1 ராஜாக்கள் 16:1-34

  • பாஷாவுக்கு எதிராக யெகோவாவின் தீர்ப்பு (1-7)

  • ஏலா இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (8-14)

  • சிம்ரி இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (15-20)

  • உம்ரி இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (21-28)

  • ஆகாப் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (29-33)

  • ஈயேல் எரிகோவைத் திரும்பக் கட்டுகிறான் (34)

16  அனானியின்+ மகன் யெகூ+ மூலம் பாஷாவுக்கு விரோதமாக யெகோவா ஒரு செய்தியைச் சொன்னார்.  “தூசியில் கிடந்த உன்னை உயர்த்தி, என் மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக்கினேன்.+ நீயோ, யெரொபெயாமைப் போலவே மோசமான வழியில் நடந்தாய். என் மக்களான இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டினாய். அவர்களும் பாவம் செய்து என்னைப் புண்படுத்தினார்கள்.+  அதனால், பாஷாவையும் அவனுடைய வீட்டாரையும் அடியோடு அழிப்பேன். நேபாத்தின் மகனான யெரொபெயாமின் குடும்பத்துக்கு ஏற்பட்ட கதிதான்+ இவர்களுக்கும் ஏற்படும்.  பாஷாவின் வீட்டாரில் எவனாவது நகரத்துக்குள்ளே செத்துப்போனால் அவனை நாய்கள் தின்னும்; அவர்களில் எவனாவது நகரத்துக்கு வெளியே செத்துப்போனால் அவனை வானத்துப் பறவைகள் தின்னும்” என்று சொன்னார்.  பாஷாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள், அவருடைய வீரதீர செயல்கள் ஆகியவற்றைப் பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  பாஷா இறந்ததும்,* அவரை திர்சாவில் அடக்கம் செய்தார்கள்.+ அடுத்ததாக, அவருடைய மகன் ஏலா ராஜாவானார்.  அனானியின் மகனும் தீர்க்கதரிசியுமான யெகூ மூலம் பாஷாவுக்கும் அவருடைய வீட்டாருக்கும் விரோதமாக யெகோவா தீர்ப்பு சொல்லியிருந்தார்; ஏனென்றால், யெகோவா வெறுக்கிற எல்லா காரியங்களையும் பாஷா செய்திருந்தார்; யெரொபெயாமின் வீட்டாரைப் போலவே நடந்து கடவுளைப் புண்படுத்தியிருந்தார்; அதோடு, நாதாபை* கொன்றுபோட்டிருந்தார்.+  ஆசா ராஜா யூதாவை ஆட்சி செய்த 26-ஆம் வருஷத்தில், பாஷாவின் மகன் ஏலா திர்சாவில் ராஜாவானார். அவர் இஸ்ரவேலை இரண்டு வருஷங்கள் ஆட்சி செய்தார்.  அவருடைய பாதி ரதப் படைகளுக்குத் தலைவரான சிம்ரி அவரைக் கொன்றுபோட சதித்திட்டம் தீட்டினார். திர்சாவிலிருந்த அரண்மனை அதிகாரியான அர்சாவின் வீட்டில் ஏலா குடிபோதையில் இருந்தபோது, 10  சிம்ரி அங்கே வந்து அவரைக் கொன்றுபோட்டார்.+ ஆசா ராஜா யூதாவை ஆட்சி செய்த 27-ஆம் வருஷத்தில் ஏலாவுக்குப் பதிலாக சிம்ரி ராஜாவானார். 11  ராஜாவானதுமே, பாஷாவின் வீட்டார் எல்லாரையும் கொன்றுபோட்டார். அவருடைய சொந்தக்காரர்களிலும்* நண்பர்களிலும் ஆண்கள்* ஒருவரைக்கூட உயிரோடு விட்டுவைக்கவில்லை. 12  பாஷாவின் வீட்டாரை சிம்ரி ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டினார். இப்படி, பாஷாவுக்கு விரோதமாக யெகூ தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா சொன்ன வார்த்தை+ நிறைவேறியது. 13  பாஷாவுக்கு ஏன் இந்தக் கதி வந்ததென்றால், அவரும் அவருடைய மகன் ஏலாவும் நிறைய பாவங்கள் செய்திருந்தார்கள். அதோடு, இஸ்ரவேல் மக்களையும் பாவம் செய்யத் தூண்டியிருந்தார்கள். அதனால், இஸ்ரவேல் மக்கள் ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்கி இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைப் புண்படுத்தினார்கள்.+ 14  ஏலாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 15  ஆசா ராஜா யூதாவை ஆட்சி செய்த 27-ஆம் வருஷத்தில், சிம்ரி ராஜாவானார். அவர் திர்சாவில் ஏழு நாட்கள் ஆட்சி செய்தார். அந்தச் சமயத்தில், பெலிஸ்தியர்களுக்குச் சொந்தமான கிபெத்தோனுக்கு+ எதிராகப் போர் செய்ய இஸ்ரவேல் படைகள் முகாம்போட்டிருந்தன. 16  சிம்ரி சதித்திட்டம் போட்டு ராஜாவைக் கொன்றுவிட்ட செய்தியை முகாமிலிருந்த படைவீரர்கள் கேள்விப்பட்டார்கள். அதனால் அன்றைக்கு இஸ்ரவேலர்கள் எல்லாரும் படைத் தளபதியான உம்ரியை+ அந்த முகாமில் இஸ்ரவேலின் ராஜாவாக்கினார்கள். 17  பின்பு, உம்ரியும் அவரோடு இருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் கிபெத்தோனிலிருந்து புறப்பட்டுப் போய் திர்சாவை முற்றுகையிட்டார்கள். 18  அந்த நகரத்தை அவர்கள் கைப்பற்றிய விஷயம் சிம்ரிக்குத் தெரிந்தவுடன், அரண்மனையில் இருந்த பாதுகாப்பான கோபுரத்துக்குள் நுழைந்தார். அதற்குத் தீ வைத்துவிட்டு, அந்தத் தீயில் தானும் செத்துப்போனார்.+ 19  அவர் யெரொபெயாமைப் போலவே, யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்திருந்தார். இஸ்ரவேலர்களையும் பாவம் செய்யத் தூண்டியிருந்தார்.+ அதனால்தான், அவருக்கு இந்தக் கதி ஏற்பட்டது. 20  சிம்ரியின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள், அவர் போட்ட சதித்திட்டம் ஆகியவற்றைப் பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 21  அந்தச் சமயத்தில், இஸ்ரவேல் மக்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள். ஒரு பிரிவினர் கீனாத்தின் மகனான திப்னியை ராஜாவாக்க விரும்பி அவரை ஆதரித்தார்கள், இன்னொரு பிரிவினர் உம்ரியை ஆதரித்தார்கள். 22  ஆனால், உம்ரியின் ஆதரவாளர்கள் கீனாத்தின் மகனான திப்னியின் ஆதரவாளர்களை வீழ்த்தினார்கள்; திப்னி இறந்துபோனார், உம்ரி ராஜாவானார். 23  ஆசா ராஜா யூதாவை ஆட்சி செய்த 31-ஆம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேலின் ராஜாவானார். அவர் 12 வருஷங்கள் ஆட்சி செய்தார். அதில் ஆறு வருஷங்கள் திர்சாவில் ஆட்சி செய்தார்; 24  சேமேரிடமிருந்து இரண்டு தாலந்து* வெள்ளிக்கு சமாரியா மலையை வாங்கினார். அந்த மலையில் ஒரு நகரத்தைக் கட்டி, அந்த மலையின் உரிமையாளருடைய பெயரின்படி அதற்கு சமாரியா*+ என்று பெயர் வைத்தார். 25  யெகோவா வெறுக்கிற காரியங்களை உம்ரி செய்துவந்தார். அவருக்கு முன்பிருந்த ராஜாக்கள் எல்லாரையும்விட படுமோசமானவராக இருந்தார்.+ 26  நேபாத்தின் மகனான யெரொபெயாமின் வழியில் நடந்து, இஸ்ரவேல் மக்களைப் பாவம் செய்யத் தூண்டினார். அதனால், மக்கள் ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்கி யெகோவாவைப் புண்படுத்தினார்கள்.+ 27  உம்ரியின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள், அவருடைய வீரதீர செயல்கள் ஆகியவை இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. 28  உம்ரி இறந்ததும்,* அவரை சமாரியாவில் அடக்கம் செய்தார்கள். அடுத்ததாக, அவருடைய மகன் ஆகாப்+ ராஜாவானார். 29  ஆசா ராஜா யூதாவை ஆட்சி செய்த 38-ஆம் வருஷத்தில் உம்ரியின் மகன் ஆகாப் சமாரியாவில்+ ராஜாவானார். அவர் இஸ்ரவேலை 22 வருஷங்கள் ஆட்சி செய்தார். 30  உம்ரியின் மகனான ஆகாப் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார். அவருக்கு முன்பிருந்த ராஜாக்கள் எல்லாரையும்விட படுமோசமானவராக இருந்தார்.+ 31  நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த பாவங்களை+ இவரும் செய்தார். இது போதாதென்று, சீதோனியர்களின்+ ராஜாவாகிய ஏத்பாகாலின் மகளான யேசபேலைக்+ கல்யாணம் செய்தார், பாகாலுக்கு முன்னால் தலைவணங்கி, அதற்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்.+ 32  சமாரியாவில் பாகாலுக்கு ஒரு கோயில்*+ கட்டி, அங்கே பலிபீடத்தையும் அமைத்தார். 33  அதோடு, பூஜைக் கம்பத்தையும்*+ நிறுத்தினார். தனக்கு முன்பிருந்த இஸ்ரவேல் ராஜாக்கள் எல்லாரையும்விட படுமோசமான காரியங்களைச் செய்து இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைப் புண்படுத்தினார். 34  ஆகாபின் ஆட்சிக் காலத்தில், பெத்தேலைச் சேர்ந்த ஈயேல் என்பவன் எரிகோவைத் திரும்பக் கட்டினான். அதற்கு அஸ்திவாரம் போட்டபோது அவருடைய முதல் மகன் அபிராம் இறந்துபோனான். அதற்குக் கதவுகள் வைத்தபோது அவனுடைய கடைசி மகன் செகூப் இறந்துபோனான். நூனின் மகனான யோசுவா மூலம் யெகோவா சொன்ன வார்த்தை+ அப்போது நிறைவேறியது.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டதும்.”
அதாவது, “யெரொபெயாமின் மகன் நாதாபை.”
வே.வா., “கொலை செய்தவரைப் பழிவாங்குபவர்களிலும்.”
நே.மொ., “சுவரில் சிறுநீர் கழிக்கிறவர்கள்.” வெறுப்பைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த எபிரெய வார்த்தைகள் ஆண்களைக் குறிக்கின்றன.
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இதன் அர்த்தம், “சேமேர் குலத்துக்குச் சொந்தம்.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டதும்.”
நே.மொ., “வீடு.”