1 ராஜாக்கள் 20:1-43

  • ஆகாபுக்கு எதிராக சீரியர்களின் போர் (1-12)

  • சீரியர்களை ஆகாப் தோற்கடிக்கிறார் (13-34)

  • ஆகாபுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் (35-43)

20  சீரியாவின்+ ராஜாவான பெனாதாத்+ தன்னுடைய முழு படையையும் திரட்டிக்கொண்டு சமாரியாவை எதிர்த்துப் போர் செய்ய வந்தான். தன்னோடு 32 ராஜாக்களையும் அவர்களுடைய குதிரைகளையும் ரதங்களையும் கொண்டுவந்தான்; அவன் சமாரியாவை+ முற்றுகையிட்டு,+ அதற்கு எதிராகப் போர் செய்தான்.  அப்போது தன்னுடைய தூதுவர்களை நகரத்தில் இருந்த இஸ்ரவேலின் ராஜாவான ஆகாபிடம்+ அனுப்பி,  “உன்னுடைய தங்கமும் வெள்ளியும் எனக்குச் சொந்தம். உன்னுடைய அழகிய மனைவிகளும் அருமையான மகன்களும் எனக்குச் சொந்தம் என்று பெனாதாத் சொல்கிறார்” என்று சொல்லச் சொன்னான்.  அதற்கு இஸ்ரவேலின் ராஜா, “என் எஜமானே, ராஜாவே, நீங்கள் சொன்னபடியே செய்கிறேன். நான் உங்கள் ஊழியன். என்னிடம் இருக்கிற எல்லாமே உங்களுக்குத்தான் சொந்தம்”+ என்று சொல்லி அனுப்பினார்.  மறுபடியும் அந்தத் தூதுவர்கள் ஆகாபிடம் வந்து, “பெனாதாத் சொல்வது என்னவென்றால், ‘உன்னுடைய தங்கத்தையும் வெள்ளியையும், மனைவிகளையும் மகன்களையும் நீ எனக்குத் தந்துவிட வேண்டும்’ என்று உனக்குச் சொல்லி அனுப்பியிருந்தேன்.  ஆனால், நாளைக்கு இதே நேரம் நான் என்னுடைய ஊழியர்களை அனுப்புவேன். அவர்கள் உன் அரண்மனையிலும் உன் ஊழியர்களின் மாளிகைகளிலும் நன்றாகத் தேடிப் பார்த்து, விலைமதிப்புமிக்க எல்லா பொருள்களையும் அள்ளிக்கொண்டு வந்துவிடுவார்கள்” என்று சொன்னார்கள்.  அதைக் கேட்டதும் இஸ்ரவேலின் ராஜா தன்னுடைய தேசத்திலுள்ள பெரியோர்கள்* எல்லாரையும் வரவழைத்து, “தயவுசெய்து நான் சொல்வதைக் கவனியுங்கள். இவன் நமக்குக் கஷ்டம் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறான். ஏற்கெனவே, என்னுடைய மனைவிகளையும் மகன்களையும் வெள்ளியையும் தங்கத்தையும் கேட்டான். நானும் ஒத்துக்கொண்டேன்” என்று சொன்னார்.  அதற்கு பெரியோர்கள் எல்லாரும் மக்கள் எல்லாரும் அவரிடம், “அவன் சொல்கிறபடி செய்யாதீர்கள், எதற்கும் ஒத்துக்கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள்.  அதனால் அவர் பெனாதாத்தின் தூதுவர்களிடம், “‘நீங்கள் முதலில் கேட்டதையெல்லாம் கொடுக்க அடியேன் தயாராக இருக்கிறேன். ஆனால், இப்போது நீங்கள் சொல்வதுபோல் செய்ய முடியாது’ என்று ராஜாவாகிய என் எஜமானிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று சொன்னார். அவர்களும் போய் பெனாதாத்திடம் இதைச் சொன்னார்கள். 10  அதற்கு பெனாதாத், “என்னுடைய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கைப்பிடி மண்கூட கிடைக்காதளவுக்கு சமாரியாவைத் தரைமட்டமாக்குவேன். அப்படிச் செய்யாவிட்டால் தெய்வங்கள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும்” என்று சொல்லி அனுப்பினான். 11  அப்போது இஸ்ரவேலின் ராஜா, “போரே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் போரில் ஜெயித்த மாதிரி பெருமையடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்”+ என்றார். 12  தூதுவர்கள் போய் இதை பெனாதாத்திடம் சொன்ன சமயத்தில் அவனும் மற்ற ராஜாக்களும் தங்களுடைய கூடாரங்களில் மது குடித்துக்கொண்டிருந்தார்கள். தூதுவன் சொன்ன விஷயத்தைக் கேட்டவுடன், “போருக்குத் தயாராகுங்கள்!” என்று பெனாதாத் கட்டளையிட்டான். அதனால், அவர்கள் அந்த நகரத்தைத் தாக்குவதற்குத் தயாரானார்கள். 13  அப்போது, தீர்க்கதரிசி ஒருவர் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச்+ சந்தித்து, “நீ இந்த மாபெரும் படையைப் பார்த்தாயா? இதைத் தோற்கடிக்க இன்று நான் உனக்கு உதவி செய்வேன். அப்போது, நான் யெகோவா என்பதை நீ தெரிந்துகொள்வாய் என்று யெகோவா சொல்கிறார்”+ என்றார். 14  அதற்கு ஆகாப், “யார் மூலம் வெற்றி கிடைக்கும்?” என்று கேட்டார். அதற்கு அவர், “மாகாணங்களின் தலைவர்களுடைய ஊழியர்கள் மூலம் என்று யெகோவா சொல்கிறார்” என்றார். அப்போது ஆகாப், “யார் முதலில் போரை ஆரம்பிக்க வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்தத் தீர்க்கதரிசி, “நீங்கள்தான்” என்று சொன்னார். 15  அப்போது, மாகாணங்களின் தலைவர்களுடைய ஊழியர்கள் எத்தனை பேர் என ஆகாப் கணக்கெடுத்தார்; அவர்கள் மொத்தம் 232 பேர் இருந்தார்கள். அதன் பிறகு, இஸ்ரவேல் வீரர்களைக் கணக்கெடுத்தார்; அவர்கள் மொத்தம் 7,000 பேர் இருந்தார்கள். 16  மத்தியான வேளையில் அவர்கள் புறப்பட்டுப் போனபோது, பெனாதாத் தனக்கு உதவியாக வந்த 32 ராஜாக்களுடன் கூடாரங்களில் போதை தலைக்கேற குடித்துக்கொண்டிருந்தான். 17  மாகாணங்களின் தலைவர்களுடைய ஊழியர்கள்தான் முதலில் நகரத்தைவிட்டு வெளியே வந்தார்கள். என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ள உடனடியாக பெனாதாத் தன்னுடைய ஆட்களை அனுப்பினான். அவர்கள் பார்த்து வந்து, “சமாரியாவிலிருந்து ஆட்கள் வெளியே வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். 18  அதற்கு அவன், “அவர்கள் சமாதானம் பண்ணுவதற்காக வந்திருந்தாலும் சரி, போருக்காக வந்திருந்தாலும் சரி, அவர்களை உயிரோடு பிடித்துக்கொண்டு வாருங்கள்” என்று சொன்னான். 19  ஆனால், மாகாணங்களின் தலைவர்களுடைய ஊழியர்களும் அவர்களுக்குப் பின்னால் திரண்டிருந்த படைவீரர்களும் நகரத்தைவிட்டு வெளியே வந்தபோது, 20  ஒவ்வொருவரும் தங்களை எதிர்த்து வந்தவர்களை வெட்டி வீழ்த்தினார்கள். அப்போது, சீரியர்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.+ அவர்களை இஸ்ரவேலர்கள் துரத்திக்கொண்டு போனார்கள். ஆனால், சீரியாவின் ராஜா பெனாதாத்தும் அவனுடைய குதிரைவீரர்கள் சிலரும் குதிரைகளில் ஏறித் தப்பித்தார்கள். 21  இஸ்ரவேலின் ராஜா நகரத்தைவிட்டு வெளியே வந்து குதிரைகளிலும் ரதங்களிலும் இருந்த வீரர்களை வீழ்த்தினார்.* அன்றைக்கு சீரியர்களைப் படுதோல்வி அடைய வைத்தார். 22  பிற்பாடு அந்தத் தீர்க்கதரிசி+ இஸ்ரவேலின் ராஜாவிடம் வந்து, “அடுத்த வருஷத்தின்* ஆரம்பத்தில் சீரியாவின் ராஜா உங்களுக்கு எதிராகப் போர் செய்வதற்கு வருவான்.+ அதனால், நீங்கள் போய் உங்களுடைய படையை வலுப்படுத்துங்கள்.+ என்ன செய்யலாம் என்பதை இப்போதே திட்டமிடுங்கள்” என்று சொன்னார். 23  சீரியா ராஜாவின் ஊழியர்கள் அவனிடம், “இஸ்ரவேலர்களின் கடவுள் மலைகளின் கடவுள். அதனால்தான் அவர்கள் நம்மைத் தோற்கடித்துவிட்டார்கள். ஆனால் சமவெளியில் போர் செய்தால் நாம்தான் ஜெயிப்போம். 24  அதோடு, எல்லா ராஜாக்களையும் நீக்கிவிட்டு+ அவர்களுக்குப் பதிலாக ஆளுநர்களைப் படைத் தலைவர்களாக நியமியுங்கள். 25  நீங்கள் இழந்துபோன அதே அளவு வீரர்களையும் குதிரைகளையும் ரதங்களையும் ஒன்றுதிரட்டுங்கள். அவர்களை எதிர்த்து சமவெளியில் போர் செய்தால் கண்டிப்பாக நாம் ஜெயித்துவிடலாம்” என்று சொன்னார்கள். அவனும் அவர்கள் சொன்னபடியே செய்தான். 26  அடுத்த வருஷத்தின்* ஆரம்பத்தில், பெனாதாத் சீரியர்களைத் திரட்டிக்கொண்டு இஸ்ரவேலர்களோடு போர் செய்ய ஆப்பெக்கிற்குப்+ போனான். 27  இஸ்ரவேல் வீரர்களும் தேவையான பொருள்களோடு படைதிரண்டு, சீரியர்களை எதிர்த்துப் போர் செய்யப் போனார்கள். சீரியர்களின் படைக்கு முன்னால் இஸ்ரவேலர்களின் படை இரண்டு சின்னஞ்சிறிய ஆட்டு மந்தையைப் போல் இருந்தது. சீரியர்களின் படையோ அந்த இடம் முழுவதும் பரவியிருந்தது.+ 28  பின்பு இஸ்ரவேலின் ராஜாவிடம் உண்மைக் கடவுளின் ஊழியர் வந்து, “‘யெகோவா மலைகளின் கடவுள்; சமவெளிகளின் கடவுள் அல்ல’ என்று சீரியர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்த மாபெரும் படையைத் தோற்கடிக்க நான் உனக்கு உதவி செய்வேன்.+ அப்போது, நான் யெகோவா என்று நீ நிச்சயம் தெரிந்துகொள்வாய்+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார். 29  ஏழு நாட்களுக்கு இரண்டு படைகளும் எதிரெதிராக முகாம்போட்டிருந்தன, ஏழாவது நாள் போர் ஆரம்பித்தது. இஸ்ரவேல் வீரர்கள் சீரியர்களின் காலாட்படையைச் சேர்ந்த 1,00,000 பேரை ஒரே நாளில் வீழ்த்தினார்கள். 30  மிச்சமிருந்த 27,000 சீரியர்கள் ஆப்பெக்+ நகரத்துக்குள் ஓடிப்போனார்கள். ஆனால், அவர்கள்மீது மதில் இடிந்து விழுந்தது. பெனாதாத்தும் தப்பித்து ஓடினான். நகரத்துக்குள் போய் அங்கிருந்த வீட்டின் உள்ளறையில் ஒளிந்துகொண்டான். 31  அப்போது அவனுடைய ஊழியர்கள், “இஸ்ரவேலின் ராஜாக்கள் எல்லாரும் ரொம்ப இரக்கமுள்ளவர்கள்* என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால், நாங்கள் எல்லாரும் இடுப்பில் துக்கத் துணியை* கட்டிக்கொண்டு, தலையில் கயிற்றைச் சுற்றிக்கொண்டு இஸ்ரவேலின் ராஜாவிடம் போகிறோம். ஒருவேளை, அவர் உங்களுக்கு உயிர்ப்பிச்சை தரலாம்”+ என்று சொன்னார்கள். 32  அதனால், அவர்கள் துக்கத் துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு தலையில் கயிற்றைச் சுற்றிக்கொண்டு இஸ்ரவேலின் ராஜாவிடம் வந்தார்கள். அவரிடம், “‘எனக்கு உயிர்ப்பிச்சை கொடுங்கள்’ என்று உங்களுடைய ஊழியன் பெனாதாத் கேட்கிறார்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? அவர் என் சகோதரன்” என்று சொன்னார். 33  அவர்கள் இதை ஒரு நல்ல அறிகுறியாக எடுத்துக்கொண்டு, “பெனாதாத் உங்கள் சகோதரன்தான்” என்று அவர் சொன்னதையே அவரிடம் திருப்பிச் சொன்னார்கள். அப்போது ராஜா, “நீங்கள் போய் அவரைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று சொன்னார். பின்பு பெனாதாத் வெளியே வந்தபோது, அவனைத் தன்னுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டார். 34  அப்போது பெனாதாத், “உங்களுடைய அப்பாவிடமிருந்து என் அப்பா கைப்பற்றிய நகரங்களை நான் திருப்பித் தந்துவிடுகிறேன். என்னுடைய அப்பா சமாரியாவில் கடைவீதிகளை அமைத்ததுபோல் நீங்களும் தமஸ்குவில் அமைத்துக்கொள்ளலாம்” என்று சொன்னான். அதற்கு ஆகாப், “நீங்கள் என்னோடு இந்த ஒப்பந்தம் செய்ததால் நான் உங்களை விட்டுவிடுகிறேன்” என்று சொன்னார். அதன்படியே, அவனோடு ஒப்பந்தம் செய்துகொண்டு அவனை அனுப்பிவிட்டார். 35  அந்தச் சமயத்தில், யெகோவாவுடைய கட்டளைப்படி தீர்க்கதரிசிகளின் மகன்களில்*+ ஒருவர் இன்னொருவரிடம், “தயவுசெய்து என்னை அடி” என்று சொன்னார். ஆனால், அவர் அடிக்க மறுத்துவிட்டார். 36  அதற்கு அவர், “நீ யெகோவாவின் பேச்சைக் கேட்காததால், இங்கிருந்து போனவுடன் ஒரு சிங்கம் உன்னைக் கொன்றுபோடும்” என்று சொன்னார். அதேபோல், அவர் அங்கிருந்து போனதும் ஒரு சிங்கம் வந்து அவரைக் கொன்றுபோட்டது. 37  பின்பு அந்தத் தீர்க்கதரிசி வேறொரு ஆளைப் பார்த்து, “தயவுசெய்து என்னை அடி” என்று சொன்னார். அவர் சொன்னபடியே அந்த ஆள் அவரை அடித்துக் காயப்படுத்தினான். 38  பின்பு, ராஜா வரும் வழியில் அந்தத் தீர்க்கதரிசி காத்திருந்தார். தான் யார் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க கண்கள்மீது கட்டுப்போட்டுக்கொண்டார். 39  ராஜா அந்த வழியாகப் போனபோது ராஜாவைச் சத்தமாகக் கூப்பிட்டு, “போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த இடத்துக்கு அடியேன் போயிருந்தேன். அங்கே ஒருவன் இன்னொருவனைக் கொண்டுவந்து, ‘இவனைப் பத்திரமாகப் பார்த்துக்கொள். இவன் தப்பித்துவிட்டால், இவனுக்குப் பதிலாக உன் உயிரைத் தர வேண்டும்;+ இல்லையென்றால் ஒரு தாலந்து* வெள்ளியைத் தர வேண்டும்’ என்று சொன்னான். 40  ஆனால் நான் வேலை மும்முரத்தில் இருந்தபோது, அவன் தப்பித்துவிட்டான்” என்று சொன்னார். அதற்கு இஸ்ரவேலின் ராஜா, “உனக்குக் கொடுக்க வேண்டிய தீர்ப்பை உன் வாயாலேயே நீ சொல்லிவிட்டாய்” என்று சொன்னார். 41  உடனே அந்தத் தீர்க்கதரிசி கண்களுக்குப் போட்டிருந்த கட்டை வேகமாய் அவிழ்த்தார். அப்போது, அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதை ராஜா தெரிந்துகொண்டார்.+ 42  அந்தத் தீர்க்கதரிசி அவரிடம், “கொல்லச் சொல்லி நான் ஒருவனை உன் கையில் ஒப்படைத்தேன். ஆனால், அவனை நீ தப்பிக்க விட்டுவிட்டாய்.+ அதனால் அவனுக்குப் பதிலாக நீ சாவாய்,+ அவனுடைய மக்களுக்குப் பதிலாக உன்னுடைய மக்கள் சாவார்கள்+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார். 43  அதைக் கேட்டதும் இஸ்ரவேலின் ராஜா முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு, சமாரியாவிலிருந்த+ தன் வீட்டுக்குச் சோகமாகப் போனார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்கள்.”
வே.வா., “வெட்டிக் கொன்றார்.”
அதாவது, “அடுத்த வசந்த காலத்தின்.”
அதாவது, “அடுத்த வசந்த காலத்தின்.”
வே.வா., “மாறாத அன்புள்ளவர்கள்.”
‘தீர்க்கதரிசிகளின் மகன்கள்,’ பயிற்சி பெறுகிற தீர்க்கதரிசிகளின் குழுவை அல்லது தீர்க்கதரிசிகளின் சங்கத்தைக் குறிக்கலாம்.
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.