1 ராஜாக்கள் 13:1-34

  • பெத்தேலிலுள்ள பலிபீடத்துக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் (1-10)

    • பலிபீடம் வெடித்துச் சிதறுகிறது (5)

  • கடவுளின் ஊழியர் கீழ்ப்படியாமல் போகிறார் (11-34)

13  யெகோவாவினால் அனுப்பப்பட்ட ஊழியர்*+ ஒருவர் யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்தார். அப்போது, பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்வதற்காகப் பலிபீடத்துக்குப்+ பக்கத்தில் யெரொபெயாம் நின்றுகொண்டிருந்தார்.  யெகோவாவின் கட்டளைப்படியே பலிபீடத்துக்கு விரோதமாக அந்தத் தீர்க்கதரிசி பேசினார். “பலிபீடமே, பலிபீடமே! தாவீதின் வம்சத்தில் யோசியா+ என்ற ஒருவன் பிறப்பான். ஆராதனை மேடுகளில் சேவை செய்கிற குருமார்களை, உன்மேல் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்கிற குருமார்களை, உன்மேல் பலியிடுவான். மனித எலும்புகளை உன்மேல் சுட்டெரிப்பான். இது யெகோவாவின் செய்தி”+ என்று சொன்னார்.  அன்றைக்கு அவர் ஓர் அடையாளத்தைக் கொடுத்தார். “இதோ! இந்தப் பலிபீடம் வெடித்து, அதிலிருக்கிற சாம்பல்* சிதறிவிடும். யெகோவாதான் இந்தச் செய்தியைச் சொன்னார் என்பதற்கு இதுவே அடையாளம்” என்று சொன்னார்.  பெத்தேலில் இருக்கிற பலிபீடத்துக்கு விரோதமாக உண்மைக் கடவுளின் ஊழியர் சொன்னதை யெரொபெயாம் கேட்டவுடன், பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, “அவனைப் பிடியுங்கள்!”+ என்று கட்டளையிட்டார். உடனே அவருடைய கை விறைத்துப்போனது.* அவரால் மறுபடியும் கையை மடக்க முடியவில்லை.+  அப்போது அந்தப் பலிபீடம் வெடித்து, அதிலிருந்த சாம்பல் சிதறியது. உண்மைக் கடவுளின் ஊழியர் மூலம் யெகோவா கொடுத்த அடையாளம் அப்படியே நிறைவேறியது.  அப்போது ராஜா உண்மைக் கடவுளின் ஊழியரிடம், “எனக்குக் கருணை காட்டச் சொல்லி உங்களுடைய கடவுளான யெகோவாவிடம் தயவுசெய்து கெஞ்சிக் கேளுங்கள். என்னுடைய கை குணமாக வேண்டுமென்று எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்”+ என்று சொன்னார். அவருக்குக் கருணை காட்டும்படி உண்மைக் கடவுளின் ஊழியர் யெகோவாவிடம் கெஞ்சினார். அப்போது, ராஜாவின் கை குணமாகி முன்புபோல் ஆனது.  உடனே ராஜா உண்மைக் கடவுளின் ஊழியரிடம், “என்னோடு வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கள். போகும்போது நான் உங்களுக்கு அன்பளிப்பு கொடுக்கிறேன்” என்று சொன்னார்.  அதற்கு உண்மைக் கடவுளின் ஊழியர், “உங்கள் சொத்தில் பாதியைக் கொடுத்தாலும் நான் உங்களோடு வரமாட்டேன், இந்த இடத்தில் சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ மாட்டேன்.  ஏனென்றால், ‘நீ சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது, வந்த வழியில் திரும்பிப் போகக் கூடாது’ என்று யெகோவா எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” என்று சொன்னார். 10  அதனால், பெத்தேலுக்கு வந்த வழியில் அவர் திரும்பிப் போகாமல், வேறொரு வழியாகத் திரும்பிப் போனார். 11  வயதான தீர்க்கதரிசி ஒருவர் பெத்தேலில் குடியிருந்தார்; அவருடைய மகன்கள் வீட்டுக்கு வந்து, அன்றைக்கு பெத்தேலில் உண்மைக் கடவுளின் ஊழியர் செய்தவற்றையும் ராஜாவிடம் சொன்னவற்றையும் அவரிடம் விலாவாரியாகத் தெரிவித்தார்கள். அப்போது அவர்களுடைய அப்பா, 12  “அவர் எந்த வழியாகப் போனார்?” என்று கேட்டார். யூதாவிலிருந்து வந்த உண்மைக் கடவுளின் ஊழியர் திரும்பிப் போன வழியை அவர்கள் காட்டினார்கள். 13  அப்போது அவர், “கழுதைமேல் சேணம்* வைத்துக் கொடுங்கள்” என்று தன்னுடைய மகன்களிடம் சொன்னார். அவர்கள் சேணம் வைத்துக் கொடுத்ததும் அதில் ஏறிப்போனார். 14  உண்மைக் கடவுளின் ஊழியர் போன பாதையில் அவர் போனார், கடைசியில் ஒரு பெரிய மரத்தடியில் அவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். “யூதாவிலிருந்து வந்த உண்மைக் கடவுளின் ஊழியர் நீங்கள்தானா?”+ என்று அவரிடம் கேட்டார். அதற்கு அவர், “ஆமாம்” என்று சொன்னார். 15  அப்போது அவரிடம், “என்னோடு வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கள்” என்று சொன்னார். 16  அதற்கு அந்த ஊழியர், “உங்கள் அழைப்பை ஏற்று நான் உங்களோடு வரமுடியாது, நான் இந்த ஊரில் சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. 17  ஏனென்றால், ‘நீ அங்கே சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது, வந்த வழியில் திரும்பிப் போகக் கூடாது’ என்று யெகோவா எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” என்று சொன்னார். 18  அதற்கு அவர், “உங்களைப் போல நானும் ஒரு தீர்க்கதரிசிதான். ஒரு தேவதூதர் மூலம் யெகோவா என்னிடம், ‘அவரை உன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டுவந்து உணவும் தண்ணீரும் கொடு’ என்று சொன்னார்” என்றார். (இப்படிச் சொல்லி அவரை ஏமாற்றினார்.) 19  அதனால், உணவு சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதற்காக உண்மைக் கடவுளின் ஊழியர் அவருடன் போனார். 20  அவர்கள் மேஜையில் உட்கார்ந்திருந்தபோது, அவரைத் திரும்பக் கூட்டிக்கொண்டுவந்த வயதான தீர்க்கதரிசியிடம் யெகோவா ஒரு செய்தியைச் சொன்னார். 21  அப்போது, வயதான தீர்க்கதரிசி யூதாவிலிருந்து வந்த உண்மைக் கடவுளின் ஊழியரைப் பார்த்து உரத்த குரலில், “நீ யெகோவாவின் வார்த்தையை மீறிவிட்டாய். உன் கடவுளான யெகோவா கொடுத்த கட்டளைக்கு நீ கீழ்ப்படியவில்லை. 22  ‘சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது’ என்று நான் சொல்லியிருந்த இடத்துக்குப் போய் சாப்பிட்டு தண்ணீர் குடித்தாய். அதனால், உன் உடல் உன்னுடைய முன்னோர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்படாது என்று யெகோவா சொல்கிறார்”+ என்றார். 23  உண்மைக் கடவுளின் ஊழியர் சாப்பிட்டுக் குடித்த பின்பு, அவரைக் கூட்டிக்கொண்டுவந்த வயதான தீர்க்கதரிசி அவருடைய கழுதைமேல் சேணம் வைத்துக் கொடுத்தார். 24  உண்மைக் கடவுளின் ஊழியர் அங்கிருந்து புறப்பட்டுப் போனார். ஆனால், வழியில் ஒரு சிங்கம் வந்து அவரைக் கொன்றுபோட்டது.+ சாலையில் அவருடைய உடல் கிடந்தது, பக்கத்தில் கழுதை நின்றுகொண்டிருந்தது. அந்தச் சிங்கமும் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தது. 25  சாலையில் உடல் கிடப்பதையும் அதன் பக்கத்தில் சிங்கம் நிற்பதையும் அந்த வழியாகப் போனவர்கள் பார்த்தார்கள். உடனே, வயதான தீர்க்கதரிசி குடியிருந்த நகரத்துக்கு வந்து விஷயத்தைச் சொன்னார்கள். 26  வயதான தீர்க்கதரிசி அதைக் கேள்விப்பட்டவுடன், “உண்மைக் கடவுளுடைய ஊழியரின் உடல்தான் அது. அவர் யெகோவாவின் கட்டளையை மீறிவிட்டார்.+ அதனால், யெகோவா அனுப்பிய சிங்கம் அவரை அடித்துக் கொன்றுபோட்டது. யெகோவா அவரிடம் சொன்னபடியே நடந்திருக்கிறது”+ என்று சொன்னார். 27  பின்பு தன்னுடைய மகன்களிடம், “கழுதைமேல் சேணம் வைத்துக் கொடுங்கள்” என்று சொன்னார். அவர்களும் அப்படியே செய்தார்கள். 28  அவர் புறப்பட்டுப் போய் சாலையில் கிடந்த உடலைப் பார்த்தார்; கழுதையும் சிங்கமும் அதன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தன. சிங்கம் அந்த உடலைச் சாப்பிடவும் இல்லை, கழுதையை அடித்துக் கொல்லவும் இல்லை. 29  அவர் உண்மைக் கடவுளுடைய ஊழியரின் உடலை எடுத்து கழுதைமேல் வைத்தார். துக்கம் அனுசரித்து அடக்கம் செய்வதற்காக அவருடைய உடலைத் தன்னுடைய சொந்த நகரத்துக்குக் கொண்டுவந்தார். 30  பின்பு, தன்னுடைய கல்லறையில் அந்த உடலை வைத்தார். அப்போது “ஐயோ, என் சகோதரனே!” என்று அவர்கள் அழுது புலம்பினார்கள். 31  உடலை அடக்கம் செய்த பிறகு வயதான தீர்க்கதரிசி தன்னுடைய மகன்களிடம், “நான் இறந்ததும் உண்மைக் கடவுளின் ஊழியரை அடக்கம் செய்த இடத்திலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள். அவருடைய எலும்புகளுக்குப் பக்கத்தில் என்னுடைய எலும்புகளை வையுங்கள்.+ 32  பெத்தேலில் உள்ள பலிபீடத்துக்கும் சமாரியாவின் நகரங்களிலுள்ள+ எல்லா ஆராதனை மேடுகளுக்கும்+ விரோதமாக அவர் மூலம் யெகோவா சொன்ன வார்த்தை நிச்சயம் நிறைவேறும்” என்று சொன்னார். 33  இதெல்லாம் நடந்த பிறகும் யெரொபெயாம் தன்னுடைய கெட்ட வழியைவிட்டு விலகவில்லை. லேவியராக இல்லாதவர்களை ஆராதனை மேடுகளில் குருமார்களாக நியமித்து வந்தார்.+ குருவாக வேண்டுமென்று யாராவது ஆசைப்பட்டால், “இவனும் ஆராதனை மேட்டில் குருவாக இருக்கட்டும்”+ என்று சொல்லி நியமித்துவிடுவார். 34  யெரொபெயாமின் வீட்டார் செய்த இந்தப் பாவம்தான்+ அவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழியக் காரணமானது.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “கடவுளின் மனிதர்.”
வே.வா., “பலிகளின் கொழுப்பு கலந்த சாம்பல்.”
வே.வா., “பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது.”
சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.