1 சாமுவேல் 8:1-22

  • ஒரு ராஜா வேண்டும் என்று இஸ்ரவேலர்கள் கேட்கிறார்கள் (1-9)

  • சாமுவேல் ஜனங்களை எச்சரிக்கிறார் (10-18)

  • ஒரு ராஜா வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு யெகோவா ஒப்புதல் அளிக்கிறார் (19-22)

8  சாமுவேலுக்கு வயதானபோது, அவர் தன்னுடைய மகன்களை இஸ்ரவேலர்களுக்கு நியாயாதிபதிகளாக நியமித்தார்.  அவருடைய மூத்த மகன் பெயர் யோவேல், இரண்டாவது மகன் பெயர் அபியா.+ அவர்கள் பெயெர்-செபாவில் நியாயாதிபதிகளாக இருந்தார்கள்.  ஆனால், அவர்கள் இரண்டு பேரும் அவர்களுடைய அப்பாவைப் போல் நடந்துகொள்ளவில்லை. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு+ லஞ்சம் வாங்கினார்கள்,+ நியாயத்தைப் புரட்டினார்கள்.+  ஒருநாள், இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரும் ராமாவிலிருந்த சாமுவேலிடம் வந்து,  “உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்களுடைய மகன்களும் உங்களைப் போல நேர்மையாக நடப்பதில்லை. அதனால், மற்ற தேசங்களுக்கு ராஜா இருப்பது போல எங்களுக்கும் ஒரு ராஜா வேண்டும். அவர் எங்களுக்கு நீதி வழங்கட்டும்”+ என்று சொன்னார்கள்.  நீதி வழங்க ஒரு ராஜா வேண்டும் என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு சாமுவேல் வேதனைப்பட்டார். அதனால் யெகோவாவிடம் முறையிட்டார்.  அப்போது யெகோவா சாமுவேலிடம், “இந்த ஜனங்கள் உன்னிடம் சொல்வதையெல்லாம் கேள். அவர்கள் உன்னை ஒதுக்கித்தள்ளவில்லை, அவர்களுடைய ராஜாவாகிய என்னைத்தான் ஒதுக்கித்தள்ளியிருக்கிறார்கள்.+  நான் அவர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த நாளிலிருந்து இன்றுவரை இதைத்தான் செய்துவருகிறார்கள். மறுபடியும் மறுபடியும் என்னை ஒதுக்கித்தள்ளிவிட்டு+ மற்ற தெய்வங்களை வணங்குகிறார்கள்.+ உன்னையும் அப்படித்தான் ஒதுக்கித்தள்ளுகிறார்கள்.  இப்போது அவர்கள் சொல்வதைக் கேள். அதேசமயத்தில், அவர்களுக்குக் கடுமையான எச்சரிப்பைக் கொடு. அவர்களை ஆட்சி செய்யும் ராஜாவுக்கு அவர்களை எப்படி வேண்டுமானாலும் அடக்கி ஆள* உரிமை இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்” என்றார். 10  அதனால், யெகோவா சொன்ன எல்லாவற்றையும் சாமுவேல் அந்த ஜனங்களிடம் சொன்னார். 11  அவர் அவர்களிடம், “உங்களை ஆட்சி செய்யும் ராஜாவுக்கு உங்களை எப்படி வேண்டுமானாலும் அடக்கி ஆள உரிமை இருக்கிறது:+ அவனுடைய ரத வீரர்களாகவும்+ குதிரை வீரர்களாகவும்+ அவன் உங்கள் மகன்களை வைத்துக்கொள்வான்.+ அவனுடைய ரதங்களுக்கு முன்னால் சிலரை ஓட வைப்பான். 12  1,000 பேருக்குத் தலைவர்களையும்,+ 50 பேருக்குத் தலைவர்களையும்+ நியமித்து அவர்களிடம் வேலை வாங்குவான். நிலத்தை உழுவதற்கும்,+ அறுவடை செய்வதற்கும்,+ போர் ஆயுதங்கள் தயாரிப்பதற்கும், ரதங்களுக்குத்+ தேவையான கருவிகள் செய்வதற்கும் உங்களை வைத்துக்கொள்வான். 13  உங்களுடைய மகள்களை வாசனைத் தைலம் செய்கிறவர்களாகவும் சமையல்காரிகளாகவும் ரொட்டி சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்வான்.+ 14  உங்களுடைய செழிப்பான வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும் பிடுங்கி+ அவனுடைய ஊழியர்களுக்குக் கொடுப்பான். 15  உங்களுடைய வயல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் விளைகிறவற்றில் பத்திலொரு பாகத்தை எடுத்து அவனுடைய அரண்மனை அதிகாரிகளுக்கும் சேவகர்களுக்கும் கொடுப்பான். 16  உங்களுடைய வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் புஷ்டியான கால்நடைகளையும் கழுதைகளையும் கொண்டுபோய் அவனுடைய வேலைக்கு வைத்துக்கொள்வான்.+ 17  உங்களுடைய மந்தைகளில் பத்திலொரு பாகத்தை எடுத்துக்கொள்வான்.+ நீங்கள் அவனுக்கு அடிமைகளாக இருப்பீர்கள். 18  நீங்கள் தேர்ந்தெடுக்கிற ராஜா உங்களுக்குச் செய்வதையெல்லாம் பார்த்து+ ஒருநாள் யெகோவாவிடம் முறையிடுவீர்கள். ஆனால், அவர் உங்களுக்குப் பதில் சொல்ல மாட்டார்” என்றார். 19  சாமுவேல் சொன்னதை அந்த ஜனங்கள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. அவரிடம், “நீங்கள் என்ன சொன்னாலும் சரி, எங்களுக்குக் கண்டிப்பாக ஒரு ராஜா வேண்டும். 20  அப்போதுதான் மற்ற தேசத்தாரைப் போல் எங்களையும் ஒரு ராஜா ஆட்சி செய்வார். அவர் எங்களுக்கு நீதி வழங்குவார், எங்களுக்கு வழிகாட்டுவார், எங்களுக்காகப் போர் செய்வார்” என்று சொன்னார்கள். 21  ஜனங்கள் சொன்னதையெல்லாம் சாமுவேல் கேட்டுவிட்டு, அதை யெகோவாவிடம் சொன்னார். 22  அப்போது யெகோவா சாமுவேலிடம், “அவர்கள் சொல்வதைக் கேள். அவர்களை ஆட்சி செய்ய ஒரு ராஜாவை ஏற்படுத்து”+ என்று சொன்னார். அதனால், சாமுவேல் இஸ்ரவேலர்களிடம், “எல்லாரும் அவரவர் நகரங்களுக்குத் திரும்பிப் போங்கள்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்கள்.”
வே.வா., “அவர்களிடம் எதை வேண்டுமானாலும் வற்புறுத்திக் கேட்க.”