தெசலோனிக்கேயருக்கு முதலாம் கடிதம் 5:1-28

  • யெகோவாவின் நாள் வரும் (1-5)

    • “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” (3)

  • விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருங்கள் (6-11)

  • அறிவுரைகள் (12-24)

  • முடிவான வாழ்த்துக்கள் (25-28)

5  சகோதரர்களே, இவை நடக்கப்போகிற காலங்களையும் வேளைகளையும்* பற்றி நான் உங்களுக்கு எதுவும் எழுத வேண்டியதில்லை.  ஏனென்றால், இரவில் திருடன் வருவதுபோல்+ யெகோவாவின்* நாள்+ வரும் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்.  “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்று அவர்கள் சொல்லும்போது, ஒரு கர்ப்பிணிக்குப் பிரசவ வலி வருவதுபோல் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவர்களுக்கு அழிவு வரும்.+ அவர்களால் தப்பிக்கவே முடியாது.  ஆனால் சகோதரர்களே, நீங்கள் இருட்டில் இருப்பவர்கள் அல்ல; அதனால், வெளிச்சத்தில் திடீரென்று மாட்டிக்கொள்கிற திருடர்களைப் போல் நீங்கள் அந்த நாளில் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள்.  நீங்கள் எல்லாரும் ஒளியின் பிள்ளைகளாகவும் பகலின் பிள்ளைகளாகவும் இருக்கிறீர்கள்;+ நாம் இரவுக்கோ இருட்டுக்கோ சொந்தமானவர்கள் அல்ல.+  அப்படியானால், மற்றவர்களைப் போல் நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது;+ அதற்குப் பதிலாக, விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்.+  தூங்குகிறவர்கள் இரவில் தூங்குவார்கள்; குடிவெறியர்கள் இரவில் குடிபோதையில் இருப்பார்கள்.+  ஆனால், பகலுக்குச் சொந்தமானவர்களான நாம் தெளிந்த புத்தியோடிருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புக்கான நம்பிக்கையைத் தலைக்கவசமாகவும் போட்டுக்கொள்ள வேண்டும்.+  ஏனென்றால், கடவுள் நம்மேல் கடும் கோபத்தைக் காட்டுவதற்காக நம்மைத் தேர்ந்தெடுக்காமல், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் மீட்பதற்காகத்தான் நம்மைத் தேர்ந்தெடுத்தார்.+ 10  நாம் விழித்திருந்தாலும் கண்மூடிவிட்டாலும்* கிறிஸ்துவோடு உயிர்வாழ வேண்டும்+ என்பதற்காகவே கிறிஸ்து நமக்காக இறந்தார்.+ 11  அதனால், நீங்கள் இப்போது செய்து வருகிறபடியே எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள்,* ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்.+ 12  சகோதரர்களே, உங்கள் மத்தியில் கடினமாக உழைத்து, நம் எஜமானுடைய சேவையில் உங்களை வழிநடத்தி, உங்களுக்குப் புத்திசொல்கிற சகோதரர்களுக்கு மரியாதை காட்டும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். 13  அவர்களுடைய உழைப்பின் காரணமாக அவர்களை மிக உயர்வாகக் கருதி, அவர்கள்மேல் அன்பு காட்டும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.+ ஒருவரோடொருவர் சமாதானமாகுங்கள்.+ 14  சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுதான்: ஒழுங்கீனமாக இருப்பவர்களை எச்சரியுங்கள்,*+ மனச்சோர்வால் வாடுகிறவர்களிடம்* ஆறுதலாகப் பேசுங்கள், பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுங்கள், எல்லாரிடமும் பொறுமையாக இருங்கள்.+ 15  உங்களில் யாரும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்;+ உங்கள் மத்தியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற எல்லாருக்கும் நன்மை செய்ய எப்போதும் முயற்சி செய்யுங்கள்.+ 16  எப்போதும் சந்தோஷமாக இருங்கள்.+ 17  எப்போதும் ஜெபம் செய்யுங்கள்.+ 18  எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்;+ கிறிஸ்து இயேசுவின் சீஷர்களான நீங்கள் அப்படிச் செய்ய வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம்.* 19  கடவுளுடைய சக்தி உங்களுக்குள் பற்றவைக்கிற ஆர்வத் தீயை அணைத்துவிடாதீர்கள்.+ 20  தீர்க்கதரிசனங்களை அவமதிக்காதீர்கள்.+ 21  எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லது எது என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்;+ அதையே உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். 22  எல்லா விதமான கெட்ட செயலையும் விட்டு விலகுங்கள்.+ 23  சமாதானத்தின் கடவுள் உங்களை முழுமையாகப் புனிதமாக்கட்டும். சகோதரர்களே, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது உங்கள் சிந்தை, உயிர், உடல் ஆகியவை எல்லா விதத்திலும் குறையில்லாமலும் குற்றமில்லாமலும் இருக்கும்படி பாதுகாக்கட்டும்.+ 24  உங்களை அழைக்கிறவர் நம்பகமானவர் என்பதால் நிச்சயம் அப்படிச் செய்வார். 25  சகோதரர்களே, எங்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.+ 26  சுத்தமான இதயத்தோடு எல்லா சகோதரர்களுக்கும் முத்தம் கொடுத்து வாழ்த்துங்கள். 27  இந்தக் கடிதத்தைச் சகோதரர்கள் எல்லாருக்கும் நீங்கள் வாசித்துக் காட்ட வேண்டும் என்று நம் எஜமானுடைய பெயரில் கட்டளை கொடுக்கிறேன்.+ 28  நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணை உங்கள்மேல் இருக்கட்டும்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “குறித்த நாட்களையும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “இறந்துவிட்டாலும்.”
வே.வா., “ஆறுதல்படுத்துங்கள்.”
வே.வா., “இருப்பவர்களுக்குப் புத்தி சொல்லுங்கள்.”
வே.வா., “சோர்ந்துபோய் இருப்பவர்களிடம்.”
வே.வா., “சித்தம்.”