1 சாமுவேல் 27:1-12

  • பெலிஸ்தியர்கள் தாவீதுக்கு சிக்லாகு ஊரைக் கொடுக்கிறார்கள் (1-12)

27  ஆனாலும், தாவீது தன் உள்ளத்தில், ‘என்றைக்காவது ஒருநாள் சவுல் என்னைக் கொன்றுவிடுவார். அதனால், பெலிஸ்தியர்களின் தேசத்துக்குத் தப்பித்துப் போவதுதான் நல்லது.+ அப்போதுதான், இஸ்ரவேல் முழுக்க என்னைத் தேடித்தேடி+ சவுல் அலுத்துப்போவார், நானும் அவருடைய கையில் சிக்க மாட்டேன்’ என்று நினைத்துக்கொண்டார்.  அதனால், அவர் தன்னோடு இருந்த 600 ஆட்களைக்+ கூட்டிக்கொண்டு, மாயோக்கின் மகனும் காத்தின் ராஜாவுமாகிய ஆகீசிடம்+ போனார்.  அதன்பின், தாவீதும் அவருடைய ஆட்களும் அவரவர் குடும்பத்தாரோடு காத் நகரத்தில் ஆகீசுடன் தங்கினார்கள். தாவீதுடன் அவருடைய இரண்டு மனைவிகளான யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாமும்+ கர்மேலைச் சேர்ந்த அபிகாயிலும்+ இருந்தார்கள். இந்த அபிகாயில், இறந்துபோன நாபாலின் மனைவி.  காத் நகரத்துக்கு தாவீது தப்பியோடிய செய்தி சவுலுக்கு எட்டியது. அதன்பின், அவர் தாவீதைத் தேடவில்லை.+  ஒருநாள் தாவீது ஆகீசிடம், “என்மேல் உங்களுக்குப் பிரியமிருந்தால், நான் குடியிருப்பதற்கு ஒரு சின்ன ஊரில் தயவுசெய்து இடம் கொடுங்கள். ராஜா வாழும் நகரத்தில் அடியேன் இருக்க வேண்டாம் என்பதால்தான் கேட்கிறேன்” என்றார்.  அதனால், அன்று ஆகீஸ் அவருக்கு சிக்லாகு+ என்ற ஊரைக் கொடுத்தான். அதனால்தான், சிக்லாகு இன்றுவரை யூதாவின் ராஜாக்களுக்குச் சொந்தமாக இருக்கிறது.  பெலிஸ்தியர்களுடைய அந்த ஊரில் தாவீது ஒரு வருஷமும் நான்கு மாதங்களும் தங்கியிருந்தார்.+  அந்தச் சமயத்தில், அவர் தன்னுடைய ஆட்களுடன் போய் கேசூரியர்கள்,+ கெஸ்ரியர்கள், அமலேக்கியர்கள்+ ஆகியவர்கள்மேல் திடீர்த் தாக்குதல் நடத்தினார். அந்த ஜனங்கள் தெலாம் முதல் ஷூர்+ வரையும் எகிப்து தேசம் வரையும் வாழ்ந்துவந்தார்கள்.  தாவீது அந்தப் பகுதிகளைத் தாக்கும்போதெல்லாம் அங்கிருந்த ஆண்கள், பெண்கள் எல்லாரையும் ஒருவர்விடாமல் கொன்றுபோடுவார்.+ ஆனால், அவர்களுடைய ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் துணிமணிகளையும் எடுத்துக்கொள்வார். பின்பு, ஆகீசிடம் திரும்பி வருவார். 10  ஆகீஸ் அவரிடம், “இன்றைக்கு நீங்கள் எல்லாரும் எங்கே தாக்குதல் நடத்தினீர்கள்?” என்று கேட்கும்போது, “யூதாவின்+ தென்பக்கத்தில்”* என்பார், அல்லது “யெர்மெயேலியர்களின்+ தென்பக்கத்தில்” என்பார், அல்லது “கேனியர்களின்+ தென்பக்கத்தில்” என்று சொல்வார். 11  ஆண்கள், பெண்கள் யாரையுமே காத் நகரத்துக்கு அவர் உயிரோடு கொண்டுவர மாட்டார். (பெலிஸ்தியர்களின் ஊரில் வாழ்ந்த காலமெல்லாம் அவர் அப்படித்தான் செய்துவந்தார்.) ஏனென்றால், அவர்கள் தன்னையும் தன் ஆட்களையும் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்தார். 12  தாவீது சொன்னதையெல்லாம் ஆகீஸ் நம்பினான். அதனால், ‘தாவீது இஸ்ரவேலர்களின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டதால் இனி எப்போதுமே எனக்குத்தான் ஊழியனாக இருப்பான்’ என்று நினைத்துக்கொண்டான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நெகேபில்.”