1 ராஜாக்கள் 18:1-46

  • ஒபதியாவையும் ஆகாபையும் எலியா சந்திக்கிறார் (1-18)

  • கர்மேலில் எலியாவும் பாகால் தீர்க்கதரிசிகளும் (19-40)

    • ‘இரண்டு மனதாக இருக்கிறார்கள்’ (21)

  • மூன்றரை வருஷ வறட்சி முடிவடைகிறது (41-46)

18  சில காலம் கழித்து, அதாவது மூன்றாம் வருஷத்தில்,+ யெகோவா எலியாவிடம், “நீ புறப்பட்டு ஆகாபிடம் போ. நான் இந்த மண்ணில் மழை பெய்ய வைப்பேன்”+ என்று சொன்னார்.  அதனால், ஆகாபைச் சந்திக்க எலியா புறப்பட்டுப் போனார். அந்தச் சமயத்தில் சமாரியாவில் பஞ்சம் கடுமையாக இருந்தது.+  இதற்கிடையே, ஆகாப் தன்னுடைய அரண்மனை அதிகாரியான ஒபதியாவைக் கூப்பிட்டார். (யெகோவாமீது ஒபதியா அதிக பயபக்தி வைத்திருந்தார்,  யெகோவாவின் தீர்க்கதரிசிகளை யேசபேல்+ ஒழித்துக்கட்டிய சமயத்தில், இவர் 100 தீர்க்கதரிசிகளைப் பாதுகாத்து வந்திருந்தார். அவர்களை ஐம்பது ஐம்பது பேராகக் குகைகளில் ஒளித்து வைத்து, அவர்களுக்கு ரொட்டியும் தண்ணீரும் கொடுத்து வந்திருந்தார்.)  ஆகாப் அவரிடம், “நீ போய் தேசத்திலிருக்கிற நீரூற்றுகளையும் பள்ளத்தாக்குகளையும்* ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டு வா. ஒருவேளை, நம்முடைய குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் காப்பாற்றுவதற்குப் போதுமான புல் கிடைக்கலாம். அப்போதுதான், நம்முடைய எல்லா மிருகங்களையும் இழக்க வேண்டியிருக்காது” என்று சொன்னார்.  தேட வேண்டிய பகுதிகளை இரண்டு பேரும் தங்களுக்குள் பிரித்துக்கொண்டார்கள். பின்பு ஆகாப் ஒரு வழியில் போனார், ஒபதியா மற்றொரு வழியில் போனார்.  ஒபதியா போய்க்கொண்டிருந்தபோது, அவரைப் பார்க்க எலியா வந்தார். உடனே ஒபதியா அவரை அடையாளம் கண்டுகொண்டு, அவர் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து, “நீங்கள் என் எஜமான் எலியாதானே?”+ என்று கேட்டார்.  அதற்கு எலியா, “ஆமாம். நீ போய் உன் எஜமானிடம், ‘எலியா இங்கேதான் இருக்கிறார்’ என்று சொல்” என்றார்.  அதற்கு அவர், “இதைச் சொன்னால் ஆகாப் என்னைக் கொன்றுபோட மாட்டாரா? நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்? உங்கள் அடியேனை ஏன் அவர் கையில் சிக்க வைக்கிறீர்கள்? 10  உங்கள் கடவுளான யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* என் எஜமான் உங்களைத் தேடாத இடமே இல்லை. உங்களைக் கண்டுபிடிப்பதற்காக எல்லா தேசங்களுக்கும் ராஜ்யங்களுக்கும் ஆட்களை அனுப்பினார். ‘எலியா இங்கே இல்லை’ என்று அங்கிருந்தவர்கள் சொன்னபோது, அதைச் சத்தியம் பண்ணி சொல்லச் சொன்னார்.+ 11  இப்போது நீங்கள், ‘உன் எஜமானிடம் போய், “எலியா இங்கேதான் இருக்கிறார்”’ என்று சொல்லச் சொல்கிறீர்களே. 12  நான் இங்கிருந்து போனதும், யெகோவாவின் சக்தி உங்களை வேறொரு இடத்துக்குக் கொண்டுபோய்விடும்.+ நான் சொன்னதைக் கேட்டு ஆகாப் உங்களைப் பார்க்க வரும்போது நீங்கள் இங்கே இல்லாவிட்டால், அவர் என்னைக் கண்டிப்பாகக் கொன்றுவிடுவார். ஆனால், நான் சின்ன வயதிலிருந்தே யெகோவாவுக்குப் பயந்து நடப்பவன். 13  எஜமானே, யெகோவாவின் தீர்க்கதரிசிகளை யேசபேல் கொன்றுபோட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களில் 100 பேரைக் காப்பாற்றினேனே! யெகோவாவின் தீர்க்கதரிசிகளை ஐம்பது ஐம்பது பேராகக் குகைகளில் ஒளித்து வைத்து அவர்களுக்கு ரொட்டியும் தண்ணீரும் தந்தேனே!+ இதையெல்லாம் யாரும் உங்களிடம் சொல்லவில்லையா? 14  அப்படியிருக்க, ‘உன் எஜமானிடம் போய், “எலியா இங்கேதான் இருக்கிறார்”’ என்று சொல்லச் சொல்கிறீர்களே. அவர் என்னைக் கண்டிப்பாகக் கொன்றுவிடுவார்” என்று சொன்னார். 15  அதற்கு எலியா, “நான் சேவை செய்கிற பரலோகப் படைகளின் யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* இன்று நான் நிச்சயம் ஆகாப் முன்னால் நிற்பேன்” என்று சொன்னார். 16  அதனால் ஒபதியா அங்கிருந்து போய் ஆகாபிடம் விஷயத்தைச் சொன்னார். அப்போது, எலியாவைச் சந்திக்க ஆகாப் வந்தார். 17  எலியாவைப் பார்த்ததும், “இஸ்ரவேலர்களுக்குக் கஷ்டத்துக்குமேல் கஷ்டம் கொடுக்கிறவன் நீதானே?” என்று ஆகாப் கேட்டார். 18  அதற்கு அவர், “இஸ்ரவேலர்கள் படுகிற கஷ்டத்துக்கு நான் காரணமில்லை. நீங்களும் உங்கள் அப்பா வீட்டாரும்தான் காரணம். நீங்கள் யெகோவாவின் கட்டளைகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு பாகால்களை வணங்கியதால்தான் இவ்வளவு கஷ்டமும் வந்தது.+ 19  இப்போது இஸ்ரவேலர்கள் எல்லாரையும் கர்மேல் மலையில்+ என் முன்னால் வரச் சொல்லுங்கள். யேசபேலின் மேஜையில் சாப்பிடுகிற 450 பாகால் தீர்க்கதரிசிகளையும் பூஜைக் கம்பத்தை*+ வழிபடுகிற 400 தீர்க்கதரிசிகளையும் வரச்சொல்லுங்கள்” என்று சொன்னார். 20  அதனால், இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் ஆகாப் செய்தி அனுப்பினார். அவர்களையும் அந்தத் தீர்க்கதரிசிகளையும் கர்மேல் மலைக்கு வரவழைத்தார். 21  பின்பு எலியா அங்கே கூடிவந்திருந்த மக்கள் எல்லாரையும் பார்த்து, “நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இரண்டு மனதாக இருப்பீர்கள்?*+ யெகோவாதான் உண்மையான கடவுள் என்றால் அவரை வணங்குங்கள்;*+ பாகால்தான் உண்மையான கடவுள் என்றால் அவனை வணங்குங்கள்!”* என்று சொன்னார். ஆனால், மக்கள் அவருக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள். 22  பின்பு எலியா அவர்களிடம், “யெகோவாவின் தீர்க்கதரிசிகளில் நான் மட்டும்தான் இப்போது உயிரோடு இருக்கிறேன்.+ ஆனால் பாகாலின் தீர்க்கதரிசிகள் 450 பேர் இருக்கிறார்கள். 23  அவர்களிடம் இரண்டு இளம் காளைகளைக் கொண்டுவரச் சொல்லுங்கள். அவற்றில் ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுத்து, துண்டு துண்டாக வெட்டி விறகுகள்மேல் வைக்கட்டும். ஆனால், அவற்றுக்கு நெருப்பு வைக்கக் கூடாது. நானும் இன்னொரு காளையைத் துண்டு துண்டாக வெட்டி விறகுகள்மேல் வைப்பேன். ஆனால், நெருப்பு வைக்க மாட்டேன். 24  நீங்கள் உங்களுடைய கடவுளின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.+ நான் யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வேன். எந்தக் கடவுள் நெருப்பை அனுப்பி பதில் தருகிறாரோ அவர்தான் உண்மையான கடவுள்”+ என்று சொன்னார். அதற்கு மக்கள் எல்லாரும், “சரி, அப்படியே செய்யலாம்” என்று சொன்னார்கள். 25  அப்போது எலியா பாகால் தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். அதனால் முதலில் நீங்கள் போய் இளம் காளை ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். பலிகொடுக்க அதைத் தயார் செய்து, உங்களுடைய கடவுள் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். ஆனால், நெருப்பு வைக்கக் கூடாது” என்று சொன்னார். 26  அதனால், அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த இளம் காளையைப் பலிகொடுக்கத் தயார் செய்தார்கள். பின்பு காலையிலிருந்து மத்தியானம்வரை, “பாகாலே! பதில் தா” என்று வேண்டிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் எந்தச் சத்தமும் வரவில்லை, யாரும் பதில் தரவுமில்லை.+ தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி அவர்கள் குதித்துக் குதித்து ஆடினார்கள். 27  மத்தியானத்தில் எலியா அவர்களைப் பார்த்து, “தொண்டை கிழிய கத்துங்கள்! அவன் ஒரு கடவுள்தானே!+ ஏதாவது ஆழ்ந்த யோசனையில் இருப்பான். இல்லை, கழிப்பிடத்துக்குப் போயிருப்பான்,* ஒருவேளை தூங்கினாலும் தூங்கியிருப்பான். யாராவது அவனை எழுப்பினால்தான் உண்டு!” என்று கேலி செய்தார். 28  அவர்கள் தொண்டை கிழிய கத்திக்கொண்டிருந்தார்கள்; தங்கள் வழக்கப்படி, குத்துவாள்களையும் பெரிய ஈட்டிகளையும் வைத்து உடம்பைக் கீறிக்கொண்டிருந்தார்கள்; அதனால், அவர்களுடைய உடம்பு முழுவதும் இரத்தம் கொட்டியது. 29  மத்தியானம்முதல் மாலையில் உணவுக் காணிக்கை செலுத்தும் நேரம்வரை வெறித்தனமாய்க் கத்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் எந்தச் சத்தமும் வரவில்லை, யாரும் பதில் தரவுமில்லை, அவர்களுடைய வேண்டுதலை யாரும் கேட்கவுமில்லை.+ 30  கடைசியில் எலியா அந்த மக்கள் எல்லாரையும் பார்த்து, “இங்கே வாருங்கள்” என்று சொன்னார். மக்கள் எல்லாரும் அவரிடம் போனார்கள். இடித்துப் போடப்பட்டிருந்த யெகோவாவின் பலிபீடத்தை அவர் சரிசெய்தார்.+ 31  யாக்கோபின் மகன்கள் மூலம் உருவான கோத்திரங்களின் எண்ணிக்கைப்படி, எலியா 12 கற்களை எடுத்தார். அந்த யாக்கோபிடம்தான், “உன்னுடைய பெயர் இஸ்ரவேல்”+ என்று யெகோவா சொல்லியிருந்தார். 32  அந்த 12 கற்களை வைத்து யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்ப்பதற்காக எலியா ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.+ பின்பு, இரண்டு சியா அளவு* விதை விதைக்கும் அளவுக்கு இடம்விட்டு, அந்தப் பலிபீடத்தைச் சுற்றி பெரிய வாய்க்காலை வெட்டினார். 33  பலிபீடத்தின் மீது விறகுகளை அடுக்கினார், இளம் காளையைத் துண்டு துண்டாக வெட்டி அவற்றின்மேல் வைத்தார்.+ பின்பு, “நான்கு பெரிய குடங்களில் தண்ணீர் கொண்டுவந்து இந்தத் தகன பலிமீதும் விறகுகள்மீதும் ஊற்றுங்கள்” என்று சொன்னார். 34  அதன் பின்பு, “மறுபடியும் ஊற்றுங்கள்” என்று சொன்னார். அவர்கள் அப்படியே செய்தார்கள். பின்பு, “மூன்றாவது தடவையும் ஊற்றுங்கள்” என்று சொன்னார். அவர்கள் மூன்றாவது தடவையும் ஊற்றினார்கள். 35  பலிபீடத்தைச் சுற்றிலும் தண்ணீர் ஓடியது. எலியா அந்த வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினார். 36  மாலையில் உணவுக் காணிக்கை செலுத்துகிற நேரத்தில்,+ பலிபீடத்துக்குப் பக்கத்தில் எலியா தீர்க்கதரிசி வந்து, “யெகோவாவே, ஆபிரகாம்,+ ஈசாக்கு,+ இஸ்ரவேல் ஆகியோரின் தேவனே, நீங்கள்தான் இஸ்ரவேலின் கடவுள் என்பதையும், நான் உங்களுடைய ஊழியன் என்பதையும், நீங்கள் சொல்லித்தான் இவை எல்லாவற்றையும் செய்தேன்+ என்பதையும் இன்று எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள். 37  யெகோவாவே, எனக்குப் பதில் கொடுங்கள்! நீங்கள்தான் உண்மையான கடவுள் என்பதையும், நீங்கள்தான் அவர்களுடைய இதயத்தை உங்கள் பக்கம் திருப்புகிறீர்கள் என்பதையும் இந்த மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், யெகோவாவே எனக்குப் பதில் கொடுங்கள்”+ என்று ஜெபம் செய்தார். 38  உடனடியாக, யெகோவா அனுப்பிய நெருப்பு வானத்திலிருந்து வந்து, தகன பலியையும் விறகுகளையும் கற்களையும் மண்ணையும் சுட்டெரித்தது.+ வாய்க்காலில் இருந்த தண்ணீரையும் உறிஞ்சியது.+ 39  மக்கள் எல்லாரும் அதைப் பார்த்தவுடன் சாஷ்டாங்கமாய் விழுந்து, “யெகோவாதான் உண்மையான கடவுள்! யெகோவாதான் உண்மையான கடவுள்” என்று சொன்னார்கள். 40  அப்போது எலியா அவர்களிடம், “பாகால் தீர்க்கதரிசிகளைப் பிடியுங்கள்! ஒருவனைக்கூட விடாதீர்கள்!” என்று சொன்னார். உடனே அவர்களைப் பிடித்தார்கள். எலியா அவர்கள் எல்லாரையும் கீசோன் நீரோடைக்கு*+ கொண்டுபோய் வெட்டிப்போட்டார்.+ 41  அப்போது எலியா ஆகாபைப் பார்த்து, “நீங்கள் போய் சாப்பிட்டுக் குடியுங்கள். கனமழை பெய்கிற சத்தம் கேட்கிறது”+ என்று சொன்னார். 42  அதனால், ஆகாப் சாப்பிடவும் குடிக்கவும் போனார். எலியாவோ கர்மேல் மலை உச்சிக்குப் போய் அங்கே தரையில் மண்டிபோட்டு, குனிந்து தன் தலையை முழங்கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டார்.+ 43  பின்பு தன் ஊழியனிடம், “தயவுசெய்து ஏறிப்போய் கடல் பக்கமாய்ப் பார்” என்று சொன்னார். அவனும் ஏறிப்போய்ப் பார்த்துவிட்டு வந்து, “ஒன்றுமே இல்லை” என்று சொன்னான். இப்படி ஏழு தடவை அவனை அனுப்பி, “போய்ப் பார்” என்று சொன்னார். 44  ஏழாவது தடவை அந்த ஊழியன் வந்து, “அதோ, கையளவுக்குச் சிறிய மேகம் ஒன்று கடலில் இருந்து மேலே வருகிறது” என்று சொன்னான். உடனே அவர், “நீ போய் ஆகாபிடம், ‘ரதத்தைத் தயார்படுத்தி புறப்படுங்கள். இல்லையென்றால், பலத்த மழையில் மாட்டிக்கொள்வீர்கள்’ என்று சொல்” என்றார். 45  இதற்கிடையே, வானத்தில் கார்மேகங்கள் சூழ்ந்தன. பலத்த காற்று வீசியது, மழையும் பயங்கரமாகக் கொட்டியது.+ ஆகாப் தன்னுடைய ரதத்தில் யெஸ்ரயேலுக்குப்+ போய்க்கொண்டிருந்தார். 46  எலியாவுக்கு யெகோவா விசேஷ பலத்தைக் கொடுத்ததால்,* அவர் தன்னுடைய அங்கியை இடுப்பில் இழுத்துக் கட்டிக்கொண்டு ஆகாபுக்கு முன்னால் ஓடி யெஸ்ரயேலை அடைந்தார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குகளையும்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
நே.மொ., “இரண்டு கருத்துகளுக்கு நடுவே நொண்டி நொண்டி நடப்பீர்கள்?”
வே.வா., “பின்பற்றுங்கள்.”
வே.வா., “பின்பற்றுங்கள்.”
அல்லது, “பயணம் போயிருப்பான்.”
ஒரு சியா என்பது 7.33 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “காட்டாற்றுப் பள்ளத்தாக்குக்கு.”
நே.மொ., “யெகோவாவின் கை எலியாவின்மேல் இருந்ததால்.”