1 சாமுவேல் 29:1-11

  • பெலிஸ்தியர்கள் தாவீதை நம்ப மறுக்கிறார்கள் (1-11)

29  பெலிஸ்தியர்கள்+ தங்களுடைய எல்லா படைகளையும் ஆப்பெக்கில் ஒன்றுதிரட்டினார்கள். இஸ்ரவேலர்கள் யெஸ்ரயேலில்+ உள்ள நீரூற்றுக்குப் பக்கத்தில் முகாம்போட்டார்கள்.  நூறு நூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் அணிவகுத்து வந்த வீரர்களோடு பெலிஸ்தியத் தலைவர்கள் போருக்குப் போனார்கள். தாவீதும் அவருடைய ஆட்களும் அவர்களுக்குப் பின்னால் ஆகீசுடன் அணிவகுத்துப் போனார்கள்.+  ஆனால் பெலிஸ்தியத் தலைவர்கள், “இந்த எபிரெயர்கள் ஏன் வருகிறார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆகீஸ், “இவன்தான் தாவீது, இஸ்ரவேல் ராஜாவாகிய சவுலுக்கு ஊழியனாக இருந்தான். ஒரு வருஷத்துக்கும் மேலாக என்னோடுதான் இருக்கிறான்.+ என்னிடம் வந்த நாளிலிருந்து இன்றுவரை நான் இவனிடம் எந்தக் குற்றமும் குறையும் பார்க்கவில்லை” என்று சொன்னான்.  அப்போது பெலிஸ்தியத் தலைவர்கள் ஆகீசின் மேல் பயங்கரமாகக் கோபப்பட்டு, “உடனே இவனைத் திருப்பி அனுப்புங்கள்.+ நீங்கள் தங்கவைத்த ஊருக்கே இவன் திரும்பிப் போகட்டும். இவன் நம்மோடு போருக்கு வர வேண்டாம். அப்படி வந்தால், நம்மையே தாக்கினாலும் தாக்குவான்.+ தன்னுடைய எஜமானிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு இவனுக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா? நம்முடைய ஆட்களின் தலையை வெட்டிக் கொண்டுபோய்க் கொடுத்தாலே போதுமே!  இந்த தாவீதைப் பற்றித்தானே, ‘சவுல் கொன்றது ஆயிரம்,தாவீது கொன்றது பல்லாயிரம்’என்று பெண்கள் புகழ்ந்து பாடினார்கள்?”+ என்றார்கள்.  அதனால், ஆகீஸ்+ தாவீதைக் கூப்பிட்டு, “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நீ நேர்மையானவன். நீ என்னிடம் வந்த நாளிலிருந்து இன்றுவரை நான் உன்மேல் எந்தக் குற்றமும் குறையும் பார்க்கவில்லை.+ என்னுடைய படையோடு சேர்ந்து நீ போருக்கு வருவது எனக்கு விருப்பம்தான்.+ ஆனால், மற்ற தலைவர்களுக்கு உன்மேல் நம்பிக்கை இல்லை.+  அதனால், சமாதானமாகத் திரும்பிப் போய்விடு. பெலிஸ்தியத் தலைவர்களுக்குக் கோபம் வருவது போல எதையும் செய்துவிடாதே” என்றான்.  ஆனால் தாவீது ஆகீசிடம், “ஏன்? உங்களுடைய ஊழியன் என்ன செய்துவிட்டேன்? நான் உங்களிடம் வந்த நாளிலிருந்து இன்றுவரை என்னிடம் எந்தக் குற்றமும் குறையும் நீங்கள் பார்க்கவில்லையே. என் எஜமானாகிய ராஜாவின் எதிரிகளோடு போர் செய்ய நான் ஏன் வரக் கூடாது?” என்று கேட்டார்.  அதற்கு ஆகீஸ், “என்னைப் பொறுத்தவரை, நீ கடவுளுடைய தூதனைப் போல ரொம்ப நல்லவன்.+ ஆனால், பெலிஸ்தியத் தலைவர்கள்தான் நீ எங்களோடு போருக்கு வரக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். 10  அதனால், நீயும் உன்னுடைய ஆட்களும் விடியற்காலையிலேயே எழுந்து, வெளிச்சம் வந்ததுமே போய்விடுங்கள்” என்றான். 11  அவன் சொன்னபடி, தாவீதும் அவருடைய ஆட்களும் விடியற்காலையிலேயே எழுந்து பெலிஸ்தியர்களின் தேசத்துக்குத் திரும்பிப் போனார்கள். பெலிஸ்தியர்கள் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”