னைப் பிடிக்க சவுல் திட்டம் தீட்டியிருப்பது தாவீதுக்குத் தெரியவந்ததும் குருவாகிய அபியத்தாரிடம், “ஏபோத்தை இங்கே கொண்டுவாருங்கள்”+ என்றார். 10  அதன்பின், “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவே, என்னைக் கொல்வதற்காக சவுல் இந்த கேகிலா நகரத்தையே அழிக்கத் திட்டம் போட்டிருப்பதாக+ அடியேன் கேள்விப்பட்டேன். 11  கேகிலாவின் தலைவர்கள்* என்னை அவருடைய கையில் ஒப்படைத்துவிடுவார்களா? நான் கேள்விப்பட்டபடி, சவுல் இங்கே வருவாரா? இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவே, தயவுசெய்து உங்களுடைய அடியேனுக்குச் சொல்லுங்கள்” என்றார். அதற்கு யெகோவா, “அவன் வருவான்” என்று சொன்னார். 12  அப்போது தாவீது, “என்னையும் என் ஆட்களையும் கேகிலாவின் தலைவர்கள் சவுலின் கையில் கொடுத்துவிடுவார்களா?” என்று கேட்டார். அதற்கு யெகோவா, “ஆமாம், கொடுத்துவிடுவார்கள்” என்றார். 13  உடனே, தாவீது தன்னோடு இருந்த சுமார் 600 ஆட்களைக்+ கூட்டிக்கொண்டு கேகிலாவைவிட்டுப் புறப்பட்டார். அவர் ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டே இருந்தார். தாவீது கேகிலாவிலிருந்து தப்பித்துவிட்ட விஷயம் சவுலுக்குத் தெரிவிக்கப்பட்டதால் அவர் தாவீதைத் தேடி அங்கே போகவில்லை. 14  சீப் வனாந்தரத்தில்+ உள்ள மலைப்பகுதியில் இருக்கிற குகைகளில்* தாவீது பதுங்கியிருந்தார். சவுல் விடாமல் அவரைத் தேடினார்,+ ஆனால் யெகோவா அவரை சவுலின் கையில் கொடுக்கவில்லை. 15  சீப் வனாந்தரத்திலுள்ள ஓரேசில் தாவீது இருந்தபோது, தன்னைக் கொல்ல சவுல் மறுபடியும் தேடி அலைவதைத் தெரிந்துகொண்டார்.* 16  தாவீதைப் பார்க்க சவுலின் மகனாகிய யோனத்தான் ஓரேசுக்குப் போனார். யெகோவாமேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவர் தாவீதுக்கு உதவினார்.*+ 17  அவர் தாவீதிடம், “பயப்படாதே, என் அப்பா உன்னை எதுவும் செய்ய முடியாது. நீதான் இஸ்ரவேலின் ராஜாவாக இருப்பாய்,+ நான் உனக்கு அடுத்தபடியாகத்தான் இருப்பேன். இது என் அப்பாவுக்கும் தெரியும்”+ என்றார். 18  பின்பு, இரண்டு பேரும் யெகோவாவின் முன்னால் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.+ தாவீது ஓரேசில் தங்கினார், யோனத்தானோ தன் வீட்டுக்குத் திரும்பினார். 19  அதன்பின், சீப் நகரத்தார் கிபியாவிலிருந்த+ சவுலிடம் வந்து, “தாவீது எங்கள் ஊருக்குப் பக்கத்திலுள்ள குகைகளில்* ஒளிந்திருக்கிறான்.+ எஷிமோனுக்கு*+ தெற்கே ஆகிலாவின்+ குன்றிலிருக்கிற ஓரேசில்+ பதுங்கியிருக்கிறான். 20  ராஜாவே, உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது வாருங்கள். நாங்கள் அவனை உங்கள் கையில் பிடித்துக் கொடுக்கிறோம்”+ என்றார்கள். 21  அதற்கு சவுல், “நீங்கள் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறீர்கள், யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும். 22  இப்போது தயவுசெய்து போய், அவன் உண்மையில் எங்கே இருக்கிறான் என்றும், அவனை அங்கே பார்த்தது யார் என்றும் நன்றாக விசாரியுங்கள். ஏனென்றால், ஏமாற்றுவதில் அவன் பெரிய கில்லாடி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 23  அவன் எங்கெல்லாம் போய் ஒளிந்துகொள்கிறான் என்று கவனமாகப் பார்த்துவிட்டு ஆதாரத்துடன் என்னிடம் வாருங்கள். அதன் பிறகு நான் உங்களோடு வருகிறேன். யூதாவில் இருக்கிற குடும்பங்கள்* நடுவில் அவன் ஒளிந்திருந்தாலும் நான் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன்” என்று சொன்னார். 24  அதனால், அவர்கள் புறப்பட்டு சவுலுக்கு முன்னதாகவே சீப்+ நகரத்துக்குப் போனார்கள். அப்போது, தாவீதும் அவருடைய ஆட்களும் மாகோன் வனாந்தரத்தில்,+ எஷிமோனுக்குத் தெற்கே உள்ள அரபாவில்+ இருந்தார்கள். 25  பின்பு, சவுல் தன்னுடைய ஆட்களோடு தாவீதைத் தேடி அங்கே வந்தார்.+ அதை தாவீது கேள்விப்பட்டவுடன் மாகோன் வனாந்தரத்தில் இருக்கிற மலைப்பாறைக்குப்+ போய்ப் பதுங்கிக்கொண்டார். அதை சவுல் தெரிந்துகொண்டவுடன், தாவீதைத் துரத்திக்கொண்டு மாகோன் வனாந்தரத்துக்குப் போனார். 26  மலையின் ஒரு பக்கத்தில் சவுல் வந்தபோது, தாவீதும் அவருடைய ஆட்களும் மலையின் இன்னொரு பக்கத்தில் இருந்தார்கள். சவுலிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க தாவீது வேக வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்.+ ஆனால், தாவீதையும் அவருடைய ஆட்களையும் வளைத்துப் பிடிக்க சவுலும் அவருடைய ஆட்களும் நெருங்கிவிட்டார்கள்.+ 27  அப்போது தூதுவன் ஒருவன் சவுலிடம் வந்து, “உடனே வாருங்கள், பெலிஸ்தியர்கள் நம் தேசத்துக்குள் வந்து திடீர்த் தாக்குதல் நடத்துகிறார்கள்” என்றான். 28  சவுல் அதைக் கேட்டதும், தாவீதைத் துரத்துவதை விட்டுவிட்டு+ பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போனார். அதனால்தான் அந்த இடம் சேலா-அம்மாலிகோத்* என்று அழைக்கப்படுகிறது. 29  பின்பு, தாவீது அங்கிருந்து என்-கேதிக்குப்+ போய், குகைகளில்* தங்கினார்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “நிலச் சொந்தக்காரர்கள்.”
நே.மொ., “எளிதில் நெருங்க முடியாத இடங்களில்.”
அல்லது, “தேடி அலைந்ததால் பயப்பட்டார்.”
நே.மொ., “யெகோவாவுக்குள் அவருடைய கையைப் பலப்படுத்தினார்.”
நே.மொ., “எளிதில் நெருங்க முடியாத இடங்களில்.”
அல்லது, “வனாந்தரத்துக்கு.”
நே.மொ., “ஆயிரங்கள்.” அதாவது, “ஆயிரம் பேர் கொண்ட தொகுதிகள்.”
அர்த்தம், “பிரிவுகளின் மலைப்பாறை.”
நே.மொ., “எளிதில் நெருங்க முடியாத இடங்களில்.”