1 சாமுவேல் 5:1-12

  • பெலிஸ்தியர்களின் பகுதியில் ஒப்பந்தப் பெட்டி (1-12)

    • தாகோனுக்கு அவமானம் (1-5)

    • பெலிஸ்தியர்கள் மூலநோயால் தாக்கப்படுகிறார்கள் (6-12)

5  உண்மைக் கடவுளுடைய பெட்டியைக் கைப்பற்றிய+ பெலிஸ்தியர்கள், அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்துக்குக் கொண்டுபோனார்கள்.  அந்தப் பெட்டியை தாகோன் கோயிலில்* இருந்த தாகோன்+ சிலையின் பக்கத்தில் வைத்தார்கள்.  அஸ்தோத் ஊர்க்காரர்கள் அடுத்த நாள் விடியற்காலையில் வந்து பார்த்தபோது, யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் தாகோன் சிலை தரையில் குப்புற விழுந்துகிடப்பதைப் பார்த்தார்கள்.+ அதனால், அவர்கள் அந்தச் சிலையைத் தூக்கி, அதன் இடத்தில் வைத்தார்கள்.+  அவர்கள் அடுத்த நாள் விடியற்காலையிலும் வந்து பார்த்தபோது, யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் தாகோன் சிலை தரையில் குப்புற விழுந்துகிடப்பதைப் பார்த்தார்கள். தாகோனின் தலையும் அதன் இரண்டு கைகளும் உடைந்து வாசற்படியில் கிடந்தன. மீன்வடிவ உடல் பாகம் மட்டுமே உடையாமல் இருந்தது.*  அதனால்தான், இன்றுவரை தாகோன் பூசாரிகளும் பக்தர்களும் அஸ்தோத்திலுள்ள அந்தக் கோயிலுக்குள் போகும்போது அதன் வாசற்படியை மிதிப்பதில்லை.  அஸ்தோத் ஊர்க்காரர்களை யெகோவா கடுமையாகத் தண்டித்தார். அஸ்தோத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் வாழ்ந்த ஜனங்களை மூலநோயால்* தாக்கி அவதிப்பட வைத்தார்.+  இதனால் அஸ்தோத் ஜனங்கள், “இஸ்ரவேலின் கடவுளுடைய பெட்டி நம்மிடம் இருக்கக் கூடாது. நம்மையும் நம்முடைய தாகோன் தெய்வத்தையும் அவர் பயங்கரமாகத் தாக்கிவிட்டார்” என்று சொன்னார்கள்.  அதோடு, ஆள் அனுப்பி பெலிஸ்தியர்களின் தலைவர்கள் எல்லாரையும் வரவழைத்து, “இஸ்ரவேலின் கடவுளுடைய பெட்டியை என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இஸ்ரவேலின் கடவுளுடைய பெட்டியை காத் நகரத்துக்குக்+ கொண்டுபோங்கள்” என்று சொன்னார்கள். அதன்படியே, அந்தப் பெட்டியை அங்கே கொண்டுபோனார்கள்.  அவர்கள் அதைக் கொண்டுபோன பின்பு, யெகோவா காத் நகரத்தின் ஜனங்களைத் தண்டித்தார். அங்கே பயங்கர பீதியை உண்டாக்கினார். சிறியவர்கள்முதல் பெரியவர்கள்வரை எல்லாரையும் மூலநோயால் தாக்கினார்.+ 10  அதனால், உண்மைக் கடவுளுடைய பெட்டியை எக்ரோனுக்குக்+ கொண்டுபோனார்கள். ஆனால் அந்தப் பெட்டி எக்ரோனுக்கு வந்தவுடன், “இஸ்ரவேலின் கடவுளுடைய பெட்டியை எங்களிடம் கொண்டுவந்துவிட்டார்களே, எங்கள் எல்லாரையும் சாகடிக்கப் பார்க்கிறார்களே!”+ என்று சொல்லி எக்ரோன் ஜனங்கள் அலறினார்கள். 11  அவர்கள் ஆள் அனுப்பி பெலிஸ்தியர்களின் தலைவர்கள் எல்லாரையும் வரவழைத்து, “இஸ்ரவேலின் கடவுளுடைய பெட்டியை இங்கிருந்து கொண்டுபோங்கள். அதனுடைய இடத்துக்கே அதை அனுப்பிவிடுங்கள். இல்லாவிட்டால், நாங்கள் எல்லாரும் கொல்லப்படுவோம்” என்று சொன்னார்கள். ஏனென்றால், நகரத்திலிருந்த எல்லாருக்கும் மரண பயம் வந்திருந்தது. உண்மைக் கடவுள் அவர்களைக் கடுமையாகத் தண்டித்திருந்தார்.+ 12  சாகாமல் உயிரோடு இருந்த எல்லாரையும் மூலநோயால் தாக்கியிருந்தார். அதனால், நகர ஜனங்கள் எல்லாரும் உதவிக்காக வானத்தைப் பார்த்துக் கதறி அழுதார்கள்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “வீட்டில்.”
தாகோன் சிலை, பாதி மனித உருவத்திலும் பாதி மீன் உருவத்திலும் இருந்ததாகத் தெரிகிறது.
அதாவது, “மூலக்கட்டிகளால்.”