1 ராஜாக்கள் 17:1-24

  • வறட்சியைப் பற்றி எலியாவின் தீர்க்கதரிசனம் (1)

  • எலியாவுக்கு அண்டங்காக்கைகள் உணவு கொண்டுவருகின்றன (2-7)

  • சாறிபாத்தில் ஒரு விதவையை எலியா சந்திக்கிறார் (8-16)

  • விதவையின் மகன் இறந்துபோகிறான், பின்பு உயிரோடு எழுப்பப்படுகிறான் (17-24)

17  கீலேயாத்+ பிரதேசத்தைச் சேர்ந்த திஸ்பியனான எலியா*+ ஆகாபிடம் வந்து, “நான் சேவை செய்கிற இஸ்ரவேலின் கடவுளான யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* சில வருஷங்களுக்கு இந்தத் தேசத்தில் பனியோ மழையோ பெய்யாது, நான் சொன்ன பிறகுதான் பெய்யும்!”+ என்றார்.  பின்பு யெகோவா அவரிடம்,  “இங்கிருந்து புறப்பட்டு கிழக்குத் திசையில் போ. யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற கேரீத் பள்ளத்தாக்கு* பக்கத்தில் ஒளிந்துகொள்.  அங்கே இருக்கிற ஓடையிலிருந்து தண்ணீர் குடி. உனக்கு உணவு கொடுக்க அண்டங்காக்கைகளை அனுப்புவேன்”+ என்று சொன்னார்.  யெகோவா சொன்னபடி அவர் உடனே புறப்பட்டுப் போனார்; யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற கேரீத் பள்ளத்தாக்கு* பக்கத்தில் தங்கினார்.  காலையிலும் மாலையிலும் அண்டங்காக்கைகள் ரொட்டியும் இறைச்சியும் கொண்டுவந்தன. அவர் அதைச் சாப்பிட்டு, ஓடைத் தண்ணீரைக் குடித்தார்.+  அந்தத் தேசத்தில் மழையே பெய்யாததால் சில நாட்களில் அந்த ஓடை வறண்டுபோனது.+  பின்பு யெகோவா அவரிடம்,  “இங்கிருந்து புறப்பட்டு சீதோனில் இருக்கிற சாறிபாத் நகரத்துக்குப் போய் அங்கேயே தங்கியிரு. அந்த நகரத்தில் இருக்கிற ஒரு விதவை மூலம் உனக்கு உணவு கொடுப்பேன்”+ என்று சொன்னார். 10  அதனால், எலியா அங்கிருந்து புறப்பட்டு சாறிபாத் நகரத்துக்குப் போனார். அந்த நகரத்தின் நுழைவாசலுக்கு அவர் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். அவளைக் கூப்பிட்டு, “தயவுசெய்து குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவாருங்கள்”+ என்று சொன்னார். 11  அவள் தண்ணீர் கொண்டுவரப் போனபோது அவளைக் கூப்பிட்டு, “தயவுசெய்து கொஞ்சம் ரொட்டியும் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார். 12  அதற்கு அவள், “உங்களுடைய கடவுளான யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* என்னிடம் ரொட்டியே இல்லை. பெரிய ஜாடியில் ஒரு கைப்பிடி மாவும், சின்ன ஜாடியில் கொஞ்சம் எண்ணெயும்தான் இருக்கிறது.+ இப்போது கொஞ்சம் விறகு பொறுக்கிக்கொண்டிருக்கிறேன், இனிமேல்தான் எனக்கும் என் மகனுக்கும் எதையாவது சமைக்க வேண்டும். இதுதான் எங்களுக்குக் கடைசி உணவு. அதன் பின்பு, நானும் என் மகனும் சாக வேண்டியதுதான்” என்று சொன்னாள். 13  அப்போது எலியா, “கவலைப்படாதீர்கள். வீட்டுக்குப் போய் நீங்கள் சொன்னபடியே சமையுங்கள். முதலில், உங்களிடம் இருப்பதை வைத்து வட்டமான ஒரு சின்ன ரொட்டியைச் செய்து எனக்குக் கொண்டுவாருங்கள். அதன் பிறகு, உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் சமைக்கலாம். 14  ‘யெகோவா மறுபடியும் இந்தத் தேசத்தில் மழை பெய்ய வைக்கும்வரை, பெரிய ஜாடியில் இருக்கிற மாவும் குறைந்துபோகாது, சின்ன ஜாடியில் இருக்கிற எண்ணெயும் தீர்ந்துபோகாது’+ என்று இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்கிறார்” என்றார். 15  அவள் போய் எலியா சொன்னபடியே செய்தாள். அதனால், அவளுடைய குடும்பத்தாரும் எலியாவும் பல நாட்களுக்குச் சாப்பிட்டார்கள்.+ 16  எலியா மூலம் யெகோவா சொன்னபடியே, பெரிய ஜாடியில் இருந்த மாவும் குறையவில்லை, சின்ன ஜாடியில் இருந்த எண்ணெயும் தீர்ந்துபோகவில்லை. 17  பின்பு ஒருநாள் அந்தப் பெண்ணின் மகன், அதாவது அந்த வீட்டுச் சொந்தக்காரியின் மகன், நோய்வாய்ப்பட்டான். அவனுடைய உடல்நிலை ரொம்ப மோசமாகிக்கொண்டே வந்தது; கடைசியில், அவன் இறந்துபோனான்.+ 18  அப்போது அவள் எலியாவிடம், “உண்மைக் கடவுளின் ஊழியரே, நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்? நான் செய்த குற்றத்தை ஞாபகப்படுத்தி, என் மகனைச் சாகடிக்கவா வந்தீர்கள்?”+ என்று கேட்டாள். 19  எலியா அவளிடம், “உங்கள் மகனை என்னிடம் கொடுங்கள்” என்றார். அவள் கையிலிருந்து பிள்ளையை வாங்கி, தான் தங்கியிருந்த மாடி அறைக்குக் கொண்டுபோனார். அவனைத் தன்னுடைய கட்டிலில் படுக்க வைத்தார்.+ 20  பின்பு, “யெகோவாவே, என் கடவுளே,+ நான் தங்குவதற்கு இடம் கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகடித்து, அவளுக்கும் வேதனை தந்துவிட்டீர்களா?” என்று சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். 21  அதன் பின்பு, அந்தப் பிள்ளையின் மீது மூன்று தடவை படுத்து, “யெகோவாவே, என் கடவுளே, தயவுசெய்து இந்தப் பிள்ளைக்கு உயிர் கொடுங்கள்” என்று யெகோவாவிடம் கெஞ்சினார். 22  எலியா செய்த ஜெபத்தை யெகோவா கேட்டார்.+ அந்தப் பையனுக்கு உயிர் வந்தது, அவன் பிழைத்துக்கொண்டான்.+ 23  எலியா அந்தப் பிள்ளையை மாடி அறையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்து அவனுடைய அம்மாவிடம் கொடுத்தார். அப்போது எலியா, “இங்கே பாருங்கள், உங்கள் மகன் உயிரோடிருக்கிறான்”+ என்று சொன்னார். 24  அப்போது அந்தப் பெண், “நிஜமாகவே நீங்கள் கடவுள் அனுப்பிய தீர்க்கதரிசிதான்,+ உங்கள் மூலம் யெகோவா சொல்கிற வார்த்தையெல்லாம் உண்மை என்பதை இப்போது புரிந்துகொண்டேன்” என்று சொன்னாள்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “யெகோவா என் கடவுள்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கு.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கு.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”