கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம் 12:1-21

  • பவுல் பார்த்த தரிசனங்கள் (1-7அ)

  • பவுலின் “உடலில் ஒரு முள்” (7ஆ-10)

  • “அருமை” அப்போஸ்தலர்களைவிட தாழ்ந்தவன் அல்ல (11-13)

  • கொரிந்தியர்கள்மீது பவுலுக்கு அக்கறை (14-21)

12  நான் பெருமை பேச வேண்டும். அதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்றாலும், நம் எஜமானிடமிருந்து வந்த அற்புத தரிசனங்களையும்+ செய்திகளையும்+ பற்றி இப்போது சொல்கிறேன்.  கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற ஒரு மனிதனை எனக்குத் தெரியும். 14 வருஷங்களுக்கு முன்பு மூன்றாம் பரலோகத்துக்கு அவன் எடுத்துக்கொள்ளப்பட்டான். அவன் உடலோடு எடுத்துக்கொள்ளப்பட்டானா இல்லையா என்று எனக்குத் தெரியாது, கடவுளுக்குத்தான் தெரியும்.  ஆம், பூஞ்சோலைக்குள் எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த மனிதனை எனக்குத் தெரியும். ஆனால், அவன் உடலோடு எடுத்துக்கொள்ளப்பட்டானா இல்லையா என்று எனக்குத் தெரியாது, கடவுளுக்குத்தான் தெரியும்.  எந்த மனிதனும் உச்சரிக்கவோ பேசவோ கூடாத வார்த்தைகளை அந்தப் பூஞ்சோலைக்குள் அவன் கேட்டான்.  அந்த மனிதனைப் பற்றி நான் பெருமையாகப் பேசுவேன். என்னைப் பொறுத்தவரை, என் பலவீனங்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் பெருமை பேச மாட்டேன்.  அப்படியே நான் பெருமை பேச விரும்பினாலும், புத்தியில்லாதவனாக இருக்க மாட்டேன். ஏனென்றால், நான் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும். ஆனால், என்னிடம் பார்ப்பதையும் கேட்பதையும்விட உயர்வாக என்னைப் பற்றி யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகப் பெருமை பேசுவதைத் தவிர்க்கிறேன்.  எனக்கு இப்படிப்பட்ட அதிசயமான விஷயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதற்காக யாரும் என்னை அளவுக்குமீறி புகழக் கூடாது. நான் அளவுக்குமீறி பெருமைப்பட்டுக்கொள்ளாதபடி என் உடலில் ஒரு முள் குத்திக்கொண்டிருக்கிறது.+ அது என்னை அறைந்துகொண்டே* இருக்க சாத்தான் அனுப்பிய தூதனைப் போல இருக்கிறது.  அதை என்னிடமிருந்து எடுத்துவிடும்படி மூன்று தடவை நம் எஜமானிடம் கெஞ்சிக் கேட்டேன்.  அவரோ, “என் அளவற்ற கருணை உனக்குப் போதும். நீ பலவீனமாக இருக்கும்போது என்னுடைய பலம் உனக்கு முழுமையாகக் கிடைக்கும்”+ என்று சொன்னார். அதனால், கிறிஸ்துவின் வல்லமை எனக்கு ஒரு கூடாரம்போல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் மிகுந்த சந்தோஷத்தோடு என் பலவீனங்களைப் பற்றிப் பெருமை பேசுவேன். 10  எனக்கு ஏற்படுகிற பலவீனங்கள், அவமானங்கள், நெருக்கடிகள், துன்புறுத்தல்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை கிறிஸ்துவுக்காகச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நான் பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருக்கிறேன்.+ 11  நான் புத்தியில்லாமல் பேசிவிட்டேன். நீங்கள்தான் என்னை அப்படிப் பேச வைத்துவிட்டீர்கள். உண்மையில், நீங்கள் எனக்கு ஆதரவாகப் பேசியிருக்க வேண்டும். உங்களுடைய பார்வையில் நான் அற்பமானவனாக இருந்தாலும், உங்கள் “அருமை” அப்போஸ்தலர்களைவிட நான் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் அல்ல.+ 12  சொல்லப்போனால், நான் உங்களிடம் காட்டிய அதிகமான சகிப்புத்தன்மையும்,+ நான் செய்த அடையாளங்களும் அற்புதங்களும் வல்லமைமிக்க செயல்களும்+ நான் ஒரு அப்போஸ்தலன் என்பதற்கு அத்தாட்சிகளாக இருக்கின்றன. 13  மற்ற சபைகளைவிட நீங்கள் எந்த விதத்தில் குறைந்துபோய்விட்டீர்கள்? உங்களுக்குப் பாரமாக இல்லாததுதான்+ நான் வைத்த ஒரே குறை. இந்த அநியாயத்துக்காக என்னைத் தயவுசெய்து மன்னித்துவிடுங்கள். 14  இதோ, மூன்றாவது தடவையாக நான் உங்களிடம் வருவதற்குத் தயாராயிருக்கிறேன். ஆனால், நான் உங்களுக்குப் பாரமாக இருக்க மாட்டேன். ஏனென்றால், உங்களுடைய சொத்துகள் எனக்கு வேண்டாம்,+ நீங்கள்தான் எனக்கு வேண்டும். பெற்றோருக்குப் பிள்ளைகள்+ சேர்த்து வைக்க வேண்டியதில்லை, பெற்றோர்தான் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டும். 15  அதனால், என்னிடம் இருப்பவற்றை உங்களுக்காகச் சந்தோஷமாய்ச் செலவு செய்வேன், என்னையே முழுவதும் உங்களுக்காக அர்ப்பணிப்பேன்.+ நான் உங்கள்மேல் காட்டும் அன்பு இவ்வளவு அதிகமாக இருக்கும்போது, நீங்கள் என்மேல் காட்டும் அன்பு குறைவாக இருக்கலாமா? 16  எப்படியிருந்தாலும், நான் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை.+ ஆனாலும், நான் “சூழ்ச்சிக்காரனாக” இருந்தேன் என்றும், “தந்திரமாக” உங்களைப் பிடித்தேன் என்றும் சொல்கிறீர்கள். 17  நான் உங்களிடம் அனுப்பியவர்களில் யார் மூலமாவது ஆதாயம் தேடினேனா? 18  உங்களை வந்து சந்திக்கும்படி தீத்துவைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன், அவரோடு ஒரு சகோதரரையும் அனுப்பி வைத்தேன். தீத்து உங்களிடம் எந்த விதத்திலாவது ஆதாயம் தேடினாரா?+ நாங்கள் ஒரே சிந்தையோடு இருக்கவில்லையா? ஒரே விதமாக நடந்துகொள்ளவில்லையா? 19  நாங்கள் எங்களுக்காக வாதாடுகிறோம் என்றா இதுவரை நினைத்துக்கொண்டிருந்தீர்கள்? கிறிஸ்துவின் சீஷர்களாகக் கடவுளுக்கு முன்னால்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அன்புக் கண்மணிகளே, உங்களைப் பலப்படுத்துவதற்காகத்தான் எல்லாவற்றையும் செய்து வருகிறோம். 20  ஆனால் நான் அங்கே வரும்போது, நான் விரும்புகிறபடி நீங்கள் இல்லாமலும் நீங்கள் விரும்புகிறபடி நான் இல்லாமலும் இருக்க நேரிடுமோ என்று பயப்படுகிறேன். உங்கள் மத்தியில் சண்டை சச்சரவு, பொறாமை, கோபாவேசம், கருத்துவேறுபாடு, புண்படுத்தும் பேச்சு, கிசுகிசுப்பு,* தலைக்கனம், கலகம் ஆகியவை இருக்குமோ என்று பயப்படுகிறேன். 21  நான் மறுபடியும் அங்கே வரும்போது, என் கடவுள் உங்கள் முன்னால் என்னைத் தலைகுனிய வைத்துவிடுவாரோ என்று பயப்படுகிறேன். அதுமட்டுமல்ல, முன்பு பாவம் செய்துவந்த நிறைய பேர் அசுத்தமான நடத்தை, பாலியல் முறைகேடு,* வெட்கங்கெட்ட நடத்தை* ஆகியவற்றைவிட்டு மனம் திருந்தாமல் இருப்பதைப் பார்த்து நான் துக்கப்பட வேண்டியிருக்குமோ என்றும் பயப்படுகிறேன்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அடித்துக்கொண்டே.”
வே.வா., “வீண் பேச்சு.”