கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம் 1:1-24

  • வாழ்த்துக்கள் (1, 2)

  • எல்லா சோதனைகளிலும் கடவுள் ஆறுதல் தருகிறார் (3-11)

  • பவுலின் பயணத் திட்டத்தில் மாற்றம் (12-24)

1  கடவுளுடைய விருப்பத்தின்படி* கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கிற பவுல், சகோதரரான தீமோத்தேயுவோடு+ சேர்ந்து, கொரிந்துவில் இருக்கிற கடவுளுடைய சபைக்கும் அகாயா+ முழுவதிலும் இருக்கிற பரிசுத்தவான்கள் எல்லாருக்கும் எழுதுவது:  பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.  நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கடவுளாகவும் தகப்பனாகவும்+ இருக்கிறவருக்குப் புகழ் சேரட்டும். அவர்தான் கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்.+ எல்லா விதமான ஆறுதலின் கடவுள்.+  நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும்* அவர் நமக்கு ஆறுதல்* தருகிறார்.+ அவரிடமிருந்து நமக்கு ஆறுதல் கிடைப்பதால்+ எப்பேர்ப்பட்ட சோதனையில்* இருப்பவர்களுக்கும் நம்மால் ஆறுதல் தர முடிகிறது.+  கிறிஸ்துவுக்காக நாம் அதிகமதிகமாகக் கஷ்டங்களை அனுபவிப்பதுபோல்+ கிறிஸ்துவின் மூலம் நமக்கு அதிகமதிகமாக ஆறுதலும் கிடைக்கிறது.  எங்களுக்குச் சோதனைகள்* வந்தால், உங்களுக்கு ஆறுதலும் மீட்பும் கிடைக்கும். எங்களுக்கு ஆறுதல் கிடைத்தால், உங்களுக்கும் ஆறுதல் கிடைக்கும். அந்த ஆறுதல், நாங்கள் படுகிற அதே கஷ்டங்களை நீங்களும் சகித்துக்கொள்ள உங்களுக்கு உதவி செய்யும்.  அதனால், எங்களுடைய கஷ்டங்களில் நீங்கள் பங்கெடுப்பதுபோல் எங்களுடைய ஆறுதலிலும் பங்கெடுப்பீர்கள்+ என்பதை அறிந்து உங்களைக் குறித்து உறுதியான நம்பிக்கையோடு இருக்கிறோம்.  சகோதரர்களே, ஆசிய மாகாணத்தில் எங்களுக்கு வந்த சோதனையைப்+ பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம். அங்கே எங்கள் சக்திக்கு மிஞ்சிய பயங்கர சோதனை வந்தது; பிழைப்போம் என்ற நம்பிக்கையே போய்விட்டது.+  சொல்லப்போனால், மரண தண்டனை கொடுக்கப்பட்டதைப் போல உணர்ந்தோம். நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கை வைக்காமல், இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிற கடவுள்மேல் நம்பிக்கை வைப்பதற்காகத்தான் அப்படிப்பட்ட சோதனை வந்தது.+ 10  உயிருக்கு ஆபத்தான அந்தச் சூழ்நிலையிலிருந்து அவர் எங்களைக் காப்பாற்றினார், எதிர்காலத்திலும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.+ 11  எங்களுக்காக மன்றாடுவதன் மூலம் நீங்களும்கூட உதவி செய்யலாம்.+ ஏனென்றால், எங்களுக்காக நிறைய பேர் மன்றாடும்போது,+ எங்களுக்கு உதவி கிடைக்கும். இதனால், இன்னும் நிறைய பேர் எங்கள் சார்பாகக் கடவுளுக்கு நன்றி சொல்வார்கள். 12  உலகத்தில், முக்கியமாக உங்கள் மத்தியில், நாங்கள் மனித ஞானத்தைச் சார்ந்திருக்காமல்,+ கடவுளுடைய அளவற்ற கருணையைச் சார்ந்திருந்து, பரிசுத்தத்தோடும் அவர் தருகிற நேர்மையோடும் நடந்தோமென்று எங்கள் மனசாட்சி சாட்சி கொடுக்கிறது. இதற்காகப் பெருமைப்படுகிறோம். 13  உங்களால் நன்றாக வாசிக்க முடிந்தவற்றையும்* புரிந்துகொள்ள முடிந்தவற்றையும் தவிர வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை. இனிமேலும் அவற்றை முழுமையாக* புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். 14  இப்போது உங்களில் சிலர் புரிந்துகொண்டபடி, நாங்கள் உங்களுடைய பெருமைக்குரியவர்களாக இருக்கிறோம். அதேபோல், நம் எஜமானாகிய இயேசுவின் நாளில் நீங்களும் எங்களுடைய பெருமைக்குரியவர்களாக இருப்பீர்கள். 15  இந்த நம்பிக்கையுடன்தான் உங்களை முதலில் வந்து சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். இதன் மூலம், இரண்டு தடவை உங்களைச் சந்தோஷப்படுத்த* நினைத்திருந்தேன். 16  மக்கெதோனியாவுக்குப் போகும் வழியிலும் அங்கிருந்து திரும்பி வரும் வழியிலும் உங்களைச் சந்திக்க வேண்டுமென்றும், நீங்கள் என்னை யூதேயாவுக்கு வழியனுப்ப வேண்டுமென்றும் யோசித்திருந்தேன்.+ 17  நான் இப்படி யோசித்த பின்பு பொறுப்பில்லாமல் அதை மாற்றிவிட்டதாக நினைக்கிறீர்களா? அல்லது, என் விருப்பப்படி திட்டமிட்டு, “ஆம், ஆம்” என்று சொன்னதை “இல்லை, இல்லை” என்று பிறகு மாற்றிவிடுவதாக நினைக்கிறீர்களா? 18  நாங்கள் எதையுமே ‘ஆம்’ என்றும் அதே சமயத்தில் ‘இல்லை’ என்றும் சொல்வதில்லை. கடவுள் சொல்வது எப்படி நம்பகமானதோ அப்படியே நாங்கள் சொல்வதும் நம்பகமானதுதான். 19  கடவுளுடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி நானும் சில்வானுவும்* தீமோத்தேயுவும்+ உங்களுக்குப் பிரசங்கித்தோம். அவர், ‘ஆம்’ என்றும் அதே சமயத்தில் ‘இல்லை’ என்றும் ஆகிவிடவில்லை. அவருடைய விஷயத்தில் ‘ஆம்’ என்பது ‘ஆம்’ என்றே ஆகியிருக்கிறது. 20  கடவுளுடைய வாக்குறுதிகள் எத்தனை இருந்தாலும், அவை அத்தனையும் அவர் மூலமாக ‘ஆம்’ என்றே ஆகியிருக்கின்றன.+ அதனால்தான், கடவுளுக்கு மகிமை சேர்ப்பதற்காக அவர் வழியாக “ஆமென்”*+ என்று சொல்கிறோம். 21  ஆனால், நீங்களும் நாங்களும் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்திருக்கிறவரும் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறவரும்* கடவுள்தான்.+ 22  அதோடு, நமக்குக் கிடைக்கப்போகும் ஆஸ்திக்கு உத்தரவாதமாக* தன்னுடைய சக்தியை+ நம் இதயங்களில் பொழிந்து, நம்மேல் தன்னுடைய முத்திரையைப்+ பதித்திருக்கிறவரும் அவர்தான். 23  என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்: உங்களை மேலும் வருத்தப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே இதுவரை நான் கொரிந்துவுக்கு வரவில்லை; கடவுள்தான் இதற்குச் சாட்சி. 24  உங்களுடைய விசுவாசத்துக்கு நாங்கள் அதிகாரிகளாக இருக்கிறோம் என்று நான் சொல்லவில்லை.+ உங்களுடைய சந்தோஷத்துக்காக உங்கள் சக வேலையாட்களாகவே இருக்கிறோம். ஏனென்றால், உங்களுடைய விசுவாசத்தினால்தான் நீங்கள் உறுதியாக நிற்கிறீர்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “சித்தத்தின்படி.”
வே.வா., “உற்சாகம்.”
வே.வா., “உபத்திரவத்தில்.”
வே.வா., “உபத்திரவங்களிலும்.”
வே.வா., “உபத்திரவங்கள்.”
அல்லது, “ஏற்கெனவே உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவற்றையும்.”
நே.மொ., “கடைசிவரை.”
அல்லது, “உங்களுக்குப் பலனளிக்க.”
சீலா என்றும் அழைக்கப்படுகிறார்.
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”
வே.வா., “அபிஷேகம் செய்திருக்கிறவரும்.”
வே.வா., “முன்பணமாக.”