1 ராஜாக்கள் 21:1-29

  • நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தின் மீது ஆகாப் ஆசைப்படுகிறார் (1-4)

  • சதித்திட்டம் போட்டு நாபோத்தை யேசபேல் கொல்கிறாள் (5-16)

  • ஆகாபுக்கு எதிராக எலியாவின் செய்தி (17-26)

  • ஆகாப் தாழ்மையாக நடக்கிறார் (27-29)

21  இதற்குப் பிறகு, யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்தின் திராட்சைத் தோட்டம் சம்பந்தமாக ஒரு சம்பவம் நடந்தது. அந்தத் தோட்டம் யெஸ்ரயேலில்,+ சமாரியாவின் ராஜா ஆகாபின் அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்தது.  ஒருநாள் ஆகாப் நாபோத்திடம், “உன்னுடைய திராட்சைத் தோட்டம் என் அரண்மனைக்குப் பக்கத்தில் இருப்பதால், அதை எனக்குக் கொடுத்துவிடு. அதை நான் காய்கறித் தோட்டமாக்கப்போகிறேன். அதற்குப் பதிலாக வேறொரு நல்ல திராட்சைத் தோட்டத்தைத் தருகிறேன். வேண்டுமென்றால், பணமாகவும் கொடுத்துவிடுகிறேன்” என்று சொன்னார்.  ஆனால் நாபோத், “பூர்வீகச் சொத்தை விற்கக் கூடாது என்று யெகோவா கட்டளையிட்டிருக்கிறார். அதனால், அதை உங்களுக்கு விற்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது”+ என்று சொன்னார்.  ‘என்னுடைய பூர்வீகச் சொத்தை உங்களிடம் விற்க மாட்டேன்’ என்று யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத் சொன்னதால், ஆகாப் தன்னுடைய முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு வீட்டுக்குச் சோகமாக வந்தார். தன்னுடைய முகத்தைத் திருப்பிக்கொண்டு, தன் கட்டிலில் படுத்துக்கொண்டார், சாப்பிடவும் மறுத்துவிட்டார்.  அப்போது அவருடைய மனைவி யேசபேல்+ வந்து, “சாப்பாடுகூட சாப்பிடாமல் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.  அதற்கு ஆகாப், “யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்திடம் அவனுடைய திராட்சைத் தோட்டத்தை விலைக்குக் கேட்டேன். பணம் வேண்டாமென்றால், அதற்குப் பதிலாக வேறொரு திராட்சைத் தோட்டத்தைத் தருவதாகச் சொன்னேன். ஆனால், அவன் முடியாதென்று சொல்லிவிட்டான்” என்று சொன்னார்.  அதற்கு அவருடைய மனைவி யேசபேல், “நீங்கள்தானே இஸ்ரவேலின் ராஜா? எழுந்து வந்து சாப்பிடுங்கள். சந்தோஷமாக இருங்கள். யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நான் வாங்கித் தருகிறேன்”+ என்று சொன்னாள்.  அதனால், ஆகாபின் பெயரில் கடிதங்கள் எழுதி அவருடைய முத்திரையைக் குத்தி,+ நாபோத்தின் நகரத்தில் இருந்த பெரியோர்களுக்கும்*+ பிரமுகர்களுக்கும் அவற்றை அனுப்பி வைத்தாள்.  அந்தக் கடிதங்களில், “எல்லாரையும் விரதம் இருக்கச் சொல்லி அறிவியுங்கள். மக்களை ஒன்றுகூட்டி அவர்களுக்கு முன்னால் நாபோத்தை உட்கார வையுங்கள். 10  ஒன்றுக்கும் உதவாத இரண்டு பேரை அவன் முன்னால் உட்கார வைத்து, ‘கடவுளையும் ராஜாவையும் நீ சபித்துப் பேசினாய்’+ என்று பொய் சாட்சி சொல்லச் சொல்லுங்கள்.+ பின்பு, நாபோத்தை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொல்லுங்கள்”+ என்று எழுதியிருந்தாள். 11  யேசபேல் கடிதத்தில் எழுதி அனுப்பியபடியே, நாபோத்தின் நகரத்தில் வாழ்ந்த பெரியோர்களும் பிரமுகர்களும் செய்தார்கள். 12  மக்கள் எல்லாரையும் விரதம் இருக்கச் சொல்லி அறிவித்து, அவர்கள் முன்னால் நாபோத்தை உட்கார வைத்தார்கள். 13  அப்போது, ஒன்றுக்கும் உதவாத இரண்டு பேர் நாபோத்தின் முன்னால் வந்து உட்கார்ந்து, “கடவுளையும் ராஜாவையும் நாபோத் சபித்துப் பேசினான்!”+ என்று பொய் சாட்சி சொன்னார்கள். அதன் பின்பு, அவரை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொன்றார்கள்.+ 14  பின்பு, “நாபோத் கல்லெறிந்து கொல்லப்பட்டான்”+ என்று யேசபேலுக்குச் செய்தி அனுப்பினார்கள். 15  நாபோத் கல்லெறிந்து கொல்லப்பட்ட விஷயம் யேசபேலுக்குத் தெரியவந்ததும் அவள் ஆகாபிடம், “யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத் உங்களுக்கு விற்க மாட்டேன் என்று சொன்னானே, அந்தத் திராட்சைத் தோட்டத்தை இப்போது நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.+ அவன் உயிரோடு இல்லை, செத்துவிட்டான்” என்று சொன்னாள். 16  யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத் இறந்துபோன விஷயத்தை ஆகாப் கேட்டவுடனே, நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள எழுந்து போனார். 17  அப்போது திஸ்பியனான எலியாவிடம்+ யெகோவா, 18  “நீ புறப்பட்டு, சமாரியாவை ஆட்சி செய்கிற ஆகாப் ராஜாவிடம்+ போ. அவன் இப்போது நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தில் இருக்கிறான். அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்காக அங்கே போயிருக்கிறான். 19  நீ அவனைப் பார்த்து, ‘ஒருவனைக் கொன்றதும் இல்லாமல்+ அவன் சொத்தையும் எடுத்துக்கொண்டாயா?’+ என்று யெகோவா கேட்கிறார் என்று சொல். ‘நாபோத்தின் இரத்தத்தை நாய்கள் நக்கிய அதே இடத்தில் உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும்’+ என்று யெகோவா சொல்கிறார் என்றும் சொல்” என்றார். 20  ஆகாப் எலியாவைப் பார்த்து, “எதிரியே,+ என்னைக் கண்டுபிடித்து இங்கேயும் வந்துவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு எலியா, “ஆமாம், கண்டுபிடித்துவிட்டேன். கடவுள் சொல்வது என்னவென்றால், ‘யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தே தீருவேன் என்று உறுதியாக இருக்கிறாயே.+ 21  அதனால் உனக்கு முடிவுகட்டுவேன், உன் வம்சத்தை அடியோடு அழிப்பேன்; ஆகாபின் வீட்டிலிருக்கிற எல்லா ஆண்களையும்,* ஆதரவற்றவர்களையும் அற்பமானவர்களையும்கூட, ஒழித்துக்கட்டுவேன்.+ 22  நீ என் கோபத்தைக் கிளறிவிட்டாய், இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிவிட்டாய். அதனால், நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வம்சத்துக்கும்+ அகியாவின் மகன் பாஷாவின் வம்சத்துக்கும்+ ஏற்பட்ட அதே கதிதான் உன் வம்சத்துக்கும் ஏற்படும். 23  யெஸ்ரயேலில் உள்ள நிலத்தில் யேசபேலின் உடலை நாய்கள் தின்னும்+ என்றும் யெகோவா சொல்கிறார். 24  அதோடு, ஆகாபின் வீட்டாரில் எவனாவது நகரத்துக்குள்ளே செத்துப்போனால் அவனை நாய்கள் தின்னும்; அவர்களில் எவனாவது நகரத்துக்கு வெளியே செத்துப்போனால் அவனை வானத்துப் பறவைகள் தின்னும்.+ 25  உன் மனைவி யேசபேலின்+ பேச்சைக் கேட்டு, யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தே தீருவேன் என்று உறுதியாக இருந்தாய். சொல்லப்போனால், வேறெந்த ராஜாவும் உன்னைப் போல மோசமாக நடந்துகொள்ளவில்லை.+ 26  இஸ்ரவேலர்களுக்கு முன்னால் யெகோவா விரட்டியடித்த+ எமோரியர்களைப் போலவே அருவருப்பான* சிலைகளை வணங்கி, மிகவும் கேவலமாய் நடந்துகொண்டாய்’ என்று சொல்கிறார்” என்றார். 27  இதைக் கேட்டவுடன், ஆகாப் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டு துக்கத் துணியை* போட்டுக்கொண்டார்; பல நாட்கள் சாப்பிடாமல், துக்கத் துணிமீது படுத்துக்கிடந்தார், ரொம்பச் சோகமாக இருந்தார். 28  அப்போது திஸ்பியனான எலியாவிடம் யெகோவா, 29  “நான் சொன்னதைக் கேட்டு ஆகாப் இப்போது தாழ்மையாக நடப்பதைப் பார்த்தாயா?+ அவன் என் முன்னால் தாழ்மையாக நடப்பதால், நான் சொன்ன தண்டனையை அவனுடைய வாழ்நாளில் கொண்டுவர மாட்டேன். அவனுடைய மகனின் வாழ்நாளில் கொண்டுவருவேன்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களுக்கும்.”
நே.மொ., “சுவரில் சிறுநீர் கழிக்கிற எவரையும்.” வெறுப்பைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த எபிரெய வார்த்தைகள் ஆண்களைக் குறிக்கின்றன.
இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.